பேண்டஸி கதைகள்
செல்வு @selvu
அந்த ராட்டினம் வந்ததிலிருந்து ஊரே பரபரப்பாகியிருந்தது. ஏதோ வெறும் திருவிழாக்கால ராட்டினமாக இருந்திருந்தால் இத்தனை பரபரப்பு இருந்திருக்காது. அதிசயமான ராட்டினமாகவும், அறிவியல், உயிரியல் விதிகளைக் கேலிக்குரியதாக்குகிற ராட்டினமாகவும் இருந்தது.
ஆமாம்; அந்த ராட்டினத்தில் ஏறி ஒரு முழுச் சுற்று சுற்றி வந்தால் ஒரு சென்டி மீட்டர் உயரம் வளர்ந்துவிட முடியும். ஊர் முழுக்கவும் இந்த ராட்டினத்தின் புராணம்தான். அது ஏதோ மேஜிக்கைப் போல நிகழ்ந்தது என்றாலும், மேஜிக்கைப் போல உடனே அழிந்து விடவில்லை. அதாவது, ஒரு முறை நீங்கள் அந்த ராட்டினத்தில் ஏறி ஒரு செ.மீ. வளர்ந்து விட்டீர்களானால் அதன் பிறகு அது மறைந்துபோகாது. இப்படி ஒரு ராட்டினம் கிடைத்தால் யார்தான் விடுவார்கள்?
‘உயரமாக வளர்வதற்கு இதைக் குடியுங்கள், அதைக் குடியுங்கள்’ என்று தினமும் எத்தனை விளம்பரங்களைப் பார்க்கிறோம்! தங்கள் குழந்தைகள் ஒரே நாளில் ஒரு பனை உயரத்திற்கு வளர வேண்டுமென்ற ஆசையிலிருப்பவர்கள் நிறைய இருப்பதால்தானே விதவிதமான விளம்பரங்களைக் காண நேர்கிறது. அந்த ஊரிலும் தங்கள் குழந்தைகள் பெரிதாக வளர வேண்டுமென்ற ஆசையிலிருந்த பெற்றோர்கள், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அந்த ராட்டினத்துக்கு ஓடினார்கள். ஒரு முழுச் சுற்று சுற்றுவதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம். ஆயிரமாவது, ரெண்டாயிரமாவது.? ஒவ்வொரு பெற்றோரும் நான்கைந்து சுற்றுகள் சுற்றச் சொல்லி, ஒரே நாளில் அவர்களது வாரிசுகளை நான்கைந்து செ.மீ. உயரச் செய்தார்கள்.
ஒருசில பெற்றோர்கள் மட்டும் சும்மா இந்த ராட்டின விளையாட்டை வேடிக்கை பார்த்துவிட்டு, ‘‘நம்ம பசங்க இப்டி திடீர்னு எல்லாம் வளர வேண்டாம். இயற்கையா என்ன வளர்ச்சி இருக்குதோ, அது போதும்’’ என்று இடத்தைக் காலி செய்தார்கள். குழப்பத்திலிருந்த பெற்றோரில் பாதிப் பேர் இயற்கை வழிக்கும், பாதிப் பேர் ராட்டின வழிக்கும் பாய்ந்தார்கள். மொத்தத்தில் ஊரிலிருந்த எண்பது சதவீதம் பேர் ராட்டினத்தால் தங்களின் குழந்தைகளை நான்கைந்து செ.மீ. வளரச் செய்தார்கள். ஒரு ஊரில் ஒரு நாள் மட்டுமே ராட்டினக்காரர்கள் இருப்பார்கள் என்பதால் அன்றே அவர்களும் கிளம்பிப் போய்விட்டார்கள்.
அடுத்த சில மாதங்களுக்கு ராட்டினத்தால் உயரமாகாத குழந்தைகளும், அவர்கள் வீட்டுப் பெற்றோரும் எத்தனையோ ஏளனங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பின்னே, ஊருக்குள்ளேயே வந்து வெறும் ஒரு சுற்றுச் சுற்றி உயரமாக்கும் இந்த அதிசயத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது அவர்களது முட்டாள்தனம்தானே?ராட்டினம் வந்து சென்று இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.
அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஊரே ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தது. என்னவென்றால், ராட்டினத்தால் ஒரே நாளில் உயரமான குழந்தைகள், அதற்குப் பிறகு வளரவேயில்லை. ராட்டினத்தைப் பயன்படுத்தாத குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையாக வளர்ந்து கொண்டே இருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளில் ராட்டினத்தால் வளர்ந்த குழந்தைகளின் உயரத்தை எட்டியிருந்தார்கள்.
ராட்டினக் குறுக்கு வழியில் வளர்ந்த குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் இப்பொழுது பெரும் துயரத்திற்கு ஆளாகியிருந்தார்கள். என்னென்னவோ செய்து பார்த்தார்கள். உயரமாக வளர வைக்கும் அமேசான் காட்டு மூலிகைகளுக்கு மிஸ்டு கால் கொடுத்து குடம் குடமாக வாங்கிக் குடித்துப் பார்த்தார்கள். ஒரு நானோமீட்டர் கூட வளரவில்லை. எத்தனையோ மருத்துவமனைகளில் ஏறி இறங்கினார்கள்.
எல்லா டாக்டர்களுமே கை விரித்துவிட, ஊரே சோகத்தில் மூழ்கிவிட்டது. இனி நம் குழந்தைகளுக்கு எப்பொழுதுமே இதே குட்டையான உருவம்தானா என்று நினைத்து நினைத்து வேதனையுடனே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
மறுபடியும் ஊரே பரபரப்படைகிற அந்த நிகழ்வு நடந்தது. ஆமாம்... ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் அதே ராட்டினக்காரர்கள் ஊருக்குள் வந்திருந்தார்கள். விடுவார்களா மக்கள்? கம்பு, அரிவாள்களுடன் ராட்டினக்காரர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு, நடந்த நிகழ்வுகளை விவரித்து நியாயம் கேட்டார்கள். இந்த மேட்டரெல்லாம் தங்களுக்கு முன்னமே தெரியும் என்பதைப் போல நமட்டுச் சிரிப்புடன், இன்னொரு முறை சுற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமென்றும், அதற்காகத்தான் மறுபடியும் வந்திருப்பதாகவும் கூறினார்கள்.
எப்படியோ தங்கள் பிரச்னை சரியானால் போதுமென்று ஆசுவாசமடைந்த அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள், இந்தத் தடவை தங்களின் குழந்தைகளை ஆறடி உயரத்திற்கு வளரச் செய்துவிடுவதென்று முடிவெடுத்து சுமார் முப்பது சுற்றுக்கள் வரையிலும் சுற்ற வேண்டியிருக்குமென்று கணக்குப் போட்டுக் கொண்டார்கள். ஒரு சுற்றுக்கு ஆயிரம் ரூபாயென்றாலும் முப்பதாயிரம் ஆகுமே என்றெல்லாம் ஒரு பக்கம் கவலைப்பட்டாலும், இத்தனை நாட்கள் அலைந்த அலைச்சல் இன்றோடு சரியாகிறதே என்று நினைத்துக் கொண்டார்கள்.
இப்பொழுதுதான் ராட்டினக்காரர்களின் நக்கல் சிரிப்பிற்கான காரணம் வெளியில் தெரிந்தது. ஆமாம், இந்த முறை ஒரு சுற்றுக்கு ஒரு லட்ச ரூபாய் ஆகுமென்றார்கள்! ஒரு முறை நீங்கள் அந்த ராட்டினத்தில் ஏறி ஒரு செ.மீ. வளர்ந்து விட்டீர்களானால் அதன் பிறகு அது மறைந்துபோகாது.
|