கவிதைக்காரர்கள் வீதி



தடயங்களை அழிக்கும்
அலைகள்
சாட்சியாய் இருப்பதில்லை.
- கவி கண்மணி, கட்டுமாவடி.

நடைப்பயிற்சியின்பொழுது
எதிர்ப்படும் சுவர்களில்
கண்ணீர் அஞ்சலி
சுவரொட்டிகளை
காணும்போதெல்லாம்,
சக வயதொத்தவர்களின்
விழிகள் மிரள்கின்றன.
- செ.ச.பிரபு, நெல்லை.

கூடைச் சேரில்
புன்னகைத்து
அமர்ந்திருக்கிறது  
கருப்பு வெள்ளை
பால்யம்.
- தர் பாரதி, மதுரை.



நின்ற பின்னும்
சுற்றிச் சுற்றி
விளையாடிக்கொண்டிருந்தது
குழந்தை
ஒருவேளை
கடவுள்
சாவி கொடுத்திருப்பாரோ?
- தளபதி கோபால், மோகனூர்.

விசாலமான தோட்டமிருந்த
பெரிய கிராமத்து
வீட்டை விற்று
ஆசையுடன் புதிதாய்
நகரத்தில் வாங்கிய
அடுக்குமாடிக் குடியிருப்பின்
ஏழாவது தளத்திலுள்ள
எண்ணூறு சதுர அடி வீட்டில்
பாப்பா தேடுகிறாள்
இரவில் சோறூட்டும்போது
முற்றத்தையும் நிலாவையும்.
- நூர்தீன், வலங்கைமான்

சிலந்தி வலையில்
இறந்து கிடக்கும்
வண்ணத்துப்பூச்சி
உயிர் மீண்டெழுவதாய்க்
காட்டிச் செல்கிறது காற்று!
- கீர்த்தி, கொளத்தூர்