நியூஸ் வே



தீபாவளியை விலங்குகள் நாளாகக் கொண்டாடச் சொல்லி த்ரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரே அன்று 10 தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கப் போகிறார்.

கணவர் தீபக் பாகாவுடன் இணைந்து, ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் சிம்ரன். தயாரிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்காக புது போட்டோ ஷூட் பண்ணியிருக்கிறார் சிம்ரன்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இந்தி நடிகை கீதா பாஸ்ரா திருமணமே கடந்த வார கலர்ஃபுல் பரபர. மெகந்தி திருவிழா, பிரபல பாடகர்களின் கச்சேரி என களைகட்டியது கல்யாணம். யுவராஜ், ஆர்.பி.சிங், பார்த்திவ் படேல் என சக வீரர்கள் வாழ்த்த, வாழ்வின் புதிய இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் பாஜ்ஜி!

என்னதான் பீகாரில் கூட்டணி என்றாலும் காங்கிரஸுக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும் சுத்தமாக ஆகாது! ராகுல் காந்தியோடு ஒரே மேடையில் பிரசாரம் செய்யக் கூட மனமில்லை அவருக்கு. சமீபத்தில் ஒரு மேடையில் ஃபேன் ஒன்று விழுந்ததில் லாலுவுக்குக் கையில் காயம். ராகுல் போன் செய்து அவரிடம் நலம் விசாரிக்க, இருவரும் இப்போது ராசியாகிவிட்டார்கள்.

‘‘போன வருடம் நான் எண்ணிலடங்கா செல்ஃபிகளுக்கு போஸ் கொடுத்தேன். குள்ளமானவர்களோடு குனிந்தபடியும் உயரமானவர்களோடு எக்கியபடியும் குண்டானவர்களோடு ஃப்ரேம் ஓரமாக தள்ளப்பட்டும் ஒல்லியானவர்களோடு அதிக இடத்தை அடைத்துக்கொண்டும் அந்தப் படங்கள் இருந்தன’’ என காமெடியாக ட்வீட்டியிருக்கிறார் நடிகை ட்விங்கிள் கன்னா.

‘‘2016 மார்ச்சில் ராகுல் காந்தி காங்கிரஸுக்கு தலைமை ஏற்பதில் எந்தப் பிரச்னையும் கிடையாது. மோடி தன் கட்சி சீனியர்களை நடத்திய அளவுக்கு மோசமாக ராகுல் நடத்த மாட்டார். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற அந்தக் கட்சி சீனியர்களை மோடி சைபீரியாவுக்கு அனுப்பிவிட்டார்!’’ என்கிறார் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

ஈரோட்டில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் இரண்டு மணி நேரம் மகாபாரத உரையாற்றியிருக்கிறார் சிவகுமார். அவர் குடும்பம் முழுமையும் இதை நேரில் பார்த்து ரசித்தது. ‘‘அப்பாவின் இரண்டு வருட உழைப்பு இது’’ என நெகிழ்ந்தார் சூர்யா.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பாடல்கள் ரெடியாகின்றன. முதல் பாடலை விஜய்யை பாட வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் இந்தியா வந்ததும், இந்தியாவில் ‘அனைவருக்கும் இணையம்’ பற்றி டெல்லி ஐ.ஐ.டி மாணவர்களிடம் அவர் பேசியதும் செம ஹிட். வெகுநாள் ஆசையாக தாஜ்மகாலை நேரில் பார்த்த மார்க், ‘‘நான் நினைத்ததை விடவும் அதிகமாக இது பிரமிக்க வைக்கிறது’ எனத் தன் முகநூலில் வியந்திருக்கிறார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தங்கியிருந்த டெல்லி வீட்டை அதிரடியாக காலி செய்து, அவரின் உடைமைகளை எல்லாம் ராமேஸ்வரத்துக்கு அனுப்பிவிட்டது மத்திய அரசு. அந்த வீடு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு தரப்பட்டுள்ளது.

 ‘‘அப்துல் கலாம் ஒரு இஸ்லாமியரெனினும் தேசப்பற்றாளராக இருந்தார்’’ என்று ஸ்டேட்மென்ட் விட்ட பி.ஜே.பி பிரகஸ்பதி இவர். ‘‘இவருக்கு கலாம் வீட்டைக் கொடுத்திருப்பதே பெரிய அவமரியாதை. அந்த இடத்தை ஒரு கல்வி மையமாக மாற்ற வேண்டும்’’ என்கின்றன ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவுப்படி, அதிகாரிகள் குழுவாக சீனா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் போயிருக்கிறார்கள். அங்குள்ள நவீன தலைநகரங்கள் எப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளன எனப் பார்த்து வந்து புதிய தலைநகர் அமராவதியை வடிவமைக்கவே இப்படி!

பீகார் தேர்தல் ரிசல்ட் நவம்பர் 8ம் தேதி. பி.ஜே.பி மூத்த தலைவர் அத்வானியின் 88வது பிறந்த நாளும் அதுவே. ‘கட்சியின் ‘பவர்’ பாயின்ட்டுகளான மோடியும் அமித் ஷாவும் அவருக்கு வெற்றியைப் பரிசளிப்பார்களா’ என பெப் ஏற்றித் திரிகின்றன பீகார் மீடியாக்கள்!