ஐந்தும் மூன்றும் ஒன்பது
மர்மத் தொடர் 49 இந்திரா சௌந்தர்ராஜன்
‘‘அந்த நிர்வாணச் சித்தரின் சிரிப்பு கேலிச் சிரிப்பா... இல்லை, சந்தோஷச் சிரிப்பா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ‘மன்னிக்கணும் சாமி! வாழைப்பழத்தை நான் தோலோட சாப்பிட்டது பசியினால மட்டுமில்ல... தோல்ல நிறைய சக்தி இருக்கறதாலயும் மட்டுமில்ல... அந்தத் தோலை ஒரு குப்பை மாதிரி இங்க வீசி எறியறது தப்புங்கற மாதிரி தோணிச்சு. அதான் சாப்பிட்டேன்!’ என்று ஜோசப் சந்திரன் கூறவும்தான் அவர் நுட்பமான எண்ணம் எனக்கே புரிந்தது.
அந்த சித்தரும் சிரிப்பு அடங்கியவராக தொடர்ந்து பார்த்தார். எனக்கோ அவர் பொழுது அந்தக் குகைக்குள் எப்படிக் கழிகிறது என்றும், இவரால் எப்படி இப்படி ஒட்டுத்துணி கூட இல்லாமல் சுவாரஸ்யமாக வாழ முடிகிறது என்றும் கேள்வி எழும்பியது. சுருக்கமாகக் கூறுவதானால் ஜோசப் சந்திரனின் சிந்தனை ஒரு விதமாகவும், என் சிந்தனை அதற்கு எல்லா வகையிலும் நேர்மாறாகவும் இருந்தது. நான் அந்த சித்தரையோ, அவரின் சித்த வாழ்வையோ புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கவே இல்லை. மாறாக, வாழத் தெரியாமலோ... இல்லை, வாழ முடியாமலோ அந்தக் காட்டுக்குள் அவர் இருப்பது போலத்தான் தோன்றியது. அவரோ வாயைத் திறந்து பேசவேயில்லை. ஒருவேளை அவர் ஊமையோ என்று கூட எனக்குத் தோன்றியது.
‘சாமி! எனக்கு நீங்க உபதேசம் செய்யணுங்க. எனக்கு விதி இருக்கறதாலதான் உங்களை தரிசனம் செய்ய முடிஞ்சதா நான் நம்பறேன். என்னை உங்க சீடனா நீங்க ஏத்துக்கணுங்க. கருப்பனை நான் நம்பினது வீண் போகலங்க. அவன் என்னை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டான்!’ என்று ஜோசப்தான் தொடர்ந்து பேசினார். ஆனால், அந்த சித்தரோ அந்தப் பேச்சில் ஒரு பாதிப்புக்கு ஆளானது போலவே தெரியவில்லை. அவரது மெளனம் தொடர்ந்தது.
‘சாமி! இப்படி மௌனமா இருக்கறதும் ஒரு பாஷைதான். ஆனா, மௌனத்தால பெரிய விஷயங்களைத்தான் புரிஞ்சுக்க முடியும். அவ்வளவு அறிவோ பக்குவமோ எனக்கு இல்லைங்க...’ - ஜோசப் அவர் மௌனத்தை உடைக்க முயற்சி செய்தார். ஆனாலும் அந்த சித்தர் லேசாகச் சிரித்தாரேயன்றி ஒரு வார்த்தை கூட பதிலுக்குப் பேசவில்லை. அதற்குமேல் என்ன சொல்லி அவரைப் பேச வைப்பது என்று ஜோசப் சந்திரனுக்கும் தெரியவில்லை.
அந்த சித்தர் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டார். அவரின் முதுகும், குந்தும் சதைப்பாகமும் நன்றாகவே தெரிந்தது. முதல் தடவையாக பார்க்கவும், அந்தக் காட்சி மனதை என்னவோ செய்தது. அருவருப்பு முதல் திகைப்பு, வெட்கம், பரபரப்பு என பலவித உணர்வுகள் தோன்றின. ஆனால் நேரம் செல்லச் செல்ல அந்த உணர்வுகள் சக்தி இழந்து, அவரின் தோற்றம் சகஜமான ஒன்றாக மாறுவதையும் நான் உணர்ந்தேன்.
வெளியே முற்றாக இருட்டிவிட்டது. அந்த சித்தர் எங்களை வெளியே போகச் சொல்லவில்லை. அதற்காக எங்களோடு பேசி ஜோசப் விரும்பியது போல நடந்து கொள்ளவுமில்லை. ஜோசப்பும் ஏமாற்றத்தை உணர ஆரம்பித்தார். நான் அருகே சென்று காதைக் கடித்தேன். ‘இவர்கிட்ட நாம பேசித் தெரிஞ்சிக்க எதுவும் இருக்கற மாதிரி தெரியல. இவர் ஒரு மனநோயாளியா இருக்கக்கூட வாய்ப்பு இருக்கு. நாம பொழுது விடியவும் புறப்படுவோம். ஊருக்குப் போய் நம்ம வேலைய பார்ப்போம். இப்படி நாம வந்து இவர்கிட்ட வழிஞ்ச விஷயம் வெளிய தெரிஞ்சா - குறிப்பா நம்ம டிபார்ட்மென்ட் ஆட்களுக்குத் தெரிஞ்சா - நம்ம இரண்டு பேரையும் மரை கழண்ட கேஸாதான் நினைப்பாங்க!’ - என்றேன்.
ஜோசப் முதல்முறையாக என்னை மிகக் கடுமையாகப் பார்த்தார். பின், ‘அவர் பேசுவார்... இப்ப கூட பேசிக்கிட்டுதான் இருக்கார். அது உங்களுக்குப் புரியல. இது நமக்கு ஒரு சோதனை கணபதி சுப்ரமணியன்... இதை நாம வெற்றி கொண்டே ஆகணும்!’ என்றார். ‘எனக்கு ராத்திரிப் பொழுதை இந்த இடத்துல எப்படிக் கடத்தப் போறோமோனு இருக்கு. இந்தக் குளிர், தனிமை, நடுவுல மிருகங்கள் ஏதாவது வந்தா அதை சோதனைனு நீங்க சொல்லுங்க. நான் ஒத்துக்கறேன். இவர் பேசறார்னு நீங்க சொல்றதை என்னால ஒத்துக்க முடியாது. மனுஷனுக்கு வாய்னு ஒண்ணு கொடுத்துருக்கறது சாப்பிட, பேச... இந்த இரண்டுக்காகவும்தான். இவர் சாப்பிட மட்டும்தான்னு நினைக்கறார் போல இருக்கு’ என்று என் கருத்தை நான் கூறினேன்.
அவர் காதில் நிச்சயம் விழுந்திருக்க வேண்டும். ஆனால், அவரிடம் அதற்கும் ஒரு பதிலும் இல்லை. இந்த மாதிரி ஊமை மற்றும் செவிடர்களால் மட்டுமே இருக்க முடியும். காது கேட்க முடிந்த ஒருவரால் எப்படி எந்த எதிரொலிப்பும் இன்றி இருக்க முடியும்? இருக்க முடியும் என்றபோதிலும் ‘காரணம்’ என்று ஒன்று அதற்கு இருக்க வேண்டுமே?’’ - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...
அந்த இடிச் சப்தம் சென்னையிலிருந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த கணபதி சுப்ரமணியன் காதிலும் விழுந்தது. ‘‘என்னய்யா... அங்கயும் மழையா? இப்படி இடிச்சப்தம் கேட்குதே?’’
‘‘ஆமாய் யா... கடும் மழை! இடிச் சப்தம் அஞ்சு நொடிக்கு மேல நீட்சி கொண்டதா இருக்கு... நிச்சயம் பிரளய மழை. இதுல பேரழிவும் நிச்சயம்!’’
‘‘வள்ளுவரய்யா... உங்க பயணம் நல்லபடி முடியுமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!’’
‘‘ஆனா, எனக்கு சந்தேகமே இல்லைங்கய்யா... நீங்க பாகவதம் படிச்சிருக்கீங்களா?’’
‘‘அப்படின்னா?’’
‘‘சரிதான்... பாகவதம்ங்கறது கிருஷ்ண பரமாத்மாவோட கதையைச் சொல்ற புராணம். அதுல கிருஷ்ணர் ெஜயிலுக்குள்ள பிறந்து அவங்க அப்பாவான நந்தகோபரால இடம் மாறி யசோதையம்மா இருக்கற கோகுலத்துக்குப் போவார்.
அந்த ராத்திரில இப்ப பெய்துக்கிட்டிருக்கற மாதிரி அசுர மழை பெய்யும். ஆத்துல வெள்ளமும் கரை புரண்டு ஓடும். கும்மிருட்டுல நந்தகோபர் கிருஷ்ணனை ஒரு கூடைல வச்சு சுமந்துக்கிட்டு போவார். அப்ப மழை கிருஷ்ணன் மேல படாதபடி அஞ்சு தலை நாகம் படம் விரிச்சு குடையா தன் தலையை வச்சுக்கிட்டு கூட வரும். ஆத்து வெள்ளம்கூட இரு கூறா விலகி வழிவிடும். அதே மாதிரி எங்களுக்கும் ஒரு வழி பிறக்கும். அதுல நாங்க போய்க்கிட்டே இருப்போம்...’’
‘‘வள்ளுவரே... என்ன இது? துளிகூட நம்ப முடியாத ஃபேன்டஸியான ஒரு புராணக் கதையை உதாரணம் சொல்றீங்க! பாம்பு குடை பிடிக்கறதையும், ஆறு இரண்டாகி வழி விடறதையும் ஒரு விளையாட்டுக்குக் கூட ஒத்துக்க முடியாதே..?’’
‘‘அது உங்க விருப்பம்... நேரடியா இப்படித்தான் நடக்கும்னு நான் சொல்லலை! அதுக்குப் பொருள் என்னன்னா, பஞ்சபூதங்கள்கிட்ட இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும்ங்கறதுதான்!’’
‘‘அப்ப சுருக்கமா அப்படியே நேரா சொல்லியிருக்கலாமே... எதுக்கு இந்த மிகையான நம்ப முடியாத கற்பனை...’’ - வர்ஷன் இடி, மழை, மின்னல் நடுவே காரைச் செலுத்தியபடி இருக்க, காருக்குள் ப்ளூ டூத் தயவில் ப்ரியாவும் வள்ளுவரும் உட்கார்ந்த இடத்தில் கேட்க முடிந்த விதத்தில் கணபதி சுப்ரமணியனின் கேள்வி இருந்தது.
‘‘அய்யா... உங்களுக்கு வயசான அளவு உங்க சிந்தனைகளுக்கு வயசாகலை. அதான் இப்படி கேட்டுட்டீங்க! நான் சொன்ன புராணக் கதை பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு நடந்தது. அது நான் சொன்ன மாதிரி மிகையான கற்பனைனு நீங்க சொல்ற விதத்துல மட்டும் இல்லாம போயிருந்தா, இப்ப அதோட வடிவமே வேற மாதிரி ஆகியிருக்கும். அவ்வளவு ஏன்... அந்தப் புராண வரலாறு ஒரு சில தலைமுறைகளைக் கூட கடந்திருக்காது. அழிஞ்சி கூடப் போயிருக்கும். ஆனா, இப்பவும் பாகவதம் அப்படியே இருக்குன்னா அதுக்குள்ள இருக்கற நீங்க மிகைனு நினைக்கற விஷயங்கள்தான்...’’ - வள்ளுவர் சொல்ல வருவது ப்ரியாவுக்குப் புரிந்தது.
ஆனாலும் கணபதி சுப்ரமணியன் அதை மறுத்தவராக, ‘‘வள்ளுவரே! அந்தப் பேச்சை விடுங்க. பார்த்துப் போங்க. அந்தப் பலகணி மட்டும் கிடைச்சுட்டா, அது போதும். இப்ப போய் நான் இப்படி இங்க கால் ஒடிஞ்சு கிடக்கறேனேனு என் மனசுதான் அடிச்சிக்குது. அந்தப் போலீஸ் ஆபீஸர் வேற அப்பப்ப நேர்ல வந்து என்கிட்ட எதையாவது பேசிட்டுப் போறாரு. அவர் என் மேல காட்டற அக்கறையைப் பார்த்தா, அவருக்குப் பெரிய அளவுல பிரஷர் இருக்கணும்னு நல்லா தெரியுது. குறிப்பா, டெல்லில இருக்கற அந்தச் சாமியாரால உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னும் பயமா இருக்கு...’’
‘‘அதெல்லாம் எதுவும் ஆகாது. உங்களுக்கு நான் இப்ப சுருக்கமா ஒரு விஷயத்தைச் சொல்றேன். புரிஞ்சிக்க முடிஞ்சா புரிஞ்சிக்குங்க. அந்தக் காலப் பலகணியை நாம தேடலை... அதுதான் நம்மைத் தேடுது! உடனே காலப் பலகணி என்ன ஆறறிவுள்ள உயிரா... அதுக்கு அறிவிருக்கா... அதால செயல்பட முடியுமானு கேள்விகள் எழலாம். எழட்டும்! ஆனா நான் இப்ப சொன்னதுதான் சரியான விளக்கம். நாம அதைத் தேடலை. அதுதான் நம்மைத் தேடுது!’’
‘‘வள்ளுவரய்யா... என்னாச்சு உங்களுக்கு? இப்படிக் குழப்பினா எப்படி?’’
‘‘குழம்புங்க... யோசிச்சுக்கிட்டே இருங்க. நான் அப்பப்ப பேசறேன். இப்ப ஓய்வெடுங்க. இங்க வர்ஷன் தம்பி ெராம்ப சிரமத்தோட காரை ஓட்டிக்கிட்டு இருக்காரு. நம்ம அரட்டை அவருக்கு இடைஞ்சலா ஆகிடலாம்...’’ - என்று போனை கட் செய்தார் வள்ளுவர். வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. காரை ஓட்டுவதே சிரமமாக இருந்தது. பக்கவாட்டு மைல் கல், நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை இருப்பதை உணர்த்தியது. நான்கு வழிப்பாதையாக இருப்பதால் அந்த மழையிலும் சற்று வேகமாகச் செல்ல முடிந்தது. வள்ளுவரை ப்ரியா இப்போது பிடித்துக்கொண்டாள். ‘‘அய்யா... ‘நாம அதைத் தேடலை, நம்பளதான் அது தேடுது’ன்னு நீங்க சொன்னதைக் கேட்டு எனக்கு பயங்கர ஷாக்! நடக்கற ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும்போது, நீங்க சொன்னதுதான் சரின்னும் தோணுது!’’ வர்ஷன் அதைக் கேட்டு அதிர்வை முகத்தில் காட்டினான். அவன் அப்படி நினைக்காததே காரணம். அவளோ தொடர்ந்தாள்... ‘‘நானும் வர்ஷனும் இந்தப் பலகணி விஷயத்துல சம்பந்தமே இல்லாதவங்க. நீங்களும் என் தாத்தாவைத்தான் பாக்க வந்தீங்க. அவர்தான் இதைக் கண்டுபிடிக்கணும்னும் அப்ப ஒரு நிலை இருந்தது. நீங்க செத்துப் போயிடப் போறதா நம்பினீங்க. ஆனா, அப்படி நடக்கலை. தாத்தா அதைத் தேடி புறப்பட்டும் அவரால போக முடியலை. அவர் விரும்பினா கூட நம்மோட வர முடியாதபடி கால்ல அடிபட்டு ஓய்வெடுக்கும்படி ஆயிடிச்சு.
இறுதியில நீங்க, நான், வர்ஷன்னு மூணு பேர் இப்ப இந்தத் தேடல்ல இருக்கோம். ரொம்ப தந்திரமா இந்தப் பலகணி விஷயத்துல நடந்துக்க முயற்சி செய்த அவ்வளவு பேரும் இறந்துட்டாங்க. அந்தத் தந்திரமான செயலுக்கு உதவி செய்த என் வீட்டு வேலைக்காரிகூட இறந்து போய், ஆவியா நடமாடினதுதான் இதுல உச்சகட்டம்!
அந்த மரணம்தான் திரும்ப உங்களை எங்களோட இறுக்கமா கொண்டு வந்து சேர்த்தது. விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட அவ்வளவையும் மூட நம்பிக்கையா மட்டுமே பார்த்த நானும் வர்ஷனும், முத்தழகு ஆவி அனுபவத்தால பெரிய மனமாற்றத்துக்கு ஆளானோம். நம் அறிவு, அனுபவம்... இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட சில விஷயங்களும் இருக்கு. அதைத் தெரிஞ்சிக்கணும்னா விஞ்ஞான அகந்தை கூடாதுங்கறது தெரிஞ்சுது. கிணறோட ஆழம் தெரியணும்னா அதுல இறங்கி மூழ்கிப் பார்த்து தெரிஞ்சிக்கற மாதிரி இந்த அனுபவங்களுக்கு ஆட்பட இதுல இறங்கினாதான் புரியும்ங்கற தெளிவும் எனக்கும் வர்ஷனுக்கும் ஏற்பட்டது. அதனாலதான் இந்த நொடி வரை ஒவ்வொரு அடியா வச்சு இதுல நாங்க உங்க கூட பயணம் செய்துக்கிட்டு இருக்கோம்.
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, எந்த ஒரு விஷயமும் நாம நினைச்ச மாதிரி நினைச்ச திசையிலயே நடக்கல. ஆனா, அதுக்காக எதுவும் நடக்காமலும் போகல. அது பாட்டுக்கு நடந்துக்கிட்டே இருக்கு; அதுல நாமளும் நடந்துக்கிட்டு இருக்கோம். நீங்க சொன்ன மாதிரி அது காட்டற வழில நாம போய்க்கிட்டே இருக்கோம். ஆனா, நாமதான் தேடிப் போறதா நினைச்சுக்கறோம்!’’ ப்ரியா வெகு அழகாய் அவர் கருத்தை ஆமோதித்த விதம் வர்ஷனையும் ஒப்புக்கொள்ள வைத்தது.
‘‘ப்ரியா! ரொம்ப ஷார்ட் அண்ட் க்யூட்டா நீ நம்ம நிலையைச் சொல்லிட்டே. அதுதான் உண்மை. இந்த பூமில எவ்வளவோ கோடி பேர், ஆனா நம்ம மூணு பேருக்குத்தான் இந்த விஷயத்துல சம்பந்தம் உருவாகியிருக்கு. நிஜமா சொல்றேன், அந்தக் காலப் பலகணியை நான் இப்ப கடவுளாவே நினைக்கறேன். அது ஒரு சுவடிக் கட்டாவோ... இல்லை, நாஸ்டர்டாமஸ் நாலு வரில எழுதி வச்ச ப்ரடிக்ஷனாவோ... இல்லை, பரமபத வரைபடம் மாதிரி குறியீடுகளாலயும், சித்திரங்களாலயும் வருங்கால நிகழ்வுகளைச் சொல்றதாவோ இருக்கலாம். என் யூகப்படி பார்த்தா அது ஒரு புத்தகம் போன்ற அறிவுப் புதையல் எனப்படும் ஜடம். ஆனாலும் அதை சரஸ்வதி மாதிரி ஒரு தேவதை கைல இருக்கற விஷயமாத்தான் பாக்கறேன். அந்த சரஸ்வதிதான் நம்மை வரவழைச்சு வழிகாட்டிக்கிட்டு இருக்கணும்னும் இப்ப நினைக்கறேன்!’’ வர்ஷனும் தன் எண்ண அலைகளை சரஸ்வதி வரை கொண்டு சென்று நிறுத்தினான். சுவாரஸ்யமான அந்தப் பேச்சோடு மதுரை எல்லையைத் தொடவும் டோல் வரிக்கான பிளாக் தடை செய்தது. சென்னையில் இருந்து வரும் வழியெங்கும் டோல் வரியில் கட்டி வந்த தொகை அறுநூறு ரூபாயைக் கடந்திருந்தது.
அரசாங்கமே ஒரு ரவுடியாக மாறி தண்டல் வசூல் பண்ணுவது போல்தான் இருந்தது. கார் வாங்கும்போதே சாலை வரி என்று ஒரு ெபரும் தொகையை அழுதும், இப்படி சாலையில் ஓட்டும்போது ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் ‘எடு... எடு...’ என்று அது வசூலிப்பதை என்ன முயன்றும் நியாயப்படுத்திக் கொள்ள வர்ஷனால் முடியவில்லை.
ேராடு என்பது என்ன தொழிற்சாலை போல சம்பாதிப்பதற்கான களமா? ஒரு அரசாங்கமே இப்படிக் கொள்ளை அடிக்கலாமா? அதற்கு பராமரிப்புச் செலவு இருக்கிறது என்கிற அந்த ஒரு சின்ன நியாயம் இந்தக் கொள்ளையை நியாயப்படுத்திவிடுமா? ரோடு போட்டு பராமரிப்பது அரசாங்கத்தின் கடமை இல்லையா? வர்ஷனுக்கு பணம் கொடுக்கும்போது குமுறியது மனது. அந்தக் கூண்டில் அமர்ந்திருப்பவரிடம், ‘‘நான் நூறு சதவீத வயித்தெரிச்சலோட தர்றேன் இந்தப் பணத்தை... இதை வச்சுப் பிழைக்க நினைக்கற யாரும் நிச்சயம் நல்லவிதமா வாழ மாட்டாங்க. நாசமாத்தான் போவாங்க!’’ என்றான்.
பணத்தை வாங்கிக்கொண்டு ரசீது தருபவரோ, ‘‘இப்படிப்பட்ட குமுறல்களைக் கேட்டு புளிச்சுப் போச்சு சார்...’’ என்றார், ரசீது தந்தபடி. வள்ளுவர் பெரிதாகச் சிரித்தார். ‘‘என்னய்யா? என் வயித்தெரிச்சல் உங்களுக்கு சிரிப்பா இருக்கா?’’ என்று கேட்டான் வர்ஷனும். ‘‘சிரிப்புல பல ரகம் இருக்கு தம்பி... அதுல ஒவ்வொண்ணுக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. நான் சிரிச்சது நம்ப கையாலாகாத் தனத்தை நினைச்சு... ஆனா, நாமதான் காலப் பலகணிங்கற ஒரு பொக்கிஷத்தையும் அடையப் போறோம். என்ன ஒரு முரண் பாத்தியா?’’ - என்றார். காரும் மதுரை நகர சந்தடிக்குள் ஒரு லாட்ைஜத் தேடி ஓடியபடியே இருந்தது!
அந்த இரவு நேரத்தில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தார் கணபதி சுப்ரமணியன். வெளியே மெயின் கேட்டை ஒட்டி ஒரு கார் வந்து நின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் கார். வாட்ச்மேன் தங்கவேலு யாரோ வி.ஐ.பி என்று விசாரிக்கக்கூடத் தோன்றாமல் கேட்டைத் திறந்தான். உள்ளே... அந்த டெல்லி சாமியாரான சதுர்வேதி!
"அந்தக் காலப் பலகணியை நாம தேடலை... அதுதான் நம்மைத் தேடுது. உடனே அது என்ன ஆறறிவுள்ள உயிரா... அதுக்கு அறிவிருக்கானு கேள்விகள் எழலாம்!"
‘‘அரசியல்வாதி வீட்டுல பெண் எடுக்க நிச்சயம் செய்தது தப்பாப் போச்சு!’’ ‘‘ஏன்... என்னாச்சு?’’ ‘‘சண்டை வரும்போது எரிக்கறதுக்கு, மாமியாரின் உருவபொம்மையை முன்கூட்டியே கேட்குது அந்தப் பொண்ணு!’’
‘‘கட்சியிலிருந்து எல்லோரும் விலகின விரக்தியில, தலைவர் சினிமா பார்க்கக் கிளம்பிட்டாரா... என்ன படம்?’’ ‘‘தனி ஒருவன்!’’
‘‘கஜினியே வருகன்னு போஸ்டர் ஒட்டினதுக்கு தலைவர் ஏன் டென்ஷன் ஆகிட்டார்..?’’ ‘‘அவர் மீதான பதினேழாவது கேஸ் விசாரணைக்கு கோர்ட்டுக்கு வர்றப்ப ஒட்டினாங்களாம்!’’ - எஸ்.ராமன், சென்னை
- தொடரும்...
|