உறுமீன்
விமர்சனம்
போன ஜென்ம துரோகப் படலத்தில் விட்டுப் போனவனை இந்த ஜென்மத்திலும் பின் தொடர்ந்து பழிக்குப் பழி வாங்கும் கதையே ‘உறுமீன்’. பழி வாங்கும் உணர்ச்சியை மனசு ஏற்கும் விதத்தில் சொல்லியதற்காகவே அறிமுக இயக்குநர் சக்திவேல் பெருமாள் சாமிக்கு வெரிகுட் போடலாம். இந்தக் கதையை திக்... திடுக்... திரைப்படம் ஆக்கியதில் அவருக்கே பெரும்பங்கு!
கொஞ்சமும் எதிர்பார்க்காத சரித்திரப் பின்னணியில் ஆரம்பமாகிறது கதை. கூட இருந்தே நின்று கொல்லும் கலையரசனால் பிடிக்கப்பட்டு தூக்கு மேடைக்கு அனுப்பப்படுகிறார் பாபி சிம்ஹா. கடைசி மணித்துளியில் தப்பி ஓடும் பாபி சிம்ஹா அவரின் எல்லா கதையையும் எழுதி வைத்துவிட்டுப் போக, அந்தப் புத்தகம் இந்தப் பிறவியிலும் பாபி சிம்ஹாவின் கைக்கே வந்து சேர்கிறது. பகை, குரோதம், துரோகம், காதல் என எல்லாவற்றையும் ஜன்னல் வழிக் காட்சிகள் மாதிரி நகர்த்துகிறது திரைக்கதை.
இடுங்கிய கண்களில் கூட மிடுக்கு. ‘சுர்’ என மூக்கு மேலே எகிறும் கோபம், என்னதான் நடக்கிறது என புரியாமல் திடுக்கிடும் பதற்றம், பழைய பகை புரிந்து தெரிந்த பிறகு அதார் உதார் நடிப்பு எனப் பின்னுகிறார் பாபி. ஆரம்ப பதவி தொடங்கி படிப்படியாக ஆக்ஷனில் காய்ச்சி எடுப்பது வரைக்கும் சிம்ஹா இப்போது சிங்கம்!
கார்ப்பரேட் வகையிலான அசத்தல் உடை, கண்களில் மட்டும் குரூரம் எனப் பின்னி எடுக்கிறார் ‘மெட்ராஸ்’ கலைஞன் கலையரசன். டீக்கடை வைத்ததில் தொடங்கி, அதட்டி மிரட்டி, உருட்டி கடன் தொகை வசூல் செய்வது வரையில் எகிறி எதற்கும் தயாராக நடிப்பதில் அசராமல் இருக்கிறார் கலையரசன்.
படத்தில் சட்டென்று தெரியாத படிக்கு புதைந்திருக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு அரசியல் இன்னும் ஆச்சரியம். இந்தியாவுக்கு வந்து விடப் போவது மாதிரி போக்குக் காட்டும் வால்மார்ட் அரசியலைக் கூட விட்டு வைக்கவில்லை இயக்குநர். மதம், அரசியல் என ஒவ்வொன்றிலும் கை வைக்கும் சூரத்தனமும் புரிபடுகிறது. ‘‘வேட்டையாடுறேன்னு புலிகளோட எண்ணிக்கையை வேணும்னா குறைக்கலாம். ஆனால், புலிகளை அழிக்கவே முடியாது’’ என கச்சிதமான இடத்தில் ‘பளிச்’ சிந்தனைகளைப் புதைத்திருக்கும் சக்திவேலின் வசனம் அடிக்கடி சுளுக்கு எடுக்கிறது.
அரக்கப் பரக்க ஓடுகிற ஆக்ஷனில் ரேஷ்மி மேனன் கொஞ்ச நேரம் இருந்தால் போதும் என முடிவெடுத்துவிட்டார்கள் போல. ஆனாலும் வந்த கொஞ்ச நேரத்தில் உயிரை எடுக்கும் பார்வையை பாபி சிம்ஹாவிடம் வீசிவிட்டுப் போகிறார் ரேஷ்மி. அச்சுவின் இசையில் ‘ஏ... உமையாள்’ பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பெட்டர் ஸ்கோர் பின்னணியிலும் பரபரக்கிறது. இரண்டு கதைகளிலும் உள்ள பரபரப்பை அழகாகக் கண்களுக்குக் கடத்துகிறது ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு.
ஆனாலும் எடிட்டர் லோகேஷ் இன்னும் கத்திரியை வைத்திருக்கலாம். பாபி-ரேஷ்மி காதலை இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம். இருக்கிற ஒவ்வொரு முன்கதைச் சுருக்கமும் சுவாரஸ்யம்தான். ஆனால், படத்தின் பாதி வரையிலும் கூட அவற்றை அடுக்கிக்கொண்டே இருக்க வேண்டுமா? எத்தனை ஃப்ளாஷ்பேக்கைத் தாங்குவது? எத்தனை நிகழ்வுகளை மனதில் வைப்பது? கற்றதை எல்லாம் ஒரே படத்தில் காட்டிவிட வேண்டும் என்ற முனைப்பைத் தவிர்த்திருக்கலாமே டைரக்டர்!
கடைசி வரை டாப் கியர் டெம்போவிலேயே முழுப்படமும் பயணத்திருந்தால் ‘உறுமீன்’ இன்னும் கவர்ந்திருக்கும்!
- குங்குமம் விமர்சனக் குழு
|