வெள்ளத்தில் உயர்ந்து நின்ற ஹீரோக்கள்!



சென்னையை மட்டுமல்ல... சென்னைவாசிகள் சுயநலமிகள் எனும் கற்பிதத்தையும் கலைத்துப் போட்டுவிட்டது மழை. ஜாதி, மதம், மொழி, சமூகம் என அத்தனை பாகுபாடுகளையும் அலசித் துரத்தி விட்டது வெள்ளம். இக்கட்டான, ஆபத்தான சூழலில் எவரையும் எதிர்பாராமல் களத்தில் இறங்கி, தவித்த மக்களை மீட்டு பாதுகாத்தவர்கள் ஏராளம். ஊடக வெளிச்சத்தை நோக்கமாகக் கொள்ளாமல் பணியே கடனென செயல்பட்ட ரியல் ஹீரோக்களில் சிலர்...

சகிப்புத்தன்மை குறித்த சர்ச்சைகள் இனி தமிழகத்தில் எழாது. எவரும் கால் வைக்கத் தயங்கும் நீர்ச்சுழல்கள், கழிவுகள், ஆபத்தான பகுதிகளில் எவ்வித தயக்கமும் அற்று பல ஆயிரம் பேரைக் காத்து, உணவளித்து, தொடர்ச்சியாக அவர்களின் நல்வாழ்வுப் பணிகளில் பங்கேற்று வருகின்றன பல இஸ்லாமிய அமைப்புகள். குறிப்பாக, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்... 

‘‘இரண்டாவது முறை தொடர்மழை பெய்து வெள்ளம் உருவான நேரத்திலேயே சகோதரர்களை ஒருங்கிணைத்து விட்டோம். இரவு, பகலாக மீட்புப்பணி நடந்தது. ஒரு குழு திட்டமிடல்களை கவனித்தது. மீட்கப்பட்ட மக்கள் மாற்றுத்துணி கூட இல்லாமல் அபலைகளைப் போல வந்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். ஒவ்வொருவரிடமும் பேசி தனிப்பட்ட தேவைகளை அறிந்தோம். உடனடியாக உடை, உணவுக்கு ஏற்பாடு செய்தோம். தமிழகம் முழுவதும் எங்கள் அமைப்பு சார்பாக இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களை சென்னைக்கு வரவழைத்தோம். சுமார் 50 ஆம்புலன்ஸ்கள் களத்தில் இறக்கப்பட்டன.

தீவாக சூழ்ந்து நின்ற வெள்ளத்துக்குள் சிக்கிய பலர் இறந்தார்கள். அவர்களை வெளியில் எடுத்து வருவது கூட சவாலாக இருந்தது. நாங்கள் அந்தப் பணியை தீவிரமாக முன்னெடுத்தோம். 22 உடல்களை மீட்டு வெளியில் கொண்டுவந்தோம். சிரமப்படுபவர்கள் எவராயினும் அடுத்த நொடி செயலில் இறங்க வேண்டும், அதைத்தான் செய்தோம். தொடர்ந்து களத்தில் இருப்போம்...’’ என்கிறார் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் உசேன் கனி.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பும் இதேபோல பேரிடர் பணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இயங்கியது. வெள்ளம் வடிந்த பிறகு மக்களை பெரும் மிரட்சிக்குள்ளாக்கியது குப்பை. வீடுகளில் குவிந்து கிடந்த பயன்படாத பொருட்கள் எல்லாம் வீதியில் குவிந்தன. சாக்கடைகள் வெள்ளம் போல் பெருக்கெடுத்தன. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நின்ற தருணத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் 3000 பேர் துப்புரவுப் பணியில் இறங்கினார்கள். தெருக்கள், கோயில்கள் என எந்த மனத்தடையும் இன்றி உணர்வுப்பூர்வமாக சுத்தம் செய்தார்கள். ‘‘எல்லாச் செயல்களுக்கும் இறைவனிடத்தில் ஒரு கூலி உண்டு. மனிதர்களிடத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

இதுமாதிரி வேலைகளைச் செய்யும்போது பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். அதைத்தான் குறிப்பிட விரும்புகிறோம். சிரமப்படும் எவரையும் நாங்கள் கைவிடமாட்டோம். கண்டிப்பாக தோள்கொடுப்போம்’’ என்கிறார் இந்த அமைப்பின் மாநில செயலாளர் அப்துல்ரகுமான். துயரத்துக்கெல்லாம் பெருந்துயரம் சென்னைக்கும் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்பே அறுந்ததுதான். அப்போது கைகொடுத்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலாஜி. இவரின் லக்ஷ்மிநாராயண் டிராவல்ஸ் சென்னை டூ திருச்சி டூ திண்டுக்கல் நான்கு நாட்களாக இலவச ட்ரிப் அடித்தது.



‘‘எங்களுக்குப் பல வருஷமா திண்டுக்கல்ல லோக்கல் பஸ் இருக்கு. 2010ல இருந்துதான் 2 ஆம்னி பஸ்களை சென்னைக்கு இயக்கினோம். இவ்வளவு நாள்ல இந்த அளவுக்கு சென்னை துண்டிக்கப்பட்டதில்ல. நான் 10 வருஷமா சென்னையில இருந்திருக்கேன். இங்கேதான் படிச்சேன். அதனால அடிப்படையா கொஞ்சம் சென்னைப் பாசம் உண்டு. ஊருக்குப் போகணும்னு மக்கள் அகதி மாதிரி கிளம்பி வர்றாங்க. ஏடிஎம் எதுவும் வேலை செய்யலை. யார் கையிலும் காசு இல்ல. கண்ணீரோட நகைகளை நீட்டுறாங்க. மனசு கேக்கல. ‘திருச்சி திண்டுக்கல் போற யார் வேணாலும் வாங்க... முழுக்க இலவசம்’னு வாட்ஸ் அப்ல அறிவிச்சிட்டேன். பெங்களூரு ரோடு மட்டும்தான் சென்னைக்குள்ள போக வர ஒரே வழி. அதுவழியா நாங்க கோயம்பேடுல இருந்தே பஸ் இயக்கினோம். ஒரு கட்டத்துல சிட்டிக்குள்ள போறதே கஷ்டமாகிடுச்சு. அப்போ மதுரவாயல்ல இருந்து இயக்கினோம். பயணிகளை ஒருங்கிணைச்சு அங்கே அழைச்சிட்டு வந்து ஏத்திவிட்ட வாலன்டியர்ஸுக்கெல்லாம் எப்படி நன்றி சொன்னாலும் பத்தாது. மூணு நாள் நம்ம பஸ் ரெண்டும் இலவசமாதான் ஓடுச்சு!’’ என்கிறார் அவர் ஆத்மதிருப்தியுடன்.

எந்தப் பொருளுதவியை விடவும் விலை மதிப்பற்றது மனித சக்தி. அதைத் தங்கள் சார்பாக களமிறக்கியிருந்தது கோவை மார்ட்டின் குழுமம். தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 300 பேரை நேரடியாகக் களத்திலும் 200 பேரை ஒருங்கிணைப்பாளர்களாகவும் நிவாரணப் பணியில் இறக்கிவிட்டிருந்தார்கள் இவர்கள்.

‘‘எங்களின் 50க்கும் மேற்பட்ட வாகனங்களும் வெள்ள நிவாரணத்துக்காகத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. கோட்டூர் புரத்தில் படகுகளுக்கு ஏற்பாடு செய்தோம். இதுவரை ஒரு லட்சம் பேருக்கு உணவும் 25 ஆயிரம் பேருக்கு போர்வைகளையும் வழங்கியிருக்கிறோம். பாதிக்கப்பட்ட ஆயிரம் பேரை எங்கள் இடத்தில் தங்க வைத்திருக்கிறோம்!’’ என்கிறார் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்லஸ்.

‘‘இத்தனை மனித சக்தி எங்களிடம் இருந்ததால்தான் சுமார் 2 கோடி ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வாங்கி அதைச் சரிவர விநியோகிக்க முடிந்தது. இது தவிர, எங்கள் வாலன்டியர்கள் 100க்கும் மேற்பட்ட விலங்குகளைக் காப்பாற்றியிருக்கிறார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகளை நாங்களே தத்தெடுத்திருக்கிறோம்.’’ என்கிறார் சார்லஸ்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு உயிர்காக்கும் அமுதம் ஆக்ஸிஜன் சிலிண்டர்தான். அது இல்லாததால் தனியார் மருத்துவமனை ஒன்றில் 18 உயிர்கள் அநியாயமாய் பிரிந்த கொடூரத்தை செய்தியாகப் படித்தோம். பக்கத்துத் தெருவில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்திருந்தாலும் அதைக் கொண்டு போய் சேர்க்க முடியாத நிலை. யாரையுமே அசைய விடாமல் பிடித்து வைத்திருந்தது அசுர வெள்ளம். அந்த நிலையிலும் தன்னிடம் இருந்த 12 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சென்னை முழுக்க இலவசமாய் விநியோகித்திருக்கிறார் அனந்த்குமார். ‘‘20 வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கேன். கம்பெனி பேரு ஆக்ஸிடெக். இது வெறும் பிசினஸ் இல்ல. உயிர் காக்குற உன்னதப் பணின்னு எனக்குத் தெரியும். மழை வந்து எங்கேயும் நகர முடியாம போனப்போ, இந்த சிலிண்டர் கிடைக்காம எத்தனை உயிர் போகும்னு நினைச்சுப் பார்க்கவே முடியல.

அதனாலதான் ‘என்கிட்ட சிலிண்டர்ஸ் இருக்கு... வேண்டியவங்க பயன்படுத்திக்கலாம்’னு வாட்ஸ்அப்ல போட்டேன். உடனடியா சில வாலன்டியர்ஸ் சேர்ந்து அற்புதமா கோ-ஆர்டினேட் பண்ணினாங்க. குறிப்பா ராம்னு ஒருத்தர், சரத்னு ஒரு சின்னப் பையன். தங்களோட சொந்த இன்னோவா காரை எடுத்துக்கிட்டு, வீடுகள், சின்னச் சின்ன நர்சிங் ஹோம்னு சென்னை முழுக்க இதைக் கொண்டு போய் சேர்த்தாங்க. நெட்ல என் அறிவிப்பைப் பார்த்துட்டு அமெரிக்காவில் இருந்தெல்லாம் எக்கச்சக்க போன். ‘எங்க அம்மா ஆக்ஸிஜன் இல்லாம சாகக் கிடக்குறாங்க.

பணத்தைப் பத்தி யோசிக்காதீங்க... எவ்வளவு வேணுமோ வாங்கிக்கங்க’னு கதறினாங்க. இதுவரை ஒருத்தர்கிட்ட கூட பணம் வாங்கலை. ‘சிலிண்டரைத் திருப்பிக் கொடுங்க... ரீஃபில் பண்ணனும்’னுதான் சொல்லிட்டு வந்திருக்கோம். அந்த ராம், சரத் எல்லாம் யாருன்னே தெரியல. அவங்க இவ்வளவு செய்யும்போது நானும் ஏதாவது செய்யணும்ல!’’ என்கிறார் அனந்த்குமார் நெகிழ்வாக. இந்த நினைப்புதான் இப்போதைக்கு சென்னைக்கான ஆக்ஸிஜன் சிலிண்டர்!

- வெ.நீலகண்டன், நவநீதன்