நடிகைக்கு திடீர் கல்யாணம்....... பகீர் இயக்குனர்!
நான் உங்கள் ரசிகன் 12 மனோபாலா
ஷூட்டிங்ல இருந்து இந்தி நடிகை ரேகா திடீர்னு காணாம போயிட்டாங்க... ‘எங்கே போயிருப்பாங்க’னு எல்லார்கிட்டேயும் கேட்டு, கடைசி முயற்சியா அவங்க தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் பண்ணிக் கேட்டேன். ‘மேடம் பாம்பே சலே கயி’னு அவங்க அசிஸ்டென்ட் கூலா சொல்றான். ‘மும்பைக்குப் போயிட்டாங்களா?’ - நான் பயங்கர ஷாக்.
ஐதராபாத்ல க்ளைமாக்ஸ் ஷூட்டிங்... பரபரப்பு... ஒரு அஞ்சு நிமிஷ மழை கேப்ல இப்படி சொல்லிக்காம எஸ்கேப் ஆகிட்டாங்களேனு புலம்பலோட ஹீரோ ஜிதேந்திராவைத் தேடினேன். அவர் ஷூட்டிங் பிரேக்ல அங்க இருந்த 14 ஆர்ட்டிஸ்ட்கள் கூட ஜாலியா சீட்டு விளையாடிக்கிட்டு இருக்கார். விஷயத்தைச் சொன்னா, ‘‘ரேகா எப்பவும் அப்படித்தான் பிரதர்! நல்லா பழகுவாங்க. ஆனா, கடைசியில அவங்க யாருங்கறதை புரிய வச்சிடுவாங்க. தட் இஸ் ரேகா’’னு சொல்லிட்டு சிரிக்கிறார் ஜிதேந்திரா. ஆனாலும் நான் விடல. இருக்கற ஆர்ட்டிஸ்ட்களை வச்சு, மத்த ஷாட்களை எடுக்க ஆரம்பிச்சிட்டேன். அன்னைக்கு அதோட ஓவர்!
மறுநாள் ரேகா வந்தாங்க. நேத்து அப்படி ஒரு சம்பவம் நடந்தது மாதிரியே அவங்க காட்டிக்கலை. ரொம்ப கேஷுவலா, ‘‘மனோ, ஹவ் ஆர் யூ?’’னு விசாரிச்சுட்டு, சீனைக் கேட்டுட்டு நடிக்கறாங்க. அவங்ககிட்ட இன்னொரு விஷயம்... ரொம்பத் தனித்துவம். ஸ்பாட்டுக்குள்ள நுழைஞ்சதும், ‘‘மனோ, இங்கே வெளி ஆட்கள் நிறைய பேர் இருக்கறாங்க. அவங்களை எல்லாம் வெளியே அனுப்புங்க. அப்புறம் ஷாட் எடுக்கலாம்’’னு சொல்லிடுவாங்க. அவ்வளவு பெரிய மும்பையில யார் வெளியாட்கள்னு எனக்கு எப்படித் தெரியும்? ஆனா, ரேகா கரெக்டா கண்டுபிடிச்சிடு வாங்க. அவங்க எல்லாரையும் வெளியே அனுப்பின பின்னாடிதான் ஷூட்டிங்கே நடக்கும்.
டான்ஸ் மாஸ்டர் சரோஜ்கான், அப்போ மும்பையில பெரிய ஜாம்பவான். என் ஃப்ளோர்ல ரேகாவுக்கு டான்ஸ் அவர்தான் எடுக்குறார். எதிர் ஃப்ளோர்ல தேவிக்கு சாங் எடுக்குறார். இன்னொரு ஃப்ளோர்ல மாதுரி தீட்சித். இப்படி மூணு ஃப்ளோர்லயும் ஒரே மாஸ்டரை வச்சு, டான்ஸ் எடுத்துட்டிருந்தாங்க. சரோஜ்கான் வொர்க்கைப் பார்த்து மிரண்டுட்டேன்.
நான் இளையராஜாவோடவே தொடர்ச்சியா பழகினதால, பாலிவுட் மியூசிக் டைரக்டர்களிடம் சாங் கேட்டு வாங்குறது, கம்போஸிங் மெத்தட்... இதெல்லாம் எனக்குத் தெரியலை. அவங்க எது போட்டாலும் எனக்கு திருப்தி ஆகல. கடைசியா, ‘‘உங்களுக்கு என்னதான் வேணும்?’’னு கேட்டுட்டு, ‘‘நீங்க ரெஃபரன்ஸ் சாங் குடுங்க. நாங்க அதே மாதிரி போட்டுடறோம்’’னு சொன்னாங்க. இளையராஜாவோட ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ பாட்டை ரெஃபரன்ஸுக்கு குடுத்தேன். அதை மாதிரி புதுசா, வேற ஆங்கிள்ல ட்ரை பண்ணுவாங்கனு பார்த்தா, அதே பாட்டை போட்டுக் குடுத்துட்டாங்க. அந்தப் பாட்டுக்குத்தான் எனக்கு ‘பெஸ்ட் பிக்சரைஸிங்’னு ட்ரேட் கைடுல இருந்து அவார்டு, லதா மங்கேஷ்கர் அவார்டு, மியூசிக்கல் பிக்சர் அவார்டுனு நிறைய கிடைச்சுது. அந்த வகையில எனக்கு மறைமுகமா உதவிய இளையராஜா அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.
ஷூட்டிங் முடிச்சதும், ‘‘இப்படி ஒரு ஃபாஸ்ட் டைரக்டர்கிட்ட இதுக்கு முன்ன நாங்க வொர்க் பண்ணினதில்ல. மனோ, நீங்க தொடர்ந்து இந்தி சினிமா பண்ணுங்க’’னு ரேகாவும் ஜிதேந்திராவும் சொல்றாங்க. உடனே நான், ‘‘என்னோட சுறுசுறுப்புதான் என் பலம். தமிழ்நாட்டு இயக்குநர்கள் எல்லாருமே காலையில 7 மணிக்குள்ள ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவாங்க. இங்கே மதியம் ரெண்டு மணி ஆனா கூட ஷூட்டிங் துவங்க முடியல. வேணாம் சார். இந்த ஒரு இந்திப் பட அனுபவமே எனக்குப் போதும்!’’னு சொல்லிட்டேன்.
இந்திப் படம் முடிச்சு, மியூசிக்கல் ஹிட் அடிச்சுட்டு இங்கே வந்தா, ‘கிழக்கு வாசல்’ முடியல. ஒவ்வொரு ஷெட்யூல் போகும்போதும் ஏதாவது ஒரு பிரச்னையால ‘கிழக்கு வாசல்’ ஷூட்டிங் போகாமல் இருந்திருக்கு. க்ளைமேக்ஸ் எடுக்குறதுக்கு முன்னாடி, அங்கே ஒரு துயர சம்பவம்... ஆர்.வி.உதயகுமார் ஒரு பெரிய விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட கோமா ரேஞ்சுக்கு போயிட்டார். அவரால எழுந்திரிக்க முடியாத நிலையில, சத்யஜோதியில இருந்து எனக்கு போன் வந்தது.
‘‘நீங்க ஆரம்பிச்சு வச்ச படம், நீங்களே முடிச்சு வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கு. க்ளைமேக்ஸ் மட்டும் எடுத்துக் கொடுங்க’’னு சொல்றாங்க. ஆர்.வி.உதயகுமார் என்ன நிலையில இருக்கார்னு பார்க்க ஆஸ்பிட்டல் போனேன். அவங்க மனைவி ரொம்ப அழுதுட்டிருந்தாங்க. அவங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு, நேரா சத்யஜோதி ஆபீஸுக்கு வந்தேன். ‘‘ஆர்.வி. உதயகுமார் மீண்டு வருவார். அவரை வச்சுதான் மீதி படத்தை முடிக்கறது நியாயம். அவருக்காக நீங்க காத்திருக்கலாம். தயவுசெய்து அப்படி ஒரு இயக்குநர் மனசை புண்படுத்தாதீங்க’’னு சொல்லிட்டேன். அவங்களும் சம்மதிச்சு ரெண்டு மாசம் காத்திருந்திருந்தாங்க.
ஆர்.வி.உதயகுமார் நலமாகி, மீண்டு வந்து, படத்தை முடிச்சுக் கொடுத்தார். படம் ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய ஓப்பனிங். பாடல்கள் அத்தனையும் செம ஹிட்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தப் படத்துக்கு தமிழக அரசு விருது கிடைச்சது. கதை எழுதின மதுவுக்கு பெஸ்ட் ரைட்டர் விருதும் கிடைச்சது. இந்தப் படத்துக்கு அப்புறம்தான், ஆர்.வி.உதயகுமாரோட கிராஃப் ஏறிச்சு. இன்னிக்கும் அவர் என்னைப் பார்க்கும்போது, ‘‘அண்ணே! இது நீங்க குடுத்த வாழ்க்கைண்ணே’’னு சொல்வார்.
இந்த டைம்ல எனக்கு நண்பர் சத்யராஜ்கிட்ட இருந்து ஒரு ஆஃபர். ‘எம் புருசன்தான் எனக்கு மட்டும்தான்’ பண்ணும்போதே, எனக்கும் கதாசிரியர் கலைமணிக்கும் இடையே ஒரு வாக்குவாதம் வந்தது. ‘தன் புருஷனோட தொடர்பு இருக்குறதா சந்தேகப்பட்டு பக்கத்து வீட்டுப் பொண்ணை அசிங்கப்படுத்திடுறா ஒரு மனைவி. அதனால அந்தப் பொண்ணோட கல்யாணமே நின்னுடுது. அதனால அவ இவங்க வீட்டுக்கே வந்து தங்கிடுறா. பொண்டாட்டி உடனே கோவிச்சிக்கிட்டு வெளியே போயிடுறா...’ - இதுதான் அந்தப் படத்தோட கதை. ‘‘உரிமையுள்ள பொண்டாட்டி எதுக்கு சார் வெளியே போகணும்?’’னு கலைமணிகிட்ட கேட்டேன். ‘‘இல்ல, இதுதான் என் கதை’’னு அழுத்தம் திருத்தமா சொல்லிட்டார்.
‘‘அன்னிக்கு நீங்க கேட்டீங்களே... ‘பொண்டாட்டி ஏன் வெளியே போகணும்?’னு. இப்போ நான் பண்ணியிருக்கற கதைப்படி, ‘பொண்டாட்டியே வப்பாட்டிய கூட்டிட்டு வர்றா...’னு ஒன்லைன் சொல்றார் கலைமணி. அந்தக் கதைதான் ‘மல்லுவேட்டி மைனர்’. ஹீரோ ஒரு பொம்பள பொறுக்கிங்கற கதையை அப்போ வேற எந்த ஹீரோகிட்ட சொன்னாலும் முன்வர மாட்டாங்க. எல்லாருமே ஒரு இமேஜ் வட்டத்தில சிக்கி இருந்த காலம். ஆனா, அது எதைப் பத்தியும் கவலைப்படாம, சத்யராஜ் நடிக்க சம்மதிச்சார். நான், மணிவண்ணன், சத்யராஜ் மூணு பேருமே நெருங்கிய நண்பர்கள்ங்கிறது அதுக்கு ஒரு காரணம். ஹீரோயின்கள் புது காம்பினேஷனா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஷோபனாவையும், சீதாவையும் ஜோடி சேர்த்தேன். ‘மல்லுவேட்டி மைனர்’ ஷூட்டிங் பத்து நாட்கள் நடந்தது. பதினோராவது நாள்ல ஒரு ஷாக் நியூஸ்... ‘நடிகை சீதாவுக்கு திடீர் திருமணம்’!
(ரசிப்போம்...) தொகுப்பு: மை.பாரதிராஜா படம் உதவி: ஞானம்
|