கல்யாணம் என்பது ஒருநாள் கூத்து!



‘‘‘ஒரு நாள் கூத்து’...  இதுதாங்க படத்துக்கு டைட்டில். மக்களோடு ஏகமாக புழக்கத்தில், நெருக்கத்தில் இருக்கிற வார்த்தை. படத்திற்கும் ரொம்பப் பொருந்தியது. ஒரு திருமணம் பத்தித்தான் கதை. பெரும்பாலும் இந்தியத் திருமணங்கள் வன்முறையில் ஆரம்பித்து வன்முறையில் முடிகின்றன.

பெண்ணோட அழகு, நிறம், பணம்... இதையெல்லாம் வச்சு சந்தை வியாபாரம்தான் இங்கே நடக்குது. அந்த ஒரு நாள் கௌரவம், அடையாளம் போதும் நமக்கு. அதற்குப் பிறகான வாழ்க்கையை யாரும் நினைச்சே பாக்கிறதில்லை. அந்த ஒரு நாளை வைச்சே, கேலியா, கோபமா, சுவாரஸ்யமா ஒரு ஸ்கிரிப்ட் செய்தோம். அதுதான் படம்’’ - பொறுமையாய்ப் பேசுகிறார் நெல்சன் வெங்கடேசன்.

‘‘கதையோட தீம் புதுசா இருக்கே?’’‘‘நிறைய கல்யாணங்களை நான் கவனிச்சிருக்கேன். அவ்வளவு கேள்விகள் வந்தன. அதையெல்லாம் முன் வச்சு ஒரு ஸ்கிரிப்ட்டே வந்திருச்சு. இந்தத் திருமணங்களில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கு. யாரும் யாரென்று யாருக்கும் தெரியாமல் நடக்கிற இந்தத் திருமணங்களின் அனுபவம் அலாதியானது. ரொம்பவும் உணர்வோடு செய்திருக்கோம்.

ஆனா, எப்பவும் ஒரு புன்னகையுடன் ரசிக்கிற மாதிரியான விஷயங்களையே தொகுத்துக் கொடுத்திருக்கோம். வெயிட்டான விஷயத்தை அந்த வெயிட் தெரியாம லேசாக்கிக் கொடுக்குறதுதான் இந்த ‘ஒரு நாள் கூத்து’வின் வடிவம். அந்த ஒரு நாளின் அலைக்கழிப்புக்குப் பிறகு நமது கஷ்டங்கள் ஆரம்பிக்கின்றன.

அதெல்லாம் எப்படி, எப்போது தீர்கின்றன என்பதுதான் படத்தின் முழுச்சாயல். அருமையான கதையை உணர்ந்து நடித்த நடிகர்களால் வெளிச்சத்தை அள்ளிப் பூசின மாதிரி படமே வேறு விதத்தில் வந்திருப்பதாக உணர்கிறேன்!’’‘‘இப்போதெல்லாம் தினேஷ் தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறார்...’’

‘‘ ‘அட்டக்கத்தி’, ‘குக்கூ’, ‘விசாரணை’, ‘கபாலி’னு நல்ல கிரேஸ் தினேஷ் மேலே விழுந்துக்கிட்டு இருக்கு. இந்த வரிசையில் இப்ப ‘ஒரு நாள் கூத்து’ம் சேர்ந்திருக்கு. அடுத்தடுத்து என்ன கதை, என்ன படம்னு பார்க்காமல் அட்வான்ஸ் மட்டும் வாங்கிப் போட்டுக்கிற ரகமில்லை தினேஷ்.

அவர் தேர்ந்தெடுக்கிற ஒவ்வொரு படத்தின் தினுசையும் பாருங்க... எவ்வளவு வேறுபட்டு நிக்குது. இதில் தினேஷ் ஐ.டியில் வேலை பார்க்கிற பையன். அடுத்த வீட்டுப் பையன் மாதிரி ஒரு ரோலில் அமர்க்களப்படுத்தியிருக்கார். இவ்வளவு இறுக்கமான உணர்ச்சிகளை இத்தனை சுலபமா யாரும் உணர்த்திட முடியாது. அவ்வளவு அருமையா உணர்ந்து நடிச்சிருக்கிறார்!’’

‘‘இரண்டு ஹீரோயின்ஸ் தேவைப்பட்டிருக்கு...’’‘‘நிவேதா பெத்துராஜ்... மதுரைக்காரப் பொண்ணு. ஆனால், அமீரகத்துல போய் குடியேறிட்டாங்க. மிஸ் அமீரகமா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்காங்க. இதுதான் அவங்களோட முதல் படம்னு சொன்னா யாரும் நம்பத் தயாராவே இல்லை. அவங்களும் தினேஷுடன் ஆபீஸில் வேலை பார்க்கிற பொண்ணு. கூடவே, மியா இதில் செய்திருக்கிற கேரக்டர் ரொம்பவும் புதுசு. வசனம் குறைவு.

 ஆனால், அவர் முகத்தில் வந்து கொட்டியிருக்கிற உணர்ச்சிகளுக்கு அளவேயில்லை. வாழ்க்கையோட பொறுப்புகளை உணர்வுபூர்வமாக எடுத்து வைக்கிற இந்தக் கதையில் ரித்விகா, ரமேஷ் திலக், பால சரவணன்னு இன்னும் தெளிவான நடிகர்கள் இருக்காங்க. நல்லா கவனிச்சீங்கன்னா, எல்லா இடத்திலும் நாம் ஒரே மாதிரி இருக்க மாட்டோம்.

நண்பர்கள் கூட இருக்கும்போது இருக்கிற அகலச் சிரிப்பு, வீட்டுல சுட்டுப் போட்டாலும் வராது. உள்ளுணர்வுகளுக்கு கீழ்ப்படிஞ்சு, சில நேரங்கள் மட்டுமே இருப்போம். அந்த மாதிரி என் படத்தில் நடிச்சவங்க எல்லாருமே என் படம் மட்டுமே அவர்களுக்கான படம் மாதிரி நடிச்சுக் கொடுத்திருக்காங்க. குறிப்பா, தினேஷ், மியா இருவரும் இதற்கு முன் நீங்க பார்த்தவங்க இல்லை!’’

‘‘பாடல்கள் பற்றி...’’‘‘ஐஸ்டின் பிரபாகரன் ரொம்ப ஆத்மார்த்தமாக இசையைக் கையாளுகிற கலைஞன். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’னு வெளியே வந்தார். பாட்டெல்லாம் ஆடம்பரமா இருக்காது. ஆனால், அதற்குள்ளே அவ்வளவு சங்கதிகளை உணர முடியும். இதிலும் அப்படியே. கோகுல் பினாய்னு ஒரு இளைஞர்தான் கேமரா. நல்ல கதையும், சொல்கிற முறையும் போதும்னு நம்புறவன் நான்.

யார்கிட்டயும் அசிஸ்டென்ட்டா இருந்ததில்லை. ஒரு எஃப்.எம்ல நிகழ்ச்சி அமைப்பாளரா இருந்துட்டு, எனது நல்ல சினிமா ரசனையை நம்பி வந்திருக்கேன். யாரையும் புண்படுத்தாமல், யாருக்கும் வலிக்காமல், ‘இந்தச் சமூகத்தில் இதுதான் நடக்குது’ன்னு பார்வையாளர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்!’’

- நா.கதிர்வேலன்