அம்மே... ஞான் எழுத்தாளர் ஆகி!



ஜெயராம் ஹேப்பி

நடிகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், செண்டை மேளம் பயிலும் நாட்டுப்புறக் கலைஞர், யானை ஆர்வலர் என நடிகர்      ஜெயராமுக்கு எக்கச்சக்க முகங்கள். இனி அவர் எழுத்தாளரும் கூட! யெஸ், ‘ஆள்கூட்டத்தில்   ஓரானபொக்கம்’ என்ற மலையாளப் புத்தகத்தை ஜெயராம் எழுத, அதை மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டிருக்கிறார்.

 முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டது யார் தெரியுமா? ஜெயராம் வளர்த்த யானையின் பாகன்! ‘‘இந்தப் புத்தகமே யானைகளைப் பற்றித்தான். ‘மக்கள் கூட்டத்தில்  சட்டென்று  கவனத்தை ஈர்ப்பவர்’ என்பதுதான் இந்தப் பெயரின் அர்த்தம். அது யானைதானே! யானை பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் இதில் தொகுத்திருக்கிறேன்!’’ என்கிற ஜெயராம், சட்டென ஃப்ளாஷ்பேக் போகிறார்.

‘‘எனது சொந்த ஊர், கேரளத்தின் பெரும்பாவூர் பக்கத்தில் இருக்கும்  மலையாட்டூர். அதற்கு அடுத்த  கோட நாடு என்னும் இடத்தில், காட்டு யானைகளை மனிதர்களுக்கு உதவும் வேலைகளுக்குப்   பழக்குவார்கள். நான் அதை அதிசயமாகப் பார்ப்பேன். சுற்று வட்டாரக்  கோயில்களில்  உற்சவம் நடக்கும்போது,  யானைகளை நெற்றிப்பட்டம், ஆலவட்டம், முத்துக் குடை,  ஜெகஜாம்பரம் கொண்டு அலங்கரித்து, விதவிதமான மணிகள்  கழுத்திலும், காலிலும் கட்டி அழைத்து வரும் அழகே தனி. வீட்டில் பாட்டியிடம், அம்மா  - அப்பாவிடம்   எப்போதும் யானைக் கதைகளைத்தான் கேட்பேன். இப்படித்தான்  எனக்கு யானைப் பைத்தியம் பிடித்தது.

நடிகனான பிறகு, என் மகன்  காளிதாஸ்  பிறந்தபோது, யானை ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு  கண்ணன் என்று பெயரிட்டேன்.  கண்ணனை கவனிக்க  ஒரு பாகனையும் நியமித்தேன். கண்ணன் எங்கள் வீட்டில் ஒரு அங்கமாகி விட்டான்.

33 படங்களில் நடிக்கவும் செய்தான். ‘கஜராஜா’ பட்டத்தையும்  கண்ணனுக்கு  வழங்கினார்கள். யார்  கண்  பட்டதோ,  திடீரென்று  2013ல் உடம்பு சுகம் இல்லாமல் ‘கண்ணன்’ எங்களை விட்டுப்  பிரிந்தான். அவன் நினைவாக அவனது தந்தங்கள், கேரள வனத்துறையின் அனுமதியுடன்  என்னிடம் உள்ளன!’’ என்கிற ஜெயராம், யானை வளர்ப்பு நுட்பங்களையும் நம்பிக்கைகளையும் நுனிவிரலில் வைத்திருக்கிறார்.

‘‘ஒரு யானையின் நாக்கில் கரும் புள்ளிகள் இருந்தால் அது அதிக நாட்கள் உயிர் வாழாது. யானையின் வால்  தரையைத் தொடக் கூடாது. தொட்டால், அந்த யானை இருக்கும் இடத்தில் செல்வம் தங்காது. நெற்றி விரிந்து,   பரந்து,  உயர்ந்து இருக்க வேண்டும். நம்மூர் யானைகளுக்கு பெரும்பாலும் 16 நகங்கள்தான் இருக்கும். சிலவற்றுக்கு மட்டும் 17 அல்லது 18 நகங்கள் இருக்கலாம். ஆனால், அந்த யானைகள் அபசகுனமாகப் பார்க்கப்படும்’’ என்கிற ஜெயராமுக்கு ஒரு வகையில் இந்தப் புத்தகத்தை எழுதி முடித்தது பெரும் நிம்மதி.

‘‘என் பெரியப்பா  மலையாட்டூர் ராமகிருஷ்ணன்  மலையாளத்தில் பெரிய எழுத்தாளர். அதனால், ‘நீங்களும்  எழுதலாமே’  என்று  அடிக்கடி என்னிடம் கேட்பார்கள். நான் எதை எழுதுவது? எனக்கு என்ன தெரியும் எழுத? யானைகளைப் பற்றித்தான் ஓரளவு தெரியும். அதைத்தான் எழுதிவிட்டேன். இதுவரை 400 யானைகளின் படங்களை   சேகரித்து வைத்திருக்கிறேன்.

அதில் முக்கால்வாசி இந்தப் புத்தகத்தில் உள்ளன. பாட்டி, அம்மா, அப்பா   எனக்குச் சொன்ன யானைக் கதைகள், நான் என் குழந்தைகளுக்குச் சொன்ன கதைகள், யானைகளுடன் எனக்கேற்பட்ட அனுபவங்கள் எல்லாம் இதில் உள்ளன. இனி யாரும் என்னிடம் ‘ஏன் எழுதவில்லை’ எனக் கேட்க முடியாது!’’ என்று சொல்லி சிரிக்கிறார் ஜெயராம்.

இவரைப் போல இந்தப் புத்தகத்தை மற்றவர்கள் சாதாரணமாகப் பார்க்கவில்லை. ‘‘யானைகள் பற்றி அரிய தகவல்களைச் சொல்லியிருக்கும் இந்தப் புத்தகம், ஜெயராமுக்கு இலக்கிய விருதுகளைத் தேடித் தரலாம்!’’ என மேடையில் மனம்விட்டுப் பாராட்டியிருக்கிறார் மம்முட்டி.அது பலிக்கட்டும்!யானையின் வால்  தரையைத் தொடக் கூடாது. தொட்டால், அந்த யானை இருக்கும் இடத்தில் செல்வம் தங்காது.

- பிஸ்மி பரிணாமன்