செல்போனில் கிளம்பும் பேய்!
‘‘பேய்னா ஒரு பாழடைஞ்ச பங்களாவுக்குள்ள இருந்து வரும். இல்லன்னா, சுடுகாட்டுல கல்லறையில இருந்து கிளம்பும். நாலு ஃப்ரெண்ட்ஸ்னா அதுல ஒருத்தன் பேய் பிடிச்சவனா இருப்பான். கடைசியா அதுல ஒரே ஒருத்தன் மட்டும் தப்பிப்பான். இப்படித்தான் ஹாலிவுட்ல இருந்து நம்மூர் வரை பேய்ப் படங்கள் இருந்துச்சு. ஆனா, இது வித்தியாசமான பேய். செல்போனுக்குள்ள இருந்து கிளம்புது... தலைக்கு மேல செல்போன் வச்சிட்டு தூங்குற பழக்கம் உங்களுக்கு இருந்தா, இனிமே அப்படிச் செய்யவே மாட்டீங்க!’’ - திகிலூட்டுகிறார் எஸ்.பாஸ்கர். சுந்தர்.சி தயாரித்து வரும் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் அறிமுக இயக்குநர். ஷார்ட் ஃபிலிமிலிருந்து சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார்.
‘‘இதுவரை ஏழு குறும்படங்கள் பண்ணியிருக்கேன். ‘திருடர்கள் ஜாக்கிரதை’ பார்ட் 1, பார்ட் 2, ‘ஜிகினா’, ‘மெடிக்கல் மிராக்கிள்’னு என்னோட ஷார்ட் ஃபிலிம்ஸ் எல்லாமே சுந்தர்.சி சாருக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னிக்கு அவரோட தயாரிப்பில் படம் இயக்கியிருக்கேன். அவரோட காமெடி சென்ஸ் பத்தி எல்லாருக்குமே தெரியும். இந்தப் படத்தோட டப்பிங் வொர்க் அப்போ, முழுப்படத்தையும் பார்த்து அவரே ரசிச்சு சிரிச்சது, எனக்கு ஹேப்பியா இருக்கு!’’
‘‘ஸ்டில்ஸ் எல்லாம் கலகலப்பா இருக்கே... நிஜமா இது ஹாரர்தானா?’’
‘‘இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் வொர்க் முடிச்சதும், சுந்தர்.சி சார்கிட்ட இடைவேளை வரை கதையைச் சொன்னேன். ‘காமெடி பின்னியிருக்கீங்க... சூப்பர். கதை பிடிச்சுப் போச்சு’னு சொன்னார். ‘எனக்கு சீரியஸா எழுத வராது. காமெடிதான் ஈஸியா வருது’னு அவர்கிட்ட சொன்னேன். ‘அதாம்பா ரொம்பக் கஷ்டமானது. யார வேணா அழ வச்சிடலாம். சிரிக்க வைக்கறதுதான் சிரமம்’னு சொல்லி, மீதிக் கதையைக் கேட்டார். இதுல இரண்டாவது பாதி முழுக்க திகில்.
சுந்தர்.சி சார் படம் மாதிரியே இதுலயும் நிறைய தெரிந்த முகங்கள். வைபவ் ஹீரோ. வேலையில்லா பட்டதாரியா வர்றார். அதே மாதிரி படிச்சு முடிச்சு வேலை தேடுற பொண்ணு ஓவியா. ஐஸ்வர்யா ராஜேஷ் டெலி மார்க்கெட்டிங்ல வேலை செய்யுறாங்க. ‘ஜானி’ ரஜினி கெட்டப்ல நீளமான மீசை வச்சு கருணாகரன். சாவு குத்து டான்ஸ் மாஸ்டரா வி.டி.வி கணேஷ்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்கோர் இருக்கும். யோகி பாபுவுக்கு நான் சீன் சொல்லிக் கொடுக்கும்போதே, அவரைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்திடும். ‘இப்படி பண்றீங்களே பாஸ்’னு கேட்பார். ஒருநாள் ஷூட்டிங் அப்போ, ஒரு ஸ்கூல் வேன் கிராஸ் ஆச்சு. அதில இருந்த குழந்தைங்க எல்லாருமே யோகி பாபுவை பார்த்து ‘பன்னிமூஞ்சி வாயா’னு கத்த, ‘பாஸ், நமக்கு குழந்தைங்க ஃபேன்ஸ் அதிகம் பாஸ்’னு சொல்லி சந்தோஷப்படுறார்.’’
‘‘வைபவ் எப்படி?’’
‘‘இந்தப் படத்துக்கு அப்புறம் தமிழ்ல பிஸியாகிடுவார் வைபவ். ஒரு சின்ன பிட் ஸாங்... அதுக்கு அவர் டான்ஸ் ஆடணும். அதுக்காக ஒரு நைட் ஃபுல்லா ப்ராக்டீஸ் பண்ணிட்டு வந்தார். ஷூட்டிங்ல சுத்தி இருந்த 2500 பேரும் அவருக்கு ஒரே கைதட்டல்தான். நான் சென்னைவாசி... அதனால எனக்கு வட சென்னை ஸ்லாங் நல்லா வரும். ‘ஐயோ கவிதா’னு ஒரு டயலாக்கை நார்த் மெட்ராஸ் ஸ்லாங்ல வைபவ் சொல்லணும். நான் அவருக்கு டயலாக் சொல்லிக் குடுத்துட்டு இருக்கும்போது, ஸ்பாட்டுக்கு சுந்தர்.சி சார் வந்திருக்கார். நான் அவரை கவனிக்கல. ‘ஐயோ கவிதா’ பர்ஃபெக்ஷன் வர்ற வரை வைபவை கொஞ்சம் பெண்ட் எடுக்க, ‘ஐயோ பாஸ்கர்... போதும்! அவரை விடுங்க... நான் எல்லாம் இப்படி யாரையும் ட்ரில் வாங்கினதில்லை!’னு சொல்லிட்டு சிரிச்சார். அதே மாதிரி ஹீரோயின்கள்கிட்ட கதை சொல்லும்போதே ரோப்ல கட்டி தொங்க விடுற சீன் எல்லாம் இருக்குனு சொன்னேன். ஓவியாவும், ஐஸ்வர்யாவுமே அதை எல்லாம் ரிஸ்க்கா பார்க்காம, ரசிச்சு பண்ணினாங்க!’’
‘‘பேய் படம்னாலே பாடல்கள் பக்கம் கவனம் செலுத்த மாட்டாங்களே?’’
‘‘இது ஒரு காமெடி ஹாரர். அதையும் தாண்டி சித்தார்த் விபின் மியூசிக்ல பாடல்கள் நல்லா வந்திருக்கு. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்குப் பிறகு இதுல அவர் பாடல்கள் பேசப்படும். சுந்தர்.சி சாரோட ஃபேவரிட் ஆர்ட் டைரக்டர் குருராஜ், இதுல செட் போட்டிருக்கார். சென்னை கடற்கரையில 12 நாட்கள் ஷூட்டிங் போச்சு. அங்கேயே செட் போட்டு எடுத்திருக்கோம். அடைமழைக்கு முன்னமே ஷூட்டிங்கை முடிச்சிட்டதால நிம்மதி. கேமராமேன் பாலசுப்ரமணியத்தோட அசோசியேட் பானுமுருகன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘ஆரண்ய காண்டம்’ காந்த், எடிட்டிங் கவனிக்கறார். இப்படி ஒரு டீம் அமைஞ்சதாலதான் பயமே இல்லாம எளிதா படம் பண்ண முடிஞ்சது!’’
‘‘உங்களப் பத்தி..?’’
‘‘அப்பாவுக்கு பூர்வீகம் கொடைக்கானல். ஆனா, என்னோட சொந்த ஊரே சென்னைதான். பி.பி.ஏ முடிச்சிருக்கேன். மார்க்கெட்டிங் துறையில இருந்திருக்கேன். என்னோட நண்பர்கள் நிறைய பேர் சினிமாவில் இருக்காங்க. அவங்களால கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க முடிஞ்சது. நான் சுந்தர்.சி சார்கிட்ட அசிஸ்டென்டா இருந்ததில்ல. அவரோட உறவினரும் இல்ல. ஆனாலும் எனக்கு இந்தப் பட வாய்ப்பைக் கொடுத்திருக்கார். முழுப்படத்தையும் அவர் பார்த்துட்டு சிரிச்ச பிறகுதான் எனக்கே ‘நாம நல்லா பண்ணியிருக்கோம்’னு ஒரு கான்ஃபிடன்ஸ் வந்திருக்கு. மழை வெள்ளம் ஓய்ந்து, சென்னை இயல்பு நிலைக்கு வந்ததும், ரிலீஸ் பண்ணலாம்னு ப்ளான் பாஸ்!’’
|