ஃபேன்டஸி கதைகள்



தங்க காந்தம்

செல்வு @selvu

நீண்ட நாட்களுக்கும் முன்பாக சிறியதும் இல்லாத பெரியதும் இல்லாத அந்த காந்தத்தினை டி.வியின் அடியில் வைத்திருந்தான். எதற்காக அங்கே வைத்தான் என்றெல்லாம் நினைவில் இல்லை. ஒருநாள் அதை எடுத்து பழைய இடத்திலேயே வைக்கலாம் என்று வெளியே இழுத்தபோது அதில் தங்கச் சங்கிலி ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது.

டி.வி பெட்டியின் அடியில் இருக்கும் காந்தத்தில் எப்படி இப்படி ஒரு தங்கச் சங்கிலி? யாராக இருந்தாலும் சந்தேகிப்பார்கள்தானே? அவனுக்கும் சந்தேகம் வரத்தான் செய்தது. இத்தனைக்கும் அவன் வீட்டில் தங்கச் சங்கிலி அணியும் நபர்கள் யாருமில்லை. இன்னும் கல்யாணம் கூட ஆகியிருக்கவில்லையாததால், பக்கத்து வீட்டுப் பெண்களைக் காட்டி அதே மாதிரி தங்கச் சங்கிலி வேண்டுமென நச்சரிக்க ஒரு மனைவி கூட இல்லை.  அது எங்கிருந்து வந்திருக்கும் என்று யோசித்தான். தெரியவில்லை!

தங்கச் சங்கிலி கிடைத்த மகிழ்ச்சியில் காந்தத்தினை டி.வியின் அடியிலேயே தள்ளி வைத்துவிட்டு, அது தங்கம்தானா என்பதை அறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டான். ஆமாம், அது தங்கமேதான். எப்படி இங்கே வந்தது என்பதைக் கண்டுபிடிக்க அவனுக்குத் தெரிந்த சாத்தியங்களையெல்லாம் யோசித்துப் பார்த்தான். ஒன்றிலிருந்தும் பதில் கிடைத்தபாடில்லை. அந்த சம்பவத்தை அப்படியே மறந்தும் விட்டான்.

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. டி.வியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தபோது, காந்தத்தின் அருகில் ஏதோ வந்து விழுந்ததைப் போன்ற சத்தம் கேட்டது. பல்லியோ, பூச்சியோ என்று நினைத்துக்கொண்டு டி.வி நிகழ்ச்சியில் மூழ்கினான். சென்னை தண்ணீரில் மூழ்கிவிட்டதென்று செய்தி வாசித்துக் கொண்டிருந்தார் ஒரு பெண். மறுநாள் காலையில் பார்த்தபோது அந்தக் காந்தத்தில் மீண்டும் ஒரு தங்கச் சங்கிலி.
பயந்தே விட்டான். எங்கிருந்து வந்திருக்கும்? யாராவது வேண்டுமென்றே வந்து வீசிவிட்டுச் செல்கிறார்களா? இடைத்தேர்தல்கூட இல்லையே? பேய் ஏதாவது?

கொஞ்சம் பயந்துபோனாலும், சந்தோஷம் இல்லாமல் இல்லை. இரண்டு தங்கச் சங்கிலிகள் சும்மா கிடைத்தால் வாயெல்லாம் பல்லாகச் சிரிப்பார்கள்தானே? அப்படிச் சிரித்துக்கொண்டே அடுத்த நாளும் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது காந்தத்தில் ஒரு சத்தம். மறுபடியும் ஒரு தங்கச் சங்கிலி. நேற்று இதேபோல சத்தம் கேட்டு தங்கச் சங்கிலி வந்ததாக சந்தேகித்த நேரத்தையும், இப்பொழுது வந்த நேரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தான். ஏதோ புரிந்தது. இதற்கு முன்பும் செய்தி பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் வந்தது. இப்பொழுதும் செய்தி நேரத்தில்தான் வந்தது. அப்படியானால் செய்திக்கும், தங்கச் சங்கிலிக்கும், டி.வி.யின் அடியிலிருக்கும் காந்தத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?



அடுத்த நாள் வரை காத்திருக்க முடிவெடுத்தான். அடுத்த நாளும் செய்தி வந்தது. செய்தி முடியும் வரையிலும் காத்திருந்தான். தங்கச் சங்கிலியையும் காணோம், சத்தத்தையும் காணோம். பெரும் குழப்பம். இப்படி தினமும் செய்தி வரும்போதெல்லாம் எத்தனையோ சோதனைகளைச் செய்ததில், இமயமலையை விழுங்கிவிடுமளவு ஒரு உண்மையைக் கண்டுபிடித்தான். அவன் டி.வியின் அடியில் வைத்திருந்த காந்தம், செய்தி வாசிப்பாளரின் கழுத்திலிருந்த சங்கிலியைத்தான் ஈர்த்துக் கொண்டது. அதுவும் எல்லா நேரங்களிலும் ஈர்க்கவில்லை. செய்தி ஓடிக் கொண்டிருக்கும்போது, இவன் ரிமோட்டில் சில குறிப்பிட்ட பட்டன்களை அழுத்தினால், செய்தி வாசிப்பவரின் கழுத்திலிருக்கும் தங்கச் சங்கிலி, இவன் வீட்டிலிருக்கும் காந்தத்திற்கு இடம் மாறியது.

சந்தோஷத்தில் அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதே வித்தையை விளம்பரங்களின்போதெல்லாம் செய்து பார்த்தான். தங்க நகை விளம்பரங்களெல்லாம் எத்தனை வருகின்றன! அப்போதெல்லாம் இந்த காந்தம் வேலை செய்யுமாயின் சீக்கிரத்திலேயே ஒரு நகைக் கடை வைத்துவிடலாமே? அப்படித்தான் நினைத்து முயன்று பார்த்தான். ம்ஹும். ‘செய்தி வாசிப்பாளரின் நகையை மட்டுமே நான் இழுத்துக் கொள்வேன்’ என்று காந்தம் அடம்பிடித்தது. சரி, பேராசை பெருநஷ்டம் என்று எண்ணிக்கொண்டு தினமும் செய்தி வரும் வரையில் காத்திருந்தான். செய்தி வந்ததும் ரிமோட்டில் அந்தக் குறிப்பிட்ட பட்டன்களை அழுத்தி, செய்தி வாசிப்பாளரின் கழுத்திலிருக்கும் நகைகளை இழுத்துக்கொள்வான். பத்தாவது நாள் அப்படி அவன் பட்டன்களை அழுத்தி, அந்த நகை காந்தத்தில் ஒட்டியதும் அதை எடுப்பதற்காகக் காந்தத்தின் அருகில் சென்றபோது நான்கைந்து போலீஸ்காரர்கள் கையில் துப்பாக்கியுடன் வீடு புகுந்து, கையும் நகையுமாகப் பிடித்துவிட்டார்கள்.

எல்லாம் சரிதான்! செய்தி வாசிப்பாளரின் கழுத்திலிருக்கும் நகைகள் காணாமல் போவதற்கு எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இவன்தான் காரணமென்று எப்படிக் கண்டுபிடித்தார்கள்? ஆரம்பத்தில் அவர்களுக்கும் பெரும் குழப்பமாகத்தான் இருந்தது. அவர்களும் நான்கைந்து சோதனைகளைச் செய்து பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. தனியாக உட்கார்ந்து யோசித்து ஒரு திட்டம் போட்டார்கள். அதாவது அந்த செய்தி வாசிப்பாளர் அணியும் நகையில் ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்திவிடுவது. பின்னர் அது காட்டும் இடத்திற்குச் சென்று தேடுவது. மிக எளிதான யோசனை. அது அவர்கள் நினைத்தபடியே மிகச் சரியாக வேலை செய்து, இவனைக் காட்டிக் கொடுத்து விட்டது. இப்போது ‘அந்த காந்தம் எப்படி அதிசயமாகத் தங்க நகைகளை இழுத்தது’ என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

"தங்க நகை விளம்பரங்களெல்லாம் எத்தனை வருகின்றன! அப்போதெல்லாம் இந்த காந்தம் வேலை செய்யுமாயின் சீக்கிரத்திலேயே ஒரு நகைக் கடை வைத்துவிடலாமே?"