கனவில் துரத்தும் பாம்பு... நிஜத்தில் எது துரத்தும்?
கனவுகளுக்கு பலன் சொல்ல ஜோதிடர்கள் ஒரு பக்கம் முயன்று வருகிறார்கள். ‘‘எந்தக் கனவுக்கும் பொதுவான பலன் என ஒன்று இல்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களும் நினைவுகளுமே அவர்களின் கனவுகளுக்குப் பொறுப்பு’’ என உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃபிராய்டு சொன்னார். இயன் வாலஸ் என்ற மனநல நிபுணர் கடந்த 30 ஆண்டுகளாக சுமார் ஒன்றரை லட்சம் கனவுகளை ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். அதிகம் பேருக்கு வரும் சில கனவுகளுக்கு அவரால் விளக்கம் தர முடிந்திருக்கிறது. அது இங்கே...
கனவில் உங்களை யாரோ துரத்துகிறார்கள். நீங்கள் ஓட முயற்சிக்கிறீர்கள். ஆனால் எவ்வளவு ஓடினாலும் கால்கள் இருந்த இடத்திலிருந்து நகர மறுக்கின்றன. இந்தக் கனவு ஏன் வருகிறது தெரியுமா? வாழ்வில் ஏதோ ஒரு பிரச்னையை நீங்கள் தவிர்க்கிறீர்கள்; அல்லது தள்ளிப் போடுகிறீர்கள். அதை எப்படித் தீர்ப்பது என புரியாமல் குழம்புகிறீர்கள். தவிப்பதை விட்டுவிட்டு, பிரச்னையை நெருங்குங்கள். தானாகவே ஒரு தீர்வு கிடைக்கும்.
ஒரு மிகப்பெரிய கூட்டம். அதற்கு நடுவே ஆடைகள் இல்லாமல் நிற்கிறீர்கள். எல்லோரது பார்வையும் உங்கள்மீது இருக்கிறது. திடுக்கிட்டு கனவிலிருந்து விழித்துக்கொள்கிறீர்கள். இப்படி ஒரு கனவு வருகிறது என்றால், உங்களைப் பற்றிய ஏதோ ஒரு ரகசியமான விஷயம் அம்பலமாகிவிடுமோ என்ற கவலையில் நீங்கள் இருக்கிறீர்கள். எதற்கும் கவலைப்படாமல் எதிர்கொண்டால் இந்தக் கனவு மட்டுமில்லை, ரகசியங்களும் உங்களை உறுத்தாது.
உயரமான இடத்திலிருந்து விழுகிறீர்கள். வேகமாக விழுந்து தரையை நெருங்கும்போது திடுக்கிட்டு விழிக்கிறீர்கள். நிஜ வாழ்வில் தன்னையும் நம்பாமல், மற்றவர்களையும் நம்பாமல் இருப்பவர்களுக்கு வரும் கனவு இது. நம்பிக்கையே எந்த சூழலையும் மாற்றும் வல்லமை படைத்தது என்பதை உணருங்கள்.
கனவில் பேய் போன்ற ஏதோ விநோதமான உருவத்தைப் பார்த்து கதறுகிறீர்கள். அது உங்களை நெருங்குகிறது; உங்களால் விலக முடியவில்லை. இது ‘சமூகத்திலிருந்தும் வாழ்விலிருந்தும் நீங்கள் பெரிதும் விலகியிருக்கிறீர்கள்’ என்பதைக் குறிக்கிறது. இதனால் விரும்பியதை அடைய முடியாத நிராசைதான், விநோத உருவமாக மிரட்டுகிறது. ஊருடன் ஒட்டி வாழ்ந்தால் எல்லாம் சரியாகும்.
டூவீலரிலோ, காரிலோ போகிறீர்கள். தாறுமாறான வேகத்தில் வாகனம் போகிறது. பிரேக் பிடிக்கிறீர்கள்; அடுத்த நொடியில் வண்டி தலைகுப்புற கவிழப் போகிறது. திடுக்கிட்டு விழிக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் ஏதோ ஒரு கெட்ட பழக்கத்தை உதற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் கனவு இது.
தேர்வு எழுத அறையில் அமர்ந்திருக்கிறீர்கள். கேள்வித்தாள் வருகிறது. நீங்கள் படித்த எதுவுமே கேட்கப்படவில்லை. ஒரு வார்த்தைகூட எழுத முடியாமல் திணறுகிறீர்கள். இந்தக் கனவு, உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேற முடியாமல் தவிப்பதை உணர்த்துகிறது. தேர்வு என்பது வாழ்வைத் தீர்மானிக்கும் விஷயம் என்பதால், அதைக் குறியீடாக வைத்து இந்தக் கனவு உங்களை முன்னேறச் சொல்கிறது.
பலரும் கனவில் பாம்பு பார்க்கிறார்கள். ஒன்று, பாம்பு துரத்தும்; அல்லது கடிக்க வரும் பாம்புக்கு மிரண்டு ஓடுவார்கள். கனவில் பாம்பு வருவது, மனதில் மறைந்திருக்கும் பயங்களை உணர்த்துகிறது. நிஜ வாழ்வில் அச்சுறுத்தும் வகையில் ஏதோ ஒன்று நிகழப்போவதாக நீங்கள் பயப்படுகிறீர்கள். அந்த பயமே கனவில் பாம்பாக வருகிறது. வாழ்க்கைப்பாதையில் இருக்கும் தடைகளை உடைத்து எறியுங்கள். எந்த பயமும் உங்களைத் துரத்தாது!
நீங்கள் அந்தரத்தில் மிதப்பது போலவும் எங்கோ உயரத்தில் பறப்பது போலவும் கனவு வருகிறது. நிஜவாழ்வின் சங்கடங்களிலிருந்து நீங்கள் தப்பிப் பறக்க முயல்கிறீர்கள் என்பதை உணர்த்தும் கனவு இது. உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என அர்த்தம். உங்கள் வாழ்வுக்கு உங்களைத் தவிர யாரும் பொறுப்பாக முடியாது என்பதை உணர்ந்தால் எல்லாம் மாறும்.
பல் விழுவது போல கனவு வந்தால்... உங்கள் தன்னம்பிக்கையைத் தகர்க்கும்விதமாக ஏதோ ஒன்று நிஜ வாழ்வில் நடைபெறப் போகிறது என அர்த்தம். வாழ்க்கையில் நிகழப்போகும் ஏதோ ஒரு மாற்றத்துக்கு நீங்கள் தயாராக இல்லை. அதனால் நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரும் என நீங்கள் தயங்குகிறீர்கள். தயக்கம் துறந்து, தன்னம்பிக்கை பெற்று களத்தில் குதித்தால் வெற்றி உங்களுக்கே!
கனவில் ஏதோ ஒரு நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் மரண நிகழ்வை பார்க்கிறீர்கள். அல்லது ஏதோ ஒரு இறுதி ஊர்வலத்தில் செல்கிறீர்கள். உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு விஷயம் முடிவுக்கு வந்து, புதிதாக வேறொரு விஷயம் தொடங்கப் போவதை உணர்த்தும் கனவு இது. கனவில் மரணம் பார்ப்பது, வாழ்வில் வளர்வதற்கான ஒரு வாய்ப்பு.
- லோகேஷ்
|