தொழிலை பெரிசாக்கணும்... நிறைய பேருக்கு வேலை கொடுக்கணும்..!



செரிப்ரல் பால்ஸி சகோதரர்களின் உன்னதக் கனவு

சின்ன பிரச்னைக்கே மனதொடிந்து போகும் மனிதர்கள், ஒருமுறை ராமையும் சுந்தர்ராமையும் சந்திக்க வேண்டும். அத்தனை சோர்வும் பறந்தோடி விடும். அவ்வளவு உற்சாகம்.

இரட்டையராகப் பிறந்த இந்த இருவருமே ‘செரிப்ரல் பால்ஸி’ (Cerebral palsy) குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். தசைகள் இறுகி, செயலை முடக்கி விட்டது. ஆனால் மனம் முடங்கவில்லை. எவரின் துணையுமின்றி தங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறார்கள். ஒரு தொழிற்கூடம் நிறுவி பலருக்கு வேலையும் கொடுத்திருக்கிறார்கள்.

சென்னை, பல்லாவரத்தில் இருக்கிறது இவர்களின் தொழிற்கூடம். மந்தாரை இலையில் தட்டுகள், தொண்ணைகள் செய்து இந்தியா முழுவதும் அனுப்புகிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்களில் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ராம் உற்பத்திப் பிரிவை கவனிக்க, விற்பனையை கவனிக்கிறார் சுந்தர்ராம்.

இருவருமே சற்று சிரமத்தோடு மழலை மொழி பேசுகிறார்கள். ‘‘எங்க அம்மா பேரு ராதா. அப்பா பேரு ரமேஷ். அப்பா புரொமோட்டரா இருக்கார். நாங்க ரெட்டைப் பிள்ளைங்க... நாங்க ரெண்டு பேருமே இப்படியொரு பாதிப்போட இருக்கிறதை அம்மாவும், அப்பாவும் எப்படித்தான் சகிச்சுக்கிட்டாங்களோ!

அப்போ நாங்க போபால்ல இருந்தோம். அம்மா நிறைய தெரபிகள், பயிற்சிகளுக்கு அழைச்சுட்டுப் போவாங்க. எங்களுக்கு ‘இப்படி இருக்கோமே’ங்கிற எண்ணம் துளியளவும் வரவிடாம அப்பாவும் அம்மாவும் பாத்துக்கிட்டாங்க. அப்பாதான் எங்களுக்கு ரோல் மாடல். அவங்க கொடுத்த உற்சாகம்தான் இப்படியொரு தொழிலகத்தைத் தொடங்குற அளவுக்கு எங்களைக் கொண்டு வந்திருக்கு...’’ என்கிறார்கள் இருவரும் ஒற்றைக் குரலில்.

இவர்களின் அம்மா ராதா உறுதியான குரலில் பேசுகிறார். ‘‘பிறந்து 3 மாதம் வரைக்கும் எதுவும் தெரியலே. அதுக்கப்புறம் கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு. மருத்துவர்கள், ‘இப்போ எதுவும் சொல்ல முடியாது, வளரட்டும் பாத்துக்கலாம்’னு சொன்னாங்க. 6 மாசத்துல ‘செரிபிரல் பால்ஸி’னு கண்டுபிடிச்சாங்க. ரெண்டு பிள்ளைகளுக்குமே பிரச்னை என்பதை ஜீரணிக்க கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. ஆனது ஆகிடுச்சு. இனிமே இவங்களை எப்படி ஆக்கபூர்வமா வளர்க்கிறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டோம்.

‘செரிப்ரல் பால்ஸி’ங்கிறது நோயில்லை. ஒருவிதமான குறைபாடு. இதை ‘பிறக்கும்போது ஏற்படுற விபத்து’ன்னு சொல்லலாம். இந்தக் குறைபாடு ஏற்படுறதுக்கு 10 ஆயிரம் காரணங்கள் இருக்கு. இதைக் குணப்படுத்த முடியாது. ஆனா இவங்களை தன்னம்பிக்கையோட வாழ தயார்படுத்தலாம். மூளையில ஏற்படக்கூடிய பாதிப்பு இது. தாயோட கர்ப்பப்பையில இருந்து வெளியில வந்ததும் குழந்தையோட மூளைக்கு ஆக்சிஜன் தேவை. அதைப் பெறுவதற்குத்தான் குழந்தை அழுது. பிறந்தவுடனே குழந்தை அழலேன்னா மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காது. அந்த மாதிரி குழந்தைகளுக்கு இதுமாதிரி குறைபாடு வரலாம்.

இந்தக் குறைபாடு உள்ளவங்களுக்கு ‘மைண்ட்’ நல்லாயிருக்கும். இயல்பான மற்றவர்களைப் போலவே சிந்திப்பாங்க. 80% நார்மல் ஐ.க்யூ பவரும் இருக்கும். ஆனா, உடம்பு கொஞ்சமும் ஒத்துழைக்காது. கையை நீட்டணும்னு நினைப்பாங்க. ஆனா கை செயல்படாது. தசைகள் இறுகிடும்; அல்லது தொளதொளன்னு ஆயிடும். ‘செரிப்ரல் பால்ஸி’ இருக்கிற பிள்ளைகளுக்கு காலம் முழுவதும் பிசியோதெரபி பயிற்சி தரணும். அது ஓரளவுக்கு இயங்க வைக்கும். ராம், சுந்தர்ராமுக்கு நிறைய தன்னம்பிக்கை உண்டு. எதையுமே குறையா நினைக்கிறதில்லை. எப்பவும் உற்சாகமா இருப்பாங்க.

சின்ன வயசுல இருந்தே இவங்களை நிறைய வெளியிடங்களுக்கு அழைச்சிட்டுப் போவேன். ஹோட்டலுக்குப் போவோம். தியேட்டருக்குப் போவோம். சுற்றுலா போவோம். கண்காட்சிகளுக்கு அழைச்சிட்டுப் போவேன். எல்லாத்தையும் அவங்களுக்கு விளக்கிச் சொல்வேன். குறையே தெரியாம வளர்த்தோம். அவங்களால எழுத முடியாது. ஆனா பேசுவாங்க. ரொம்பவே அறிவுபூர்வமா பேசுவாங்க. போபால்ல இருந்து சென்னை வந்தபிறகு, கோட்டூர்புரத்துல இருக்கிற வித்யாசாகர் பள்ளியில ரெண்டு பேரையும் சேர்த்தோம். அங்கே நிறைய கத்துக்கிட்டாங்க. டெக்னாலஜி சார்ந்த விஷயங்கள்லயும் நிறைய ஆர்வம் இருந்துச்சு. சூழலியல் சார்ந்த விஷயங்கள்லயும் ஈடுபாடா இருப்பாங்க.

படிப்பு முடிஞ்சதும், ‘ஏதாவது தொழில் பண்றோம்’னு சொன்னாங்க. நானும் சரி, என் கணவரும் சரி... அவங்களோட எந்த செயல்பாட்டையும் தீர்மானிக்கிறதில்லை. அவங்க என்ன விரும்புறாங்களோ அதைச் செய்வோம், அவ்வளவுதான். சுற்றுச்சூழலுக்கு பாதகம் இல்லாத ஏதாவது ஒரு தொழில் செய்ய அவங்க விரும்பினாங்க. நிறைய கண்காட்சிகளுக்கு அழைச்சிட்டுப் போய் காட்டினேன். எளிய தொழிலா இருக்கணும். விற்பனையாகுற பொருளாவும் இருக்கணும். அப்படித் தேடும்போதுதான் இந்த மந்தார இலைத் தட்டுக்கு நிறைய தேவை இருக்கிறது தெரிஞ்சுது.

ஒரு தொழிலை ஆரம்பிக்கணும்னா அதைப்பத்தி முழுமையா தெரிஞ்சிருக்கணும். மத்தவங்களை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது. அதனால ஒரு தொழிற்சாலையில 6 மாதம் ரெண்டு பேரும் பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. கொடைக்கானல் பகுதியிலதான் மந்தார இலை அதிகம் கிடைக்கும். அதையும் பாக்க விரும்பினாங்க. அங்கேயும் கூட்டிக்கிட்டுப் போனோம்.

அதுக்கப்புறம் பல்லாவரத்துல தொழிற்சாலை ஆரம்பிச்சோம். இணையம் மூலமா விளம்பரம் செஞ்சோம். இந்தியா முழுவதும் நிறைய ஹோட்டல்கள், ஐ.டி. நிறுவனங்கள், கேட்டரிங் கம்பெனிகள்ல இருந்து நிறைய ஆர்டர்கள் வந்துச்சு. முதல்ல ராமும் சுந்தர்ராமும் மட்டும்தான் செஞ்சாங்க. ஆர்டர் அதிகமான பிறகு 5 பேரை வேலைக்கு எடுத்துக்கிட்டாங்க.

எல்லா முடிவுகளையும் ரெண்டு பேரும் சேர்ந்துதான் எடுக்கிறாங்க. கார்த்திக்னு அவங்களுக்கு ஒரு ஃபிரண்ட் இருக்கான். அவன்கூட ரொம்பவே பிரியமா இருப்பாங்க. இவங்க மேலுள்ள பிரியத்துல அவனும் எங்ககூடவே இருக்கான். நாங்களும் அவனை எங்க பிள்ளைகள்ல ஒருத்தனாதான் பாக்கிறோம். ராமும் சுந்தர்ராமும் நினைக்கிறதை கார்த்திக் செய்வான். காலையில ஃபேக்டரிக்குப் போனா சாயங்காலம்தான் வீட்டுக்கு வருவாங்க.

இப்போ எங்க துணை அவங்களுக்குத் தேவைப்படலே. ஒரு கார் இருக்கு. டிரைவரைக் கூட்டிக்கிட்டு சினிமா, ஹோட்டல்னு கிளம்பிடுவாங்க. இப்போ தெரபிக்கு ஆகுற முழு செலவையும் அவங்களே கொடுக்கிறாங்க. சுயமா இயங்கத் தொடங்கிட்டாங்க. இதுக்காகத்தான் நாங்க இதுவரைக்கும் கஷ்டப்பட்டோம்...’’ என்கிறார் ராதா.

‘‘இந்தத் தொழிற்சாலையை பெரிசா மாத்தணும். நிறைய பேருக்கு வேலை கொடுக்கணும். அதுதான் எங்க லட்சியம்...’’ - மீண்டும் ஒற்றைக்குரலில் ஒலிக்கின்றன ராம், சுந்தர்ராமின் வார்த்தைகள். செரிப்ரல் பால்ஸி’ங்கிறது நோயில்லை.  ஒருவிதமான குறைபாடு. இதைக்  குணப்படுத்த முடியாது. ஆனா இவங்களை தன்னம்பிக்கையோட வாழ தயார்படுத்தலாம்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி