நான் உங்கள் ரசிகன் - 8



மனோபாலா

ஒரே மாதிரி படம் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல. ‘பிள்ளை நிலா’வுக்கு அடுத்து திரும்பவும் திகில் படம் வேண்டாம்னு காமெடியை கையில் எடுத்தேன். இளையராஜாவோட அஞ்சு பாடல்கள் ஒருத்தர்கிட்ட இருந்துச்சு. அதை வாங்கினோம். அதுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை பண்ணினார் கலைமணி.

படத்துக்கு ‘பாரு பாரு பட்டணம் பாரு’னு டைட்டில் வச்சோம். ஜோசியத்து மேலயே நம்பிக்கை வச்சிருக்கற ஒருத்தன் வாழ்க்கையை எப்படி தொலைச்சிட்டு நிக்கிறான்ங்கறதுதான் கதை. என்னோட அடுத்த படத்திலும் திகில் இருக்கும்னு நம்பி வந்தாங்க மக்கள். அதனால படம் சரியா போகலை.

ஆனா, அதே படம் தெலுங்கில் விஸ்வநாத்  டைரக்‌ஷனில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆச்சு.  நான் மறுபடியும் த்ரில்லர்  பக்கம் போனேன். அந்தப் படம்தான் ‘நான் உங்கள் ரசிகன்’. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ஸ்டில்ஸ் ரவி. என் மேல உள்ள பிரியத்தினாலும், மோகன் மேல உள்ள அபரிமிதமான அன்பினாலும் இந்தப் படத்தை தயாரிச்சார்.

ரெண்டு படமாவது டைரக்ட் பண்ணின பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்த நான் அப்பதான் என் பர்சனல் பத்தி யோசிச்சேன். எல்லாருக்குள்ளேயும் பூக்குற காதல் பூ எனக்குள்ளயும் பூத்திருந்தது. முதல் காதல்.. மறக்க முடியாததாச்சே!  அவங்க, என் ஃபிரண்டோட தங்கச்சி. மதுரைக்காரங்க! என் காதலை அவங்ககிட்ட சொல்லவே ரொம்பத் தயக்கம். மொதல்ல நாம வாழ்க்கையில ஒரு நல்ல நிலைமைக்கு  வருவோம். அப்புறம் கல்யாணத்தைப் பத்தி யோசிப்போம்னு ஒரு கொள்கையோட இருந்தேன். ‘நான் உங்கள் ரசிகன்’ பண்ணும்போது ‘நாமதான் சக்சஸ் கொடுத்தாச்சு... மூணாவதா வேற படம் பண்றோமே... இனி கல்யாணம் பண்ணிக்குவோம்’னு எண்ணம் வந்தது.

அந்தப் பொண்ணுகிட்ட போன்ல பேசினேன். அப்போ அவங்க திருச்சியில இருந்தாங்க. ‘நீங்க நாளைக்கு திருச்சிக்கு வரமுடியுமா?’னு கேட்டாங்க. மனசு முழுவதும் பட்டாம்பூச்சி பறக்க திருச்சி போறேன். அந்த பொண்ணை சந்திக்கறேன். ‘மறக்காம கல்யாணத்துக்கு வந்துடுங்க’னு சொல்லி அவங்க கல்யாணப் பத்திரிகையை என்கிட்ட கொடுத்தாங்க. நான் அவங்ககிட்ட சொல்ல வந்த விஷயத்தை அப்படியே அமுக்கிட்டேன். மனசுக்குள்ள ஒரு வலி... வேதனை. அதோட சேர்த்து ஒரு வெறி... எனக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது மதுரையிலதான் நடக்கணும். அதுவும் ஒரு மாசத்துக்குள்ள நடந்துடணும்னு முடிவெடுத்தேன்.

அந்த முடிவை எங்க அப்பாகிட்ட சொன்னதும் பரபரனு பொண்ணு பார்த்தார். ராஜமன்னார்குடியில பொண்ணு வீடு. நானும் போய்ப் பார்த்தேன். பொண்ணு என்கிட்ட பேசவே இல்ல. ‘பிடிச்சிருக்கு’னு சொல்லிட்டு சென்னை வந்துட்டேன். தஞ்சாவூர் பக்கம் மருங்கூர் கிராமத்துல நாங்க இருக்கோம். பொண்ணுக்கு மன்னார்குடி பக்கம் ஊரு. ‘இந்த ரெண்டு இடத்தையும் விட்டுட்டு மதுரையில கல்யாணத்தை வைக்கணும்னு கண்டிஷன் போடுறானே இவன்? ஏன்?’னு யாருக்கும் டவுட்டே வரலை. சென்னையில இருந்து நாங்க கிளம்பி மதுரைக்கு போறதாவும், பொண்ணு வீட்டுக்காரங்க வேன் பிடிச்சு மன்னார்குடியில இருந்து மதுரைக்கு வர்றதாகவும் திட்டம்.

சென்னையில இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல போறதுக்கு டிக்கெட் புக் பண்ணியிருந்தேன். மதுரையில தமிழ்நாடு கெஸ்ட் ஹவுஸ்ல ரூம் போட்டிருந்தேன். இளையராஜாவோட கம்போஸிங்குக்கு அங்கே போய்ப் போய் அந்த கெஸ்ட் ஹவுஸ் ரொம்ப சௌகர்யமா இருந்தது. மதுரையில மீனாட்சி அம்மன் கோயில்ல கல்யாணத்தை வச்சிக்கலாம்னு அங்கேயுள்ள விநியோகஸ்தர்கள்கிட்ட சொல்லி, கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலைகளைப் பார்க்கச் சொன்னேன்.

பாண்டியன் எக்ஸ்பிரஸை பிடிக்கறதுக்காக ராத்திரி சென்னையில இருந்து கிளம்பறப்ப மழை அடி பின்னிடுச்சு. கிளம்பி நிற்கறோம். ரயில்வே ஸ்டேஷன் போறதுக்கு கார் கூட கிடைக்கலை. ‘வண்டி எடுத்துட்டு வர்றேன்’னு போன ஒளிப்பதிவாளர் ராஜ்ப்ரீத்தையும் காணோம். ரைட்டர் மது, நான் எல்லாரும் ஒரு ஆட்டோ பிடிச்சு போனால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் போயிடுச்சு.

அங்கே ராஜ்ப்ரீத் வேகமா என்னை கிராஸ் பண்ணி ஓடுறார். அவரை நிறுத்தி, ‘‘வண்டி போயிடுச்சுடா’’னு சொல்ல, ரயில்வே ஸ்டேஷன் எதிர்ல நின்ன ஒரு பஸ்ல, புஷ் பேக் வண்டினு சொல்லி என்னை ஏத்தி விடுறார் படத்தோட புரொடக்‌ஷன் மேனேஜர். அதுல புஷ்ஷும் இல்ல, பேக்கும் இல்ல. வண்டி லேட்டாகுது. லேட்டாகுது... எட்டு மணிக்கு கிளம்ப வேண்டிய வண்டி பத்தரைக்குக் கிளம்புது. கிளம்பி வளசரவாக்கம், சாலிகிராமம்னு சந்து பொந்து எல்லாம் போகுது. அப்பவே எனக்கு டவுட். கோவூருக்கு பக்கம் லேசா நின்னு, மதுரைனு போட்டிருந்த போர்டை எடுத்துட்டு டிராவல்ஸ்னு போர்டு மாட்டுறாங்க. அந்த பஸ்ஸுக்கு லைசென்ஸ் இல்லையாம்.

 அதுக்கு அப்புறம் உருட்டிக்கிட்டே போய் மறுநாள் காலையில பத்து மணிக்கு மதுரையில விட்டாங்க. அதுக்குள்ள அங்கே சாருஹாசன், கவுண்டமணினு படத்துல நடிக்கற அத்தனை பேரும் வந்திருக்காங்க. லோக்கல் பத்திரிகைக்காரங்க எல்லாரையும் சூழ்ந்துக்கிட்டாங்க. கல்யாண நியூஸை போட்டோவோட அன்னைக்கே போடணும்னு துடிக்கறாங்க. நான் போன உடனே, ‘‘போட்டோ எல்லாம் நைட்ல எடுத்துக்குங்க. இப்போ பேட்டியை மட்டும் எடுத்துக்குங்க’’னு சொல்லி பேட்டி கொடுத்தேன். சாயங்கால பேப்பர்ல ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மனோபாலாவுக்கு கல்யாணம்’னு நியூஸும் வெளியாகிடுச்சு.

விடிஞ்சா கல்யாணம். ஆனா, முதல் நாள் சாயங்காலம் 3.30 மணி வரைக்கும் பொண்ணு வீட்டுக்காரங்க யாரையும் காணோம். கூட வந்தவங்க எல்லாம் பதற்றமாகிட்டாங்க. ‘‘என்னய்யா, பொண்ணுக்கு பதில் ஏதாவது டூப்பு கீப்பு ஏற்பாடு பண்ணியிருக்கீயா?’’னு கவுண்டமணி கிண்டல் அடிக்க ஆரம்பிச்சிட்டாரு. நானும் கொஞ்சம் கலங்கிப் போயிட்டேன்.

நாங்க தங்குறதுக்கு ரூம் ஏற்பாடு பண்ணின ஆர்ய பவன் ஓனர்தான் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் வீடு எடுத்துக் கொடுத்திருந்தார். எதுக்கும் அங்கே ஒரு தடவை போய்ப் பார்ப்போம்னு போறோம்... அங்கே மதியமே வந்து எல்லாரும் படுத்துத் தூங்கிட்டு இருக்காங்க. என்னைப் பார்த்ததும் ‘மாப்ள வந்தாச்சு... மாப்ள வந்தாச்சு’னு எல்லாரையும் எழுப்பினாங்க. ‘‘தூங்கட்டும். யாரையும் எழுப்பாதீங்க!’’னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்பவும் பொண்ணுகிட்ட நான் பேசலை. பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்கனு ஒரு மனத்திருப்தி ஆச்சு.

மறுநாள் காலையில மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மாலையும், தாலியும் கொண்டு வரச் சொல்லி மதுரை விநியோகஸ்தர் ஒருத்தர்கிட்ட சொல்லியிருந்தேன். மறுநாள், கோயில் வாசல்ல நான் நிக்கிறேன். பொண்ணு நிக்கிது. எல்லாருமே இருக்கோம். தாலியும், மாலையும் கொண்டுவரப் போன டிஸ்ட்ரிப்யூட்டரைக் காணோம்.

என் புத்தி உடனே எங்க போச்சு தெரியுமா? அசிஸ்டென்ட் டைரக்டரைக் கூப்பிட்டு ‘எதிர்க் கடையில ஒரு டம்மி தாலி வாங்கிட்டு வா’னு சொல்றேன். அவன் வாங்க ஓடுறான். சரியா அந்த நேரத்துல எதிர்ல ஒரு ஆட்டோ வந்து நிக்கிது. அந்த டிஸ்ட்ரிப்யூட்டர் வந்து இறங்கி, ‘வயிறு பிரச்னை ஆகிடுச்சுண்ணே! அதான் லேட்’’ங்கறார் அப்பாவியா!

‘‘எனக்கு வாழ்க்கையே பிரச்னையாகப் பார்த்ததே...’’னு சொல்லிட்டு, அவசர அவசரமா போய் மூணே நிமிஷத்துல தாலியைக் கட்டியாச்சு. தாலி கட்டினதும் மீனாட்சி திருக்கல்யாண ஏற்பாடு பார்க்கச் சொன்னாங்க. பார்த்துட்டு வீட்டுக்கு வர்றோம். பொண்ணு வீட்டுக்காரங்க எல்லாம் சாப்பிட்டுட்டு ஊருக்கு கிளம்பிட்டாங்க. அந்த டைம்ல  திடீர்னு எங்க அப்பா ஹார்ட் அட்டாக்ல விழுந்துட்டாரு! என் பொண்டாட்டி திகைச்சுப் போய் நிக்கிறா...
அப்போ என்ன நடந்தது தெரியுமா?

பொண்ணு

வீட்டுக்காரங்க யாரையும் காணோம். ‘‘என்னய்யா, பொண்ணுக்கு பதில்  ஏதாவது டூப்பு
கீப்பு ஏற்பாடு பண்ணியிருக்கீயா?’’னு கவுண்டமணி கிண்டல்  அடிக்க ஆரம்பிச்சிட்டாரு.

(ரசிக்கலாம்...)

தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்