இதுவும் கடந்து போகுமா?



ஆங்காரம் அடங்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது அடையாறு. இரு கரைகளிலும் அழிவின் சுவடாக சிதிலமடைந்த வீடுகளின் எச்சங்கள். சாலையோரங்களில் சிறுவணிகம் செய்து பிழைத்த குடும்பங்களின் நம்பிக்கையாக இருந்த கூரைகள் அடையாறின் ருத்ர தாண்டவத்தில் காணாமல் போய் விட்டன. கூடவே போனவை, கொஞ்சமே கொஞ்சமான புழங்கு பொருட்களும். வீட்டிலிருந்து மாற்றுத்துணியைக் கூட எடுக்க அவகாசமில்லை. 4 நாட்களுக்கு முன் உடுத்திய அதே உடை... இழப்பின் அதிர்ச்சி விலகாமல், மவுண்ட் ரோட்டின் பிளாட்பாரச் சுவரில் அமர்ந்திருக்கிறார்கள் ஜானியும், மாரியம்மாளும். 1 வயதில் மகன்.

இப்போது மாரியம்மாள் நிறை மாதக் கர்ப்பிணி. அவ்வப்போது வந்து நிற்கிற வாகனங்களை நோக்கி எதிர்பார்ப்போடு குவிகின்றன கண்கள். உணவோ, உடையோ வந்தால் அடித்துப் பிடித்துக் கரம் நீட்ட வேண்டும். ஜானியின் முகத்தில் திகில் அப்பிக் கிடக்கிறது. ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களோடு மனைவியின் பிரசவத்துக்கான கொஞ்ச சேமிப்பும் வெள்ளத்தோடு போய் விட்டது. ‘எப்போதும் பிரசவமாகலாம்’ என்ற நிலையில் அடுத்தென்ன என்று தெரியாத அவலம்.

‘‘மறைமலை நகர் பாலத்துக்குக் கீழே கருணாநிதி நகர்லதான் எங்க வீடு.  4 தலைமுறையா அந்தக் குடிசையிலதான் இருக்கோம். மாரியம்மாவுக்கு சொந்த ஊர் மேல்மருவத்தூரு. வளமா வளர்ந்தவ. திருமணத்துக்குப் பிறகு அவளையும் இந்த நாத்தத்துல தள்ளிட்டேன். ஒரு மீன்கடையில வேலை செய்யிறேன். பத்து இருபது கூடை மீன் வெட்டிக்கொடுத்தா 300 ரூபா கூலி கிடைக்கும். அன்னாடம் சாப்பாட்டுக்கு ஆச்சுன்னா பெரிசு. நான் கொடுக்கிற காசுல அஞ்சு பத்தை சேமிச்சு, டிவி, பீரோ, மிக்‌சின்னு வாங்கிச் சேத்தா மாரியம்மா. அஞ்சு வருஷ உழைப்பு... எதுவும் மிச்சமில்லை.

இந்த அளவுக்குத் தண்ணி தெறந்து விடுவாங்கன்னு தெரியாது... நான் மீன் கடைக்குப் போயிட்டேன். திடீர்னு வெள்ளம் வந்துட்டதால பையனை மட்டும் புடிச்சிக்கிட்டு ஓடியாந்திருக்கா. முகாமுக்குப் போங்கன்னு சொல்றாங்க. அங்கே உக்காரக்கூட இடமில்லே. பகல்ல பிளாட்பாரத்துல உக்காந்திருப்போம். நைட்டு பக்கத்துல இருக்கிற ஒரு சத்திர வாசல்ல படுத்துக்குறோம். திடீர்னு பிரசவ வலியெடுத்தா ஆட்டோவுல கூட்டிக்கிட்டுப் போகக் கூட சல்லிக்காசு கையில இல்லே...’’ - கண் கலங்குகிற ஜானியின் தோளை ஆதரவாகத் தொடுகிறார் மாரியம்மா.



‘‘வீடு அடிச்சுக்கிட்டுப் போய் அஞ்சு நாளாச்சு. இன்னைக்குத்தான் கணக்கெடுக்க வர்றாங்க. ‘கண்ணகி நகர் பக்கம் வீடு தரப் போறோம்’னு சொல்றாங்க. அது 30 கிலோ மீட்டருக்கு அப்பால இருக்கு. அவ்வளவு தொலைவுல இருந்து இங்கே வந்து இவரு எப்படி வேலை செய்ய முடியும்? அந்தப் பக்கமே ஏதாவது வேலை தேடணும். வீடு கொடுக்கிற வரைக்கும் எங்கே தங்கறதுன்னு தெரியலே. குழந்தை பிறந்துட்டா அதை எங்கே வச்சு பராமரிக்கிறதுன்னும் புரியலே. பித்துப் பிடிச்ச மாதிரி உக்காந்திருக்காரு இந்த மனுஷன்...’’ - மாரியம்மா விழிகள் அரும்புகின்றன.

மழை ஏற்படுத்திய தாக்கத்தை விட, செம்பரம்பாக்கம் ஏரி நிகழ்த்திய பாதிப்புதான் அதிகம். அசோக் நகர் தொடங்கி மேற்கு மாம்பலம், தி.நகர், சைதாப்பேட்டை வரை அத்தனை பகுதிகளையும் ஆழியாக்கி விட்டது ஏரி வெள்ளம். மேற்கு மாம்பலம், புஷ்பவதி அம்மன் கோயில் தெருவில், தன் வீட்டின் முன்னால் மலையாகக் குவிந்து கிடக்கிற குப்பையை கவலையோடு பார்த்துக் கொண்டு நிற்கிறார் பத்மநாபன். தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்கிறார். கீழ்த்தளத்தில் இருந்த வீடு, எட்டு அடிக்கும் மேலாக பாய்ந்தோடிய வெள்ளத்தில் முற்றிலுமாகக் குலைந்துவிட்டது. டிவி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஸ்டவ் எதுவும் மிச்சமில்லை. தரை, சுவர் எங்கும் வெள்ளம் அப்பிச் சென்ற, என்னவென்று இனம் காணமுடியாத கழிவுகள். கதறி அழும் கைக்குழந்தையை உறங்க வைக்கக்கூட இடமில்லாமல் தவிக்கிறார் மனைவி பவித்ரா.  

‘‘முதல்முறை மழை பெஞ்சபோதே இடுப்பளவுக்கு மேல வெள்ளம் போச்சு. அம்மாவையும் மனைவியையும் உறவுக்காரங்க வீட்டுல விட்டுட்டு நான் மட்டும் வந்து ஃபிரிட்ஜ், டி.வி எல்லாத்தையும்  கட்டில் மேல தூக்கி வச்சிட்டுப் போனேன். ஆனா எட்டடி தண்ணியில எல்லாம் மிதந்து கீழே விழுந்திடுச்சு. எதையும் பயன்படுத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஃபிரிட்ஜுக்கு இன்னும் மாதத்தவணை கூட முடியலே.

அரிசி, பருப்பு எல்லாம் ஊறிப் போச்சு. பயறுகள்லாம் முளைச்சிடுச்சு. சர்ட்டிபிகேட், ரேஷன் கார்டு எல்லாம் நனைஞ்சிடுச்சு. குழந்தைக்கு பால் காய வைக்கக்கூட பாத்திரம் மிச்சமில்லை. இனிமே வாழ்க்கையை புதுசாத்தான் தொடங்கணும். நினைச்சாலே மலைப்பா இருக்கு.
டி.வி., ஃபிரிட்ஜ் போனதெல்லாம் கூட பெரிசாத் தெரியலே. கல்யாண வேட்டி, சேலை கூட மிஞ்சலே. பீரோவுக்குள்ள தண்ணி போய் மொத்த துணியும் வீணாகிடுச்சு. எல்லாத்திலயும் கழிவு வேற ஒட்டியிருக்கு. கல்யாண ஆல்பமும் சிதைஞ்சு போச்சு. இத்தனை வருஷம் நாங்க வாழ்ந்ததுக்கான எந்த அடையாளமும் எங்ககிட்ட இல்லை’’ - கலங்கிப் போய் பேசுகிறார் பத்மநாபன். குழந்தை இன்னும் குரலெடுத்து அழுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம், அடையாறின் அருகாமையில் அண்டியிருந்த திடீர் நகர்களின் அடித்தட்டுக் குடிகள் அத்தனை பேரின் வாழ்க்கையையும் குடித்துத் தீர்த்து விட்டது. மாரியம்மன் கோயில் தெரு முகப்பில் ஆட்டோவில் சாய்ந்து அடையாறையே பார்த்துக்கொண்டிருக்கிறார் நாகப்பன். முகத்தில் இழப்பின் துயரம் இன்னும் வடியவில்லை. வீட்டின் ஓட்டைப் பெயர்த்து கள்ளன் போல உள்ளிறங்கிய வெள்ளம் இதுநாள் வரையிலான அத்தனை சேகரங்களையும் அப்படியே அள்ளிச்சென்று விட்டது. அடித்துப் பிடித்து ஆட்டோவை மட்டும் மீட்டிருக்கிறார்.



‘‘சென்னைக்கு வந்து அம்பது வருஷமாச்சுங்க. என் அனுபவத்துல எவ்வளவோ மழைகள் பேஞ்சிருக்கு. ஆனா, இந்த மாதிரி ஒரு வெள்ளத்தை நான் பாத்ததேயில்லை. திடீர்னு மொத்தமா ஏரித்தண்ணிய தெறந்து விட்டு எங்க வாழ்க்கையை அழிச்சிட்டாங்க. எனக்கு மூணு பசங்க. பொண்ணு +2 முடிச்சிடுச்சு. ஒரு பையன் பத்தாவது. இன்னொருத்தன் அஞ்சாவது. தொடக்கத்துல ரிக்‌ஷாதான் ஓட்டுனேன். கூரை வூட்டை சைதை கிட்டு அண்ணன்தான் ஓட்டு வூடா மாத்திக் கொடுத்தார். குருவி சேக்குற மாதிரி சிறுகச் சிறுக சேத்து 2 வருஷம் முன்னாடிதான் இந்த ஆட்டோவை வாங்குனேன். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட காலம் போய் கொஞ்சம் நல்ல நேரம் எட்டிப் பாக்கும்போது, மொத்தமா வாரிக்கிட்டுப் போயிருச்சு வெள்ளம்.

ஆட்டோ டியூவே இன்னும் கட்டி முடிக்கலே. தொழில்ல போட்டி அதிகமாயிடுச்சு. பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஆட்டோ தொழிலுக்குள்ள வந்துட்டாங்க. பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே இருக்கு. பொண்ணுக்கு வரன் பாக்கணும். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, ‘வீடு எது’ன்னு கேட்டா, எதைக் காட்டுறது? அதுக்கப்புறம் பையன்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சித் தரணும். என்ன செய்யப்போறேன்னு தெரியலே..?’’ - நாகப்பன் வார்த்தைகளில் துயரம் ததும்புகிறது.

சலவையாளர் காலனியை ஒட்டியிருக்கும் அப்துல் ரஜாக் தோட்டப் பகுதியில் தெருவில் கொட்டப்பட்ட அரிசி, பருப்பு, நோட்டுப் புத்தகக் கழிவுக்கு மத்தியில் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருக்கிறார் மாமூத் ஷெரீப். 15 வருடங்களாக மளிகைக்கடையும், பேன்ஸி ஸ்டோரும் நடத்தி வருகிறார். கடையில் அத்தனையும் சர்வநாசம். கூல்டிரிங்க்ஸ் கூலர்கள் தலைகீழாகக் கிடக்கின்றன. மேற்கூரை இடிந்து தரையை அழுத்திக் கொண்டிருக்கிறது.

‘‘ஆறு லட்ச ரூபாய்க்கு மேல முதலீடு பண்ணியிருந்தேன். எல்லாம் போச்சு. மொத்த யாவாரிங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலே. வாழ்க்கையே முடிஞ்சு போன மாதிரியிருக்கு...’’ என்று கலங்கித் தவிப்பவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெக்குருகி நிற்கிறார்கள் உறவுக்காரர்கள். ‘‘மூணு பசங்க... 2 பொண்ணுங்க... எல்லாம் தனியா போயிட்டாங்க. இருந்த சேமிப்பை எல்லாம் திரட்டி இந்தக் கடையைத் திறந்தேன். இவ்வளவு வருஷத்துல இந்த அளவுக்கு தண்ணி வந்ததில்லை. திடீர்னு வெள்ளம் ஏறிடுச்சு. கண்ணு முன்னாடி எல்லாப் பொருளும் தண்ணியில போயிடுச்சு. உயிரைக் காப்பாத்திக்கிறதே பெரிசாப் போச்சு. இதுல இருந்து நான் எப்படி கரையேறப் போறேன்னு தெரியலே. தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு புள்ளைங்ககிட்ட எல்லாம் போய் நிக்க முடியாது. இதுநாள்வரைக்கும் ‘பாய்’ங்கிற வார்த்தைக்கு மேல பேசாத மொத்த யாவாரிங்க இனி என்ன சொல் பேசுவாங்களோன்னு நினைக்கும்போதே அச்சமா இருக்கு... அல்லாதான் அடுத்த நாளைத் தீர்மானிக்கணும்...’’ - மனதைக் கரைக்கின்றன ஷெரீப்பின் வார்த்தைகள்.

இப்படியான பெருந்துயர் ஜானிக்கும், பத்மநாபனுக்கும், நாகப்பனுக்கும், ஷெரீப்புக்குமானது மட்டுமல்ல. சென்னையின் பாதி பரப்புகளில் இந்த துயரம் சகதியைப் போல படிந்தே இருக்கிறது. தன்னார்வலர்கள் தந்த உணவு இன்றைய பசியை ஆற்றியது. நாளை..? இந்தக் கேள்விதான் அத்தனை பேரையும் நிலைகுலைய வைக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை எல்லோர் முகத்திலும் எதிரொலிக்கிறது. ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற தைரியத்தை காலம்தான் இவர்களுக்கு அருள வேண்டும்!

"குழந்தைக்கு பால் காய வைக்கக்கூட பாத்திரம் மிச்சமில்லை. இனிமே வாழ்க்கையை புதுசாத்தான் தொடங்கணும்..."

"பொண்ணுக்கு வரன் பாக்கணும். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, ‘வீடு எது’ன்னு கேட்டா, எதைக் காட்டுறது?"

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்