ரொமான்டிக் ஜீவா... காமெடி ஹன்சிகா!



போக்கிரி ராஜா ஸ்பெஷல்

‘போக்கிரி ராஜா’வோட முழுக்கதையும் ரெடியானதும் என்னோட உதவியாளர்கள், ‘ஜீவா சார்தான் இதுக்கு கரெக்டான சாய்ஸ்’னு சொன்னாங்க. நாங்க நெனச்சது மாதிரியே ஹீரோ கிடைச்சாச்சு. அதே மாதிரி ஹன்சிகாகிட்ட கதை சொல்லும்போது, பக்கத்தில் இருந்த அவங்க அம்மாவே விழுந்து விழுந்து சிரிச்சிட்டாங்க. ‘ஹன்சிகா, இதுல கமிட் ஆகிக்கோ... சூப்பரான கதை’னு எனக்கு குட் சர்ட்டிபிகேட் வேற குடுத்தாங்க. அப்பவே தோணுச்சு, இது சூப்பர் ஹிட்னு!’’ - நம்பிக்கை மின்ன பேசுகிறார், இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை அடுத்து அவர் இயக்கும் படம் இது.

‘‘முதல் படம் வெளிவந்த சமயத்திலேயே ‘மனசைத் தட்டி எழுப்புகிற கதைகள் இங்கே எப்பவும் ஜெயிக்கும். எப்போதும் மென்மையான விஷயங்களை மக்கள் ரசிப்பாங்க’னு நான் சொல்லியிருந்தேன். அது ஒரு வித்தியாசமான கதைக்களம். பரீட்சார்த்தமான முயற்சி களுக்கு நம்ம ஊர்ல எப்பவும் வரவேற்பு கிடைச்சிடும். எனக்கும் கிடைச்சுது!’’ - லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு, தொடர்கிறார் ராம்பிரகாஷ்.

‘‘எப்படி வந்திருக்கு படம்?’’

‘‘க்ளைமேக்ஸ் வரை ஷூட்டிங் முடிச்சிட்டோம். ரொம்ப நல்லா வந்திருக்கு. ரஜினி சார் படத்தோட டைட்டில் கிடைச்சிருக்கறது இந்தக் கதைக்கு பெரிய ப்ளஸ். லுங்கியைக்  கட்டிக்கிட்டு லோக்கல் பையனா பார்த்த ஜீவா சார், இதுல சாஃப்ட்வேர்  எஞ்சினியர். ஸோ, அவரோட லுக், ஸ்டைல் எல்லாமே கலக்கும். ஜீவாவும், ஹன்சிகாவும் ஒரே ஆபீஸ்ல வொர்க் பண்றாங்க. ரெண்டு பேருக்குள்ளேயும் காதல். ஒரு சின்ன பிரச்னையால அவங்க லவ் பிரியுது. மறுபடியும் அவங்க சேர்ந்தாங்களா, இல்லையாங்கறது மீதிக் கதை. இது ரொமான்டிக் காமெடி வகை படம். படத்துல இன்னொரு ஹீரோ சிபிராஜ். கதையோட ஒன்லைன் சிம்பிளா இருந்தாலும், ஒவ்வொரு சீனும்,  ஒவ்வொரு ஃபிரேமும் ரொம்பவே ஃப்ரெஷ்ஷா தெரியும். அதுக்கு நாங்க கேரன்டி!’’

‘‘முதல் படத்திலும் தினேஷ் - நகுல்னு ரெண்டு ஹீரோக்கள். இதிலும் டபுள் ஹீரோஸ்?’’

‘‘ஆமாம். இந்த காம்பினேஷன் யதார்த்தமா அமைஞ்சது. வழக்கமா ஒரு படத்துல ரெண்டு ஹீரோக்கள் இருந்தாலே, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி பொறாமையை மறைமுகமா வெளிக்காட்ட வாய்ப்பிருக்கும். நமக்கு சீன்ஸ் கம்மி பண்ணிட்டு, அவருக்கு சீன்ஸ் நிறைய வச்சிடுவாரோனு நம்ம மேல சின்ன சந்தேகத்தோடவே அப்ரோச் பண்ணுவாங்க. ஆனா, ஜீவா சாரும், சிபி சாரும் ஏற்கனவே செம ஃப்ரெண்ட்ஸ். அதுலயும் ஜீவா வெளிப்படையாவே ‘எங்க ரெண்டு பேர் கேரக்டருக்கும் சமமா முக்கியத்துவம் குடுங்க பாஸ்’னு ஆரம்பத்துலயே சொல்லிட்டார். ஷூட்டிங் அப்போ, இன்னும் ஒரு படி மேல போய், ‘என்னோட கேரக்டர் கம்மியானாலும் பரவாயில்லை. சிபி கேரக்டரை இன்னும் ஜாஸ்தி பண்ணுங்க. அவருக்கு ஸ்கோப் அதிகம்!’னு சொன்னார். அவங்களோட இந்த கெமிஸ்ட்ரி எனக்குப் பிடிச்சிருந்தது!’’



‘‘ஹன்சிகா எப்படி இருக்காங்க..?’’

‘‘ ‘ரோமியோ ஜூலியட்’ல இருந்துதான் எனக்கு ஹன்சிகாவோட பர்ஃபாமென்ஸ் பிடிக்க ஆரம்பிச்சது. அதுல அசத்தியிருந்தாங்க. இந்தப் படத்துலயும் அவங்களுக்கு காமெடி செமயா வொர்க் அவுட் ஆகியிருக்கு. தமிழ் டயலாக்ஸை அவங்க மனப்பாடம் பண்ணி முழுசா சொல்ற அளவுக்கு வரலைன்னாலும் அதுக்கு அர்த்தம் என்னனு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டுதான் நடிக்கிறாங்க. பாண்டிச்சேரியில ஷூட்டிங் நடந்தப்போ ஹன்சிகா மெயின் ரோட்ல நடந்து வர்ற சீன்... பாதுகாப்புக்கு ஆட்கள் யாரும் இல்லாம நடிச்சிட்டிருந்தாங்க. ஷாட் ஓகே ஆனதை கவனிக்காம, கொஞ்சம் கூடுதலா ரோட்ல அவங்க நடக்க, அங்கே உள்ள சிலர் அடையாளம் கண்டுபிடிச்சு ஹன்சிகாவை சூழந்துட்டாங்க. அப்புறம், ஜீவாவும் சிபியும் சேர்ந்து ஹன்சிகாவைக் காப்பாத்தினாங்க. இப்படிச் சின்னச் சின்ன இன்ஸிடென்ட்ஸ் நடந்திருக்கு!’’

‘‘என்ன சொல்றார் ஜீவா?’’

‘‘ஜீவா ஒரு புதுமை விரும்பி. வித்தியாசம் வித்தியாசமான ஜானர்ல படங்கள் நடிக்கணும்னு ஆர்வமா இருக்கார். நானும் என் அடுத்தடுத்த படங்களை புதிய சோதனை முயற்சிகளாவே பார்த்து செய்ய முயற்சிக்கறேன். இந்தப் படத்துக்கு அப்புறம் ஜீவா, பரீட்சார்த்தமான படங்கள் நிறைய தேர்ந்தெடுக்க ஆரம்பிச்சிடுவார்.’’

‘‘படத்துல வேற என்ன ஸ்பெஷல்?’’

‘‘ஜீவா, ஹன்சிகா, சிபி தவிர மனோபாலா, முனீஸ்காந்த், ‘யோகி’பாபுனு காமெடி ஆர்ட்டிஸ்ட்கள் நிறைய பேர் இருக்காங்க. என் முதல் படத்துல சின்னச் சின்ன கேரக்டர்கள் கூட காமெடியில கலக்கியிருப்பாங்க. இதிலும் அதை எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தோட ஸ்பெஷல்னு சொன்னா, அது இமான் மியூசிக்தான். என் முதல் படத்திலேயே இமான் இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, இந்தப் படத்துலதான் அவர் கிடைச்சிருக்கார். 3 பாடல்கள் போட்டுக் குடுத்திருக்கார்.  ராம் கோபால் வர்மா படங்கள் பண்ணின கேமராமேன் அஞ்சி இதுக்கு ஒளிப்பதிவு பண்றார். அவரோட முழுப்பெயர் ஆஞ்சநேயலு.



பொதுவா டிஜிட்டல் சினிமாவில் லைட்டிங் எக்ஸ்பரிமென்ட் பண்ணத் தேவையில்லைனு நினைப்பாங்க. ஆனா, இதுல அவர் லைட்டிங்ல விளையாடியிருக்கார். ஒவ்வொரு ஃபிரேமும் லைட்டிங்ல மிளிரும். என் முதல் பட எடிட்டர் சாபு ஜோசப், ஆர்ட் டைரக்டர் வனராஜ் இதிலும் உண்டு. இந்தப் படம் இவ்வளவு சீக்கிரம் க்ளைமேக்ஸ் வரை வந்ததுக்குக் காரணம் தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் சார்தான். இன்னொரு முக்கியமான விஷயம், ஹீரோயின் ஹன்சிகாவிற்கு படத்தோட கேமராமேன் அஞ்சி சாரை ரொம்பப் பிடிக்கும். காரணம், ஒவ்வொரு ஃபிரேம்லயும் ஹன்சிகாவை அழகா, க்யூட்டா காட்டியிருக்கார். அதனாலேயே ஹன்சிகா ஹேப்பி! இன்னும் ரெண்டு பாடல்கள் ஷூட் பண்ணிட்டோம்னா, படம் ரெடி!’’

‘‘உங்களப் பத்தி... ஜஸ்ட் ஒரு ரீவைண்ட்?’’

‘‘என் பூர்வீகம் கோவை பக்கம் அன்னூர். அப்பா பிசிக்கல் எஜுகேஷன் மாஸ்டரா இருந்தவர். நான் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் படிச்சிருக்கேன். மார்க்கெட்டிங் துறையில பல வருஷமா வேலை பார்த்த அனுபவம் இருக்கு. சின்னச் சின்ன படங்கள் நிறைய வொர்க் பண்ணியிருக்கேன். அப்புறம் ‘எங்கேயும் எப்போதும்’ படத்துல வொர்க் பண்ணினேன். அதன் பிறகுதான் ‘தமிழுக்கு எண்..’ படம் பண்ணினேன். இந்தப் படத்துக்கு அப்புறம் புதுசு புதுசா களங்கள் எடுத்து தொடர்ந்து படங்கள் பண்ற ஆசை இருக்கு. நிறைய
கனவுகள் காத்திருக்கு!’’

- மை.பாரதிராஜா