தேர்தலில் போட்டியிடும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!
திகிலில் அரசியல் கட்சிகள்
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருந்தாலும், ஒரு தொழில் தொடங்கும்போது சில பல அப்ரூவல்களுக்காக சாதாரண பஞ்சாயத்து தலைவரிடம் போய் நிற்க வேண்டியிருக்கும் என்பது இந்திய மண்ணின் அரசியல் யதார்த்தம்.
ஆனால் இந்த விதியை தலைகீழாகப் புரட்டிப் போட நினைக்கிறது ஒரு தொழில் நிறுவனம். அதன் விளைவாக... கேரளாவில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தை இன்று இந்தியாவே கலக்கத்துடன் திரும்பிப் பார்க்கிறது.
ஒரு தனியார் நிறுவனம் தேர்தலில் நேரடியாகக் களமிறங்கியதும், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதும் சுதந்திர இந்தியாவுக்கு ரொம்பப் புதுசு. கேரளாவின் கிழக்கம்பலம் பஞ்சாயத்துதான் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள 19 வார்டுகளிலும் தன் வேட்பாளர்களை நிறுத்தி, அதில் 17 இடங்களில் வெற்றி பெற்று பஞ்சாயத்தைக் கைப்பற்றி இருக்கிறது கிட்டெக்ஸ் எனும் நிறுவனம்!
கேரளாவில் ஒரு தொழில் நிறுவனம் தொடங்குவது தற்கொலைக்கு சமம் என்பார்கள். போராட்டங்களால் வெற்றிகரமாக இழுத்து மூடப்பட்ட தொழிற்சாலைகள் அங்கு அநேகம். அப்படியொரு சூழலில் நின்று, ஜெயித்து ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் பிசினஸ் செய்வது பெரிய சாதனை. அதுதான் கிட்டெக்ஸ்! கிழக்கம்பலம் கிராமத்தில் பரந்து விரிந்திருக்கும் இதன் தொழிற்சாலையில்தான் அக்கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் வேலை செய்கிறார்கள்.
ஜவுளி முதல் மசாலா பாக்கெட் வரை சகலமும் தயார் செய்யும் இந்த நிறுவனத்துக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் தொந்தரவு அதிகம். ‘கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை பாதிக்கிறார்கள்’ என்று லோக்கல் அரசியல் புள்ளிகள் கொதிப்பதும், ‘எல்லாம் பாதுகாப்பான முறையில்தான் வெளியேற்றப்படுகின்றன’ என்று கிட்டெக்ஸ் கம்பெனி குதிப்பதும் இங்கு தொடர்கதை.
இதனாலேயே கிட்டெக்ஸ் நிறுவனத்துக்குத் தர வேண்டிய நிரந்தர லைசென்ஸைத் தராமல், வருடத்துக்கு ஒருமுறை ஊர்ப் பஞ்சாயத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு ரூல்ஸ் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அது எத்தனை நச்சு பிடித்த வேலை என்பது நமக்கே தெரியும். பார்த்தார்கள்... பஞ்சாயத்தே நமதாகிவிட்டால் இந்த பிக்கல் பிடுங்கல் இருக்காது எனக் கணக்குப் போட்டு களமிறங்கிவிட்டார்கள்.
கடந்த நவம்பர் 5 அன்று நடந்து முடிந்த கேரள பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது பிரதான கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தூக்கி வாரிப் போட்டது. காரணம், கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் மட்டும் மக்கள் இருபெரும் கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கார்ப்பரேட் வேட்பாளர்களுக்கு வெற்றியைத் தந்ததுதான். எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?
எதையும் பிளானிங்கோடு செய்யும் கார்ப்பரேட் மூளைதான் இங்கேயும் சாதித்திருக்கிறது. தேர்தலில் நேரடியாக இறங்குவதற்கு முன், ‘ட்வென்ட்டி 20’ என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கியது கம்பெனி நிர்வாகம்.
அதன் மூலம் அரிசி, பால், காய்கறி, மளிகை போன்றவற்றை கிராம மக்களுக்கு பாதி விலையில் விநியோகிக்க ஆரம்பித்தனர். கிராமம் முழுக்க நல்ல ரோடு, மருத்துவ வசதிகள், குடிநீர் கிடைக்காத பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துவது, நலிவடைந்த மாணவ - மாணவிகளுக்கு உதவித் தொகை, ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவது என சமூக சேவைகளில் தீவிரமாக இறங்கியது இந்த அமைப்பு. இன்று, கிழக்கம்பலத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பின் உறுப்பினர்கள். வெற்றிக்குக் காரணம் இந்த பலமே!
‘‘இது ஒரு மோசமான முன்னுதாரணம். அம்பானியும் அதானியும் இது மாதிரி தங்கள் ஆட்களை தேர்தலில் நிறுத்தினால் என்ன ஆகும்..?’’ என வெடிக்கிறார் எர்ணாகுளம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரும் முன்னாள் எம்.பியுமான பி.ராஜீவ்.
‘‘ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும், லாபத்தில் ஒரு பங்கை சமூக நலப் பணிகளுக்காக செலவிட வேண்டும் என்று கம்பெனி விதிகள் சொல்கின்றன. சட்டப்படி செய்ய வேண்டிய நல்ல காரியங்களை அரசியலாக்கிவிட்டது கிட்டெக்ஸ் நிறுவனம். கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியலில் இருந்து விலகி நிற்பதுதான் சரி. அரசியல், ஜனநாயகம் இதெல்லாம் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவது, மிகப் பெரும் ஆபத்து!’’ என்கிறார் அவர்.
‘‘சமூக சேவை என்ற பெயரில் கிட்டெக்ஸ் நிறுவனம் நடத்தும் நாடகம் இது. தேர்தல் முடிந்ததும் இந்த சேவைகளும் நின்றுவிடும்...’’ என்கிறார்கள் உள்ளூர் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.
இந்த விமர்சனங்கள் அத்தனைக்கும் தன் வெற்றிப் புன்னகையை பதிலாகத் தருகிறார் கிட்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாபு ஜேக்கப். ‘ட்வென்ட்டி 20’ அமைப்பின் பொறுப்பாளரும் இவரே. ‘‘நாங்கள் எந்தக் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல. பொதுமக்களுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் செய்யத் தவறியதை செய்து வருகிறோம். தொடர்ந்து செய்யவிருக்கிறோம்.
இந்தத் தேர்தல் வெற்றி மூலம் நாங்கள் ஒரு புது வழக்கத்தை துவக்கி வைத்திருக்கிறோம். ‘ட்வென்ட்டி 20’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க தேர்தல் கமிஷனை அணுகியிருக்கிறோம்.
எங்கள் அமைப்பின் சார்பாக வெற்றி பெற்றவர்களில் யாராவது மக்களின் வெறுப்பிற்கு ஆளானால் அவரை மாற்றவும் வழி வகை செய்துள்ளோம். இப்போது இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருக்கும் கிழக்கம்பலம் கிராமம், தொடர்ந்து கவனம் பெறும்படி இதை முன்னேற்றுவோம்’’ என்கிறார் சாபு ஜேக்கப்.
அப்போ இனி காசை விட்டெறிஞ்சா எந்தக் கம்பெனியும் தேர்தலில் ஜெயிக்கலாமா? மறுபடியும் கம்பெனி ஆட்சியா? என்றால் மறுக்கிறார்கள் இக்கிராம மக்கள்.‘‘இவ்வளவு நாளாக இந்தப் பஞ்சாயத்தை முன்னணி கட்சிகள் நிர்வகித்து விட்டன.
இந்த அமைப்புக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போமே... தொடர்ந்து இவர்கள் சமூக சேவை செய்யவில்லை என்றால் கிழக்கம்பலம் மக்கள் சும்மா இருப்பார்களா?” என்கிறார் உள்ளூர் வாசியான வர்கீஸ்.இது ஒரு மோசமான முன்னுதாரணம். அம்பானியும் அதானியும் இது மாதிரி தங்கள் ஆட்களை தேர்தலில் நிறுத்தினால் என்ன ஆகும்..?
கிழக்கம்பலம் கிராமத்தைப் போலவே மூணாறில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் சிலர் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அதில் கோமதி உட்பட தமிழர்கள் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட, பிரதான அரசியல் கட்சிகள் அதிர்ந்துள்ளன.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பஞ்சாயத்தில் இந்த தமிழ்ப் பிரதிநிதிகளின் ஆதரவு, கேரள அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியம். ‘‘எத்தனையோ பயமுறுத்தல்கள்... ஏளனப் பேச்சுகள்... இவற்றைத் தாண்டி கிடைத்த வெற்றி இது. இது ஒரு தொடக்கம்தான். எங்கள் தினசரி கூலியை 500 ரூபாயாக்கிப் பெற இந்த வெற்றி உதவும்!’’ என்கிறார் கோமதி.
- பிஸ்மி பரிணாமன்
|