தவிக்க விட்ட வெள்ளம்... வாழ்வை மீட்கும் வழிகள்!
கோரத்தாண்டவம், சர்வநாசம் என எந்த வார்த்தை போட்டாலும் சென்னையில் மழை வெள்ளம் செய்திருக்கும் அட்டூழியத்துக்கு அது கம்மிதான். பசி, மரணபயம், நண்பன் - பகைவன் எல்லாவற்றையும் அடையாளம் காட்டிவிட்ட எமர்ஜென்ஸி காலம் அது. எல்லாம் பார்த்தாச்சு... சொந்த ஊரிலேயே அகதிகளாய் மீட்கப்பட்டாச்சு. இனி, மீண்டு வருகிற வேகம்தான் உலக அரங்கில் நம்மை நிலை நிறுத்தும். எனவேதான், உணவுப் பொட்டலங்களைத் தாண்டி அடுத்த கட்ட வேலைகளில் இறங்கியுள்ளன உதவும் உள்ளங்கள்!
‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று சொல்வது சுலபம்தான். ஒரு வேலை தேடும் இளைஞனுக்கு இனிமேல்தான் பிறப்புச் சான்றிதழே வாங்க வேண்டும் என்பது எத்தனை பெரிய வலி! ‘வெள்ளத்தில் அரசு ஆவணங்களை இழந்தவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் அரசிடமிருந்து அவற்றை இலவசமாகப் பெற்றுத் தருகிறோம்’ என ‘சட்டப்பஞ்சாயத்து இயக்கம்’ எனும் அமைப்பினர் வாட்ஸப்பில் பரவ விட்ட அந்தத் தகவல், அல்லல்பாடுகளுக்கு மத்தியில் அப்படியொரு ஆறுதல்! விசாரித்துப் பார்த்தால் வழக்கறிஞர்கள் பலருமே இந்தச் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஸ்டாம்ப் டியூட்டி உள்ளிட்ட செலவுகளைக் கூட தானே ஏற்று சான்றிதழ்களைப் பெற்றுக் கொடுக்கிறார் பூந்தமல்லி வழக்குரைஞரான புரட்சிதாசன்.
‘‘வீட்டுப் பத்திரம், பள்ளி - கல்லூரி சான்றிதழ், பிறப்பு - இறப்பு - சாதிச் சான்றிதழ், ரேஷன் கார்டு இவை எல்லாமே அரசிடமிருந்து பெற வேண்டிய ஆவணங்கள். தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட் 1977ன்படி, ஒருவர் பிறப்பு/ இறப்பு சான்றிதழைத் தொலைத்த இடத்திலேயே பெறவேண்டுமென்றால், நீதிமன்றத்தில் பெட்டிஷன் போட வேண்டும். ‘இவர் இந்த ஏரியாக்காரர்தான்’ எனச் சொல்லும் சாட்சி ஒருவர் வேண்டும். முனிசிபல் ஆபீஸ், கமிஷனர் ஆபீஸ், தாலுகா ஆபீஸ் போன்றவை அந்த நபர் அந்த இடத்தில் பிறந்தவரா எனச் சரிபார்த்த பின் நீதிமன்றம், ‘சான்றிதழைக் கொடுக்கலாம்’ என உத்தரவிடும். இந்த உத்தரவை நாம் நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தால் பிறப்புச் சான்றிதழைப் பெறலாம். இந்த நடைமுறைக்கு சுமார் 2 மாதமாவது ஆகும். சாதாரண மக்கள் தலை சுற்றிப் போகும் இந்த நடைமுறைகளை நிறைவேற்றித் தர இடைத்தரகர்கள் 4000, 5000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் மக்களால் இதை எப்படிக் கொடுக்க முடியும்? எங்களைப் போன்ற வக்கீல்களைப் பொறுத்தவரை இது தினம்தோறும் சந்திக்கும் கோர்ட் நடைமுறைதான். இந்நேரத்தில் இதைச் செய்வது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்!’’ என்கிற புரட்சிதாசன், ஒரே நேரத்தில் 50 நபர்களுக்காக சான்றிதழ் விண்ணப்பம் கொடுத்து அலைந்து கொண்டிருக்கிறார்.
‘‘ஒரு சான்றிதழைப் பெற ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் சிறு தொகையை அரசு வசூலிக்கிறது. இதை இந்த நேரத்தில் அரசு நீக்க வேண்டும் என்றும் அரசுக்கு அப்பீல் செய்திருக்கிறோம். எல்லோரும் அவர்களால் இயன்ற உதவியைச் செய்துகொடுக்கும்போது அரசு இதைக்கூட செய்யக் கூடாதா?’’ என்கிறார் தி.மு.க. வழக்குரைஞர் அணியின் தலைவரான சண்முகசுந்தரம். தி.மு.க. வழக்குரைஞர் அணியில் உள்ள ஒவ்வொருவருமே இதே பணியில் படு பிஸியாக ஈடுபட்டிருக்கிறார்கள். தொடர்புக்கு: அண்ணா அறிவாலயம்: 044-24320270, புரட்சிதாசன்: 9840536949, சட்டப்பஞ்சாயத்து இயக்கம்: 7667100100
இந்த மழையில் சிலருக்கு வீட்டில் விரிசல்... பலருக்கு வீடே சிதைந்து போயிருக்கிறது. இதைச் சீரமைக்க வங்கிகள் பலவும் சிறப்புக் கடன் வசதிகளை அறிவித்துள்ளன. ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, எச்.எஃப்.டி.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் தனியார் நிதி நிறுவனமான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் போன்றவை இதில் அடக்கம். கனரா வங்கியின் சென்னை சர்க்கிளின் தலைமை பொதுமேலாளரான கிருஷ்ணகுமார், தங்களின் கடன் சலுகை அறிவிப்பு பற்றி விளக்கம் தருகிறார்...
‘‘எங்கள் வங்கியில் வீட்டுக்கடன் பெற்றிருந்து, அது மழையால் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டின் மதிப்பில் 10 சதவீதம் வரை (2 லட்சத்துக்கு மிகாமல்) வருடம் 9.65% வட்டியில் கடன் வழங்குகிறோம். அதுபோல எங்கள் வங்கியில் வாடிக்கையாளராக இல்லாதிருந்தாலும் வீடு பழுது பார்க்க ரூபாய் 1 லட்சம் வரை கடன் வழங்குகிறோம். இதற்கும் அதே 9.65% வட்டிதான். ஒருவேளை சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடு என்றாலும் வீட்டு உபகரணங்கள் வாங்க பர்சனல் கன்சம்ப்ஷன் லோன் எனும் அடிப்படையில் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். இவை எதற்குமே ப்ராசஸிங் ஃபீஸ், டாகுமென்ட் சார்ஜ் கிடையாது. இதேபோல் வாகனக் கடன் விஷயத்திலும் சான்றிதழ்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் சில மணி நேரங்களில் லோன் கிடைக்கும் விதத்தில் வசதி செய்திருக்கிறோம். கனரா வங்கிக் கிளை மேலாளரைப் பார்த்து தங்கள் தேவையைப் பற்றிச் சொன்னால் இந்தக் கடன்களை விரைவில் பெறலாம்!’’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார் அவர். தொடர்புக்கு: கனரா வங்கி 044-24341335
பணக்காரர்களை மேட்டுக்குடி என ஏன் சொன்னார்கள் என இப்போது தெரிகிறது. பள்ளிகள் எப்போது திறக்கும் என வெள்ளம் பாதிக்காத பகுதி மக்கள் காத்திருக்க, பள்ளி திறந்தால் போட்டுச் செல்ல சீருடை இல்லை, நோட்டுப் புத்தகம் இல்லை என கதறிக் கொண்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள். கல்லூரி மாணவர்களுக்கோ கல்லூரி திறக்கும் நாளில் தேர்வு நடக்கும். புத்தகமே இல்லாமல் எதை வைத்துப் படிப்பது? இதற்குத் தீர்வு தேடி இளைஞர் வர்க்கத்திலேயே சிலர் களமிறங்கியிருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த பி.இ பட்டதாரியான ஆனந்த்நாக் அவர்களில் ஒருவர். மெடிக்கல், எஞ்சினியரிங் மாணவர்களுக்கு 6 ஆயிரம் 7 ஆயிரம் என்றிருக்கும் விலை உயர்ந்த பாடப் புத்தகங்களை பி.டி.எஃப். வடிவில் இலவசமாக அனுப்பி வைக்கிறார் ஆனந்த்.
‘‘ஸ்கூல் புக்ஸை எல்லாம் தமிழ்நாடு வெப்சைட்லயே இலவசமா டவுன்லோட் பண்ணிக்க முடியும். அரசாங்கமும் இலவசமா தருது. காலேஜ் பசங்க பாவம். ஆயிரக்கணக்கில் கொடுத்தாத்தான் செகண்ட்ஸ் புக்ஸே கிடக்கும். பலருக்கும் அதெல்லாம் வெள்ளத்தோட போச்சு. நெட்ல அதை இலவசமா டவுன்லோடு பண்ண முடியாது. அதுக்கு ஒரு சந்தா கேட்பாங்க. எல்லார்கிட்டயும் அந்த சந்தா இருக்காது. நான் எம்.இ படிக்கும் சமயத்துல இருந்தே ஒரு ஆன்லைன் புக் சைட்ல மெம்பரா இருக்கேன். அதுல இருந்து புத்தகங்களை நான் டவுன்லோடு பண்ணி தேவைப்படுறவங்களுக்கு இலவசமா இமெயில்ல அனுப்புறேன். அவங்க அதை டவுன்லோடு பண்ணி செல்லுலயே வச்சி படிக்கலாம். அல்லது பிரின்ட்அவுட் கூட எடுத்துக்கலாம். எனக்கு போன் பண்ணி சில பேர் குறிப்பிட்ட சில பாடப்பகுதி மட்டும் போதும்னு கேக்கறாங்க. அவங்களுக்கு அவங்க கேட்கிற பகுதிகளை மட்டும் வெவ்வேற புத்தகங்கள்ல இருந்து நோட்ஸ் மாதிரி பிரிச்சி எடுத்து அனுப்புறேன்!’’ என்கிறார் ஆனந்த் ஆத்மார்த்தமாக. தொடர்புக்கு: ஆனந்த்நாக்: 9940029485
அரசு ஆவண முகாம்!
மழை நீரால் இழந்த ஆவணங்களைத் திரும்பப் பெற டிசம்பர் 14 துவங்கி 2 வாரங்களுக்கு தமிழகத்தின் எல்லா வருவாய் வட்டங்களிலும்; கல்விச் சான்றிதழ் பெற பள்ளி, கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் அமைப்பதாக ஆணை பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த ஆவணங்கள் ஒரு வார காலத்துக்குள் கிடைக்கும் என்பதும் அரசு வாக்குறுதி. இதோடு பொது சேவை மையங்களிலும் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்
மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ்போர்ட்களை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் சென்னையில் அமைந்தகரை, வளசரவாக்கம் மற்றும் தாம்பரத்திலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களில் நடைபெற்றன. இந்தச் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கிறவர்கள் பாஸ்போர்ட்டுக்காக ரூபாய் 3000 கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இது தவிர, டிசம்பர் 8ம் தேதி துவங்கி இரண்டு மாத காலத்துக்குள் எல்லோரும் வெள்ளத்தில் இழந்துபோன பாஸ்போர்ட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: ஆர்.பாலசுப்ரமணியன்: 044-28525554/ 28513640/ 28513638
- டி.ரஞ்சித்
|