குட்டிச்சுவர் சிந்தனைகள்



*ஆறு மணி ஃபங்ஷனுக்கு ஒன்பது மணிக்குக் கூட ரெடியாகாம, ‘‘என்னங்க, இந்த சேலைக்கு இந்த ஜாக்கெட் மேட்ச்சிங்கா?’’ எனக் கேட்கும் ‘மன்னன்’ விஜயசாந்திகள் எங்கே? ஒன்பது மணி படத்துக்கு ஆறு மணிக்கே போயி சட்டைய கிழிச்சாவது டிக்கெட் வாங்கும் ஓட்டைக் கண்ணாடி சூப்பர்ஸ்டார்கள் எங்கே?

*கெஞ்சிக் கெஞ்சி கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த காதலோட விட்டுட்டுப் போற ‘காதல்’ சந்தியாக்கள் எங்கே? அரை மெண்டல விரும்பினாலும், கடைசில குட்டிக்கரணம் அடிச்சாவது கட்டிக்க நினைக்கும் ‘மூன்றாம் பிறை’ கமல் ஹாசன்கள் எங்கே?

*3 கடையேறி எடுத்த புடவைய வெறும் 3 மணி நேர விசேஷத்துக்குக் கட்டுற பொண்ணுங்க எங்கே? 30 நிமிஷத்துல எடுத்த  ஜீன்ஸ 3 நாளா போடுற நம்ம ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ சின்ராசுகள் எங்கே?

*காதல சொன்னா, பயந்துக்கிட்டு டீச்சர்ட்ட போட்டுக் கொடுக்கிற ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’ திவ்யாக்கள் எங்கே? டீச்சரையே காதலிக்கிற தைரியம் கொண்ட ‘பிரேமம்’ ஜார்ஜுகள் எங்கே?

*வாழ்க்கைத் தரத்துல ஜாண் இறங்கினாக்கூட கழட்டி விட்டுட்டுப் போற ‘சூரிய வம்ச’ ப்ரியா ராமன்கள் எங்கே? உடம்புல கூன் விழுந்தாலும் தன் ஃபிகரைக் கடத்தி வச்சு காப்பாத்துற ‘ஐ’ விக்ரம்கள் எங்கே?

*காதலிக்கிற பையன்கிட்ட ‘‘நாம நண்பர்களா மட்டும் இருப்போம்’’னு வாயில வடை சுடும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ த்ரிஷாக்கள் எங்கே? ஃபிரண்ட்ஸா பழகினாக்கூட அதைக் காதல்னு குழந்தைத்தனமா நினைச்சு எல்லா பொண்ணுங்களிடமும் கடலை போடும் யதார்த்தமான ‘அட்டக்கத்தி’ தினேஷ்கள் எங்கே?

*டிராஃபிக்ல இருந்து டிஸ்ட்ரிக்ட் கோர்ட் வரை லஞ்சம் கொடுத்து தப்பிச்சுப் போகும் ‘நிமிர்ந்து நில்’ அமலாபால்கள் எங்ேக? பார்க்ல துப்பினாலும் பெஞ்சுல தூங்கினாலும் நெஞ்சை நிமிர்த்தி நேர்மை காட்டும் ரூல்ஸ் ராமானுஜம்கள் எங்ேக?

*புடிச்ச பையனக் கட்டுறதுக்காக, அந்தப் பையனுக்கு புடிச்ச பொண்ணு மேல பேயா வந்து விரட்டும் ‘அரண்மனை’ ஹன்சிகாக்கள் எங்கே? பேய் புடிச்ச பொண்ணை புடிச்சுப் போன காரணத்துக்காக, பேயா மாறி பேய விரட்டும் ‘காஞ்சனா 2’ ராகவா லாரன்ஸ்கள் எங்கே?

*புடிச்ச பையன் கை பட்டா கூட பொளந்துகட்டும் ‘டார்லிங்’ பட நிக்கி கல்ரானிகள் எங்கே? பொண்ணுங்க காலுல ஃபுட்பாலா மிதிபடும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஜி.வி.பிரகாஷ்கள் எங்ேக?

*லிவிங் டுகெதரா வாழலாம்னு குடும்பம் நடத்தக் கூப்பிடும் ‘ஓ காதல் கண்மணி’ நித்யா மேனன்கள் எங்ேக? ஒரே வீட்டுல இருந்தாலும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸா குப்பை கொட்டின ‘புது வசந்தம்’ முரளிகள் ஆனந்த்பாபுகள் எங்ேக?

எப்பவுமே பொண்ணுங்க டவுட்டுதான், எப்பவுமே பசங்க அவுட்டுதான்!

குட்டிச்சுவர் சிந்தனைகள்

அன்பார்ந்த ஜவுளிக்கடைக்காரர்களே, பிரமாண்ட புடவை விற்பனையாளர்களே, எங்களை தீபாவளிக்கு துணி வாங்க அழைக்கிறீங்களே... உங்கள நம்பி பொண்டாட்டியோட புடவை வாங்க வர்றவங்களுக்கு நீங்க செய்து தரும் வசதிதான் என்ன? துபாய் போனவங்க கூட திரும்பி வந்திடுவாங்க...

ஆனா, துணியெடுக்கப் போன பொம்பளைங்க எப்ப திரும்பி வருவாங்கனு யாருக்குமே தெரியாது. அப்படி துணியெடுக்கப் போன மனைவிக்கு காத்திருக்கும் கணவர்கள் எல்லாம் அஞ்சு வருஷம் தவமிருந்த அகத்தியர் மாதிரி தாடியோட காத்திருக்காங்களே, அவங்களுக்கு ஷேவிங் கிட், துண்டு, சோப்பு, பேஸ்ட் - பிரஷ் தரணும்னு ஏன் உங்களுக்குத் தோணலை?

ஏழு மாடி, எட்டு மாடி கட்டிடம்னு வாயில இருந்து விளம்பரம் வரை மெல்லுறீங்களே... அதுல ஒத்த மாடிய ஒதுக்கி சம்சாரத்துக்கு சேலை எடுக்க வந்து நொந்து போன கணவர்கள் தங்கி ஓய்வெடுக்க ரூம் கட்டி விடுறீங்களா? வேலை செய்யற ஆபீஸ்ல இருந்து ஹேபியஸ் கார்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனு பதிவு பண்ற அளவுக்கு பொண்டாட்டியோட புடவை எடுக்கப் போனவங்க ஆள் அட்ரஸ் இல்லாம காணாமப் போயிடுறாங்க.

 அப்படி இல்லன்னாலும், ஆள் அடையாளம் தெரியாத மாதிரி உரு மாறிப் போறாங்க. அவங்களை ஈசியா கண்டுபிடிக்க, ‘இவர் இந்தம்மாவின் புருஷன்’, ‘அவர் அந்தம்மாவின் புருஷன்’னு ஐ.டி. கார்டு போட்டுத் தரீங்களா? குக்கர் ரிப்பேர் ஆச்சுன்னா, அதை சரிசெய்யும்வரை மாற்று குக்கர் தர்றாங்க. கேஸ் அடுப்பு பிரச்னைன்னா அது சரியாகும்வரை வேற கேஸ் அடுப்பு தராங்க.

அது மாதிரி, துணியெடுக்கப் போன மனைவி சீக்கிரம் வரலைன்னா...  அட இருங்க, மாற்று மனைவியெல்லாம் கேட்கல! மனைவி வரும் வரை குழந்தைகளைப் பார்த்துக்க ஒரு ஆயாவாவது தர்றீங்களா? மருமகள் இல்லாததுனால, சண்டை போட ஆளில்லாம எத்தனை மாமியாருங்க போரடிச்சுப் போயிருக்காங்க தெரியுமா? அதுக்காக டெம்ப்ரவரியா சண்டை போட ஒரு பெண்ணை ரெடி பண்ணியாவது தர்றீங்களா? போங்க பாஸ், போயி இந்த தீபாவளில இருந்தாவது நாசூக்கா வியாபாரம் பண்ணுங்க!

பொலிவியா புரட்சி, பாகிஸ்தான் புரட்சி, பங்களாதேஷ் புரட்சினு பலப்பல புரட்சிகளைப் பார்த்திருப்போம். ஆனா, எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடுறதுதான் ஃபேஸ்புக் புரட்சி. மன்மோகன் ஆட்சிலயாவது கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லைப் பெரியாறுனு இந்தப் போர்க்குணமிக்க புரட்சியாளர்களுக்கு நல்ல தீனி இருந்துச்சு. இப்ப போட்டோ பிரதமர் வந்த பிறகு ஆட்சி நடக்குதான்னே தெரியலையா, அதனால புரட்சி செய்யறதுக்குக் கூட நல்ல விஷயம் இல்லாமப் போயிடுச்சு.

கூல் டிரிங்க் விளம்பரத்துல நடிச்ச விஜய் எப்படி குடி தண்ணீர் பிரச்னையப் பேசலாம், நயன்தாரா எப்படி பீர் வாங்கலாம்னு பெரியளவுல ரீச்சாகாத புரட்சியவே இவங்க பேசுவாங்க. அப்படி பசிச்ச நேரத்துல பாஸ்மதி பிரியாணி போட்ட மாதிரி கிடைச்சதுதான் மீத்தேன் பிரச்னை.

அது ஒரு வழியா நல்ல முறையில முடிஞ்சாலும், நம்மாளுங்க அந்த விவசாயியை விடுறதா இல்ல. அந்த ‘ஏழை விவசாயி’யோட வாழ்க்கையில வார்த்தைகளால் விளையாடுறதே இவங்க பொழப்பா போச்சு. ‘பூச்சி மருந்து வாங்க காசில்லாததால், பெப்சி கோக் வாங்கி தன் வயலுக்கு தெளித்தார் அந்த ஏழை விவசாயி’னு ஒருத்தன் எழுதறான்.

இன்னொருத்தன், ‘ஆயுத பூஜையன்று தெருவில் உடைத்து வீணாகப் போகும் பூசணிக்காய்களை கொடுங்கள்... ஒரு வேளை பூசணிக்காய் சாம்பார் வைத்து சாப்பிடுவார் ஏழை விவசாயி’னு எழுதறான்.

‘ஏர் உழும் மாடுகளைப் போல டிராக்டர்களும் சாணி போட்டிருந்தால், அதை எடுத்து வீடு மொழுகி இருக்கலாமே என வருத்தப்பட்டான் ஏழை விவசாயி’னு இன்னொருத்தன் ஏழை விவசாயியோட வேட்டியவே அவுத்துட்டான். விட்டுடுங்கப்பா! நீங்க விவசாயம் கூட பார்க்க வேணாம், அந்த விவசாயியைப் பார்க்காம இருந்தா போதும்!                 

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்