குட்டிச் சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

ஒரு நடிகர் வெள்ள நிவாரண நிதியா 10 லட்ச ரூபாய் தந்தாலும் குற்றம் சொல்றாங்க, அவரே 10 கோடி ரூபாய் கொடுத்தாலும் குற்றம் சொல்றாங்க. இதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு, நல்ல அரசியல்வாதிகள் கூட ‘நீ சந்தோஷப்படறதுக்காக ஒரு நடிகருக்கு பணம் தர்றே; அவர் அதை உன் இஷ்டப்படி செலவு செய்ய எப்படி நிர்ப்பந்திக்கலாம்’னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுறளவு போயிடுச்சு. நியாயம்தானே, திரையில தோன்றி நம்மை மூணு மணி நேரம் எல்லா கவலைகளையும் மறந்து சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறவங்கள நாம கோடீஸ்வரங்களா மாத்தினாலும், அதுக்காக கொடுத்த காசை திருப்பிக் கேட்கலாமா? அதான், நம்மாளுங்க வேறென்ன வகையில நமக்கு உதவி செய்ய முடியும்னு யோசிச்சுப் பார்த்தேன்.

‘லிங்கா’ படத்துல மதுரை மாவட்டத்து மக்களுக்காக தனது சொத்தை வித்து அணை கட்டிய ரஜினி, ‘லிங்கா 2’ல காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியாவுல ஒரு அணையும், ‘லிங்கா 3’ல சென்னைக்கு மிக அருகில் - வெள்ள நீர் உள்ளே புகாதவாறு ஒரு அணையும் கட்டிக் கொடுத்தா ரொம்ப உதவிகரமா இருக்கும்.

தன்னார்வலர்கள் கொண்டு வர்ற நிவாரணப் பொருட்களை வழிப்பறி செய்யும் நபர்களை ஒடுக்க, பிறக்கும்போதே போலீஸ் யூனிபார்மோட பிறந்த நம்ம ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தலைமையிலும், வளரும் ஆக்‌ஷன் கிங் விஷால் தலைமையிலும் ஒரு போலீஸ் டீமை அமைத்து பாதுகாப்பு தரலாம். இதையும் மீறி யாராவது தொந்தரவோ தொல்லையோ கொடுத்தா, அவங்கள வெளுத்து வாங்க நம்ம துரைசிங்கம் சூர்யா இருக்காரு.

‘ரெட்’ படத்துல ‘எதுவா இருந்தாலும் மழை நிக்கிறதுக்குள்ள நடந்தாகணும்’னு கெடு கொடுத்து ஒரு காரியத்த முடிப்பாரு தல. சீரமைப்புப் பணிகளை அவரிடம் கொடுத்தா, மழை நிக்கிறதுக்குள்ள விரைந்து பணிகளை முடிக்க ஏற்பாடு பண்ணிடுவாரு. டவுன்களுக்கும் நகரங்களுக்கும் இந்த நேரத்துல தண்ணீர் விநியோகம் முறையாக செய்யறத விஜய்கிட்ட தந்தா, ‘கத்தி’ படத்துல கத்துக்கிட்ட விஷயங்களை வச்சு, எல்லா வீட்டுக்கும் தண்ணி சப்ளையை பாத்துக்குவாரு. கூடவே, செம்பரம்பாக்கம், புழல், வீராணம் போன்ற ஏரிகளையும் ஏரிகளில் இருந்து தண்ணீர் வரும் குழாய்களையும் கண்காணிக்கற பணியையும் கவனிப்பாரு.



தனுஷ்கிட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை தரலாம். ஏற்கனவே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துல, ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் தன்னார்வலர்களைத் திரட்டி அபார்ட்மென்ட் கட்டிய அனுபவம் அவருக்கு உண்டு.  நீர் உள்ள வராம தடுப்பு சுவர் கட்டுற வேலையையும், அதை பராமரிக்கும் வேலையையும் ‘பருத்திவீரன்’ கார்த்திகிட்ட தரலாம். ‘மெட்ராஸ்’ படத்துல சுவரை பத்திரமா பராமரிச்ச பக்குவம் கைகொடுக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களை கமல்கூட திருவண்ணாமலை, தென்காசி டூர் அனுப்பிடலாம். ‘‘ஆகஸ்ட் 2ம் தேதி நாங்க ஊர்லயே இல்லயே, தென்காசி தியானத்துக்கு போயிருந்தோம். 3ம் தேதி சாயந்திரம்தான் வந்தோம்’’னு அடிக்கடி ‘பாபநாசம்’ படத்துல சொல்ற மாதிரி அவர் டயலாக் சொன்னா, மக்கள் மனசுல தாங்கள் பாதிக்கப்பட்டது மறந்து, அவர்கள் வரும்போது சீரமைக்கும் பணிகளும் முடிந்திருக்கும்.

வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் நம் நண்பர்களும் முகம் தெரியா அன்பர்களும் நிவாரணப் பணிகளில் இருந்தபோது கேட்ட டயலாக்குகளில் சில...

* என் வீட்டுல ஹாலே மூழ்கிற அளவுக்கு வெள்ளம் வந்திடுச்சு; எதிர்ல இருக்கிற அபார்ட்மென்ட்ல கார் பார்க்கிங் நிரம்ப வெள்ளத்தண்ணி வந்திடுச்சு; ஏன், எங்க தெரு கடைசில இருக்கிற குடிசையே மூழ்கிப் போறளவுக்கு தண்ணி வந்திடுச்சு. ஆனா எங்க ஏரியாவுக்கு எங்களோட கவுன்சிலரும் எம்.எல்.ஏவும் மட்டும் வரல.

* எல்லாம் நல்லா இருக்கிற நாள்ல எல்லாம், வீட்டுல ஏற்கனவே இருந்த பொருட்களான மிக்சி, கிரைண்டர், ஃபேன் இலவசமா கொடுத்தாங்க. தண்ணீரிலும் கண்ணீரிலும் மக்கள் மூழ்கிக் கிடக்கும் இந்த நேரத்துல அதையெல்லாம் கொடுத்தாங்கன்னா உதவியா இருக்கும். செய்வாங்களா, அவங்க செய்வாங்களா?

* தமிழ்நாடு முழுக்க ஒரு ரூபா இட்லி போடுறாங்களே, அதையெல்லாம் கொண்டுவந்து பாதி எங்களுக்குத் தந்திருக்கலாம்.

* நல்லவேளை, நிவாரணத்திற்கு கொண்டுபோன பொருட்கள் மேல மட்டும் ஸ்டிக்கர் ஒட்டுனாங்க. புளிச்சோறு, தக்காளிச்சோறு, தயிர் சோறு, இட்லி, சப்பாத்தின்னு கொண்டு போன உணவுப்பொருட்கள் மேலயெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டல!

* வெளியூர் நகராட்சி, மாநகராட்சில இருந்து வந்து துப்புரவுத் தொழிலாளர்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சுத்தம் செய்யறாங்க. அம்மா உணவக ஊழியர்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வந்து உணவு சமைத்துப் போட்டிருக்கலாம்.



* வெளிய 25/- ரூபாய்க்கு தர தண்ணி பாட்டில, பத்து ரூபாய்க்கு தரேன்னு சொல்றீங்களே... அப்படியே அதை பாதி விலைக்குத் தந்தா பல பேருக்கு உதவியிருக்கும். தண்ணிக்குள்ளயே நாங்க இருந்தும், ஒரு வாய் குடிக்க தண்ணி இல்லாம ரெண்டு நாள் கஷ்டப்பட்டோம்.

* அம்மா வரணும்னு கோயில் கோயிலா வேண்டி, எட்டு மாசத்துக்கு ஊரு உலகமெல்லாம் அன்னதானமும் பண்டபாத்திரமும் கொடுத்தவங்க எல்லாம் அதை இப்ப கொடுக்காம போயிட்டாங்களே! அந்த முகம் தெரியா 39 நபர்களை திட்டாதீங்க. பாவம், அவங்க எந்த ரோட்டுல உட்கார்ந்துக்கிட்டு ஸ்டிக்கர் ஒட்டுறாங்களோ?

இந்த வாட்ஸ்அப் வந்தாலும் வந்துச்சு... நம்மாளுங்க வதந்தி பரப்பறதுக்கு நல்ல வாய்ப்பா போச்சு. நேத்து வாட்ஸ்அப்ல புரட்சியாளர் சே குவாரா சொன்னதா ஒரு செய்தி, ‘நல்ல நண்பனை ஆபத்தில் அறி, நல்ல ஆட்சியாளனை அழிவு காலத்தில் அறி’. இதுல பாதி நம்ம தமிழ்ப் பழமொழி. இதே போல வேற அர்த்தம் வர்ற மாதிரி ஒரு திருக்குறளும் உண்டு. சீஸனுக்கு ஏத்த மாதிரி ஏதாவது எழுதிட்டு, அதுக்கு வேற ஒரு ஃபேமஸான ஆளோட பேரை போட்டு விடுறது ஒரு பொழப்பா போச்சு! இப்படியே போச்சுன்னா, இனி கீழ்க்கண்ட மாதிரியெல்லாம் பொன்மொழிகள் வரும்.

நாம் இருவர் நமக்கு ஒருவர்
- சே குவாரா

ஒருவனுக்கு ஒருத்தி - மார்ட்டின் லூதர் கிங்

மழை நீர் உயிர் நீர் - வின்ஸ்டன் சர்ச்சில்

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் - கார்ல் மார்க்ஸ்

பெண்கள் நாட்டின் கண்கள் - எலிசபெத் டெய்லர்

கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது - அன்னை தெரசா

எங்கள் ஆட்டோ பிரசவத்துக்கு இலவசம் - மைக்கேல் ஷூமேக்கர்

வேட்டியும் துண்டுமாய் வந்தால் காந்தி, நைட்டியும் துண்டுமாய் வந்தால் சாந்தி - அலெக்ஸாண்டர்

அருகம்புல் ஆங்காங்கு முளைக்கும், ஆலமரம் ஒரே இடத்திலே இருக்கும் - அரிஸ்டாட்டில்

உலகம் ரொம்ப பெருசு, ஆனா நம்ம உள்ளூர் ரொம்ப சிறுசு - புத்தர்

தாத்தாவைப் பார்த்தால் தாகம் தீரும், ஆத்தாவைப் பார்த்தால் கோவம் தீரும் - போப் ஆண்டவர்

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ - ஷேக்ஸ்பியர்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது, லேட் நைட் அடித்த கட்டிங் போதை இறங்காது - ஒபாமா

குரைக்கும் நாய் கடிக்காது, குரைக்கும்போது வாயில் எதுவும் இருக்காது - ஜான் எஃப்.கென்னடி

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும், வீட்டுக்காரர் வந்தா விருந்து போடணும் - அவ்வையார்

வெட்டி வேருக்கு வாசமில்லாமல் போகலாம், ஆனா கட்டு சோறுக்கு வாசமில்லாமல் போகாது - லெனின்

தயிரு புளிக்க ரெண்டு நாள், தரமான புளிச்சோறு ஆறு நாள் - சாணக்கியர்

பசிக்கிற வயத்தை காயப் போடாதே, படுக்காத நேரத்தில் பாயைப் போடாதே - பொலிவியா பழமொழி

கூவம் நதி கழுவி இருந்தாலும், மொத்த மெட்ராஸும் முழுகி இருக்கலாமா - நெப்போலியன்