நான் உங்கள் ரசிகன் 6
மனோபாலா
மணிரத்னத்தோட மெட்ராஸ் டாக்கீஸுக்காக ‘ஒரு புன்னகை’னு ஒரு டி.வி தொடர் இயக்கினேன். ‘ஜெயங்கொண்டான்’ படத்தை இயக்கின ஆர்.கண்ணன், அப்போ என் அசிஸ்டென்ட். சீரியல் வெற்றி விழாவில் சுஹாசினி உட்பட எல்லார் முன்னாடியும் மணிரத்னம்கிட்ட கண்ணன் ஒரு கேள்வி கேட்டான்,
‘‘சார்... உங்க படங்கள்ல எல்லாம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா, புருஷன் அதைக் கொண்டாடுற மாதிரியே சீன் வைக்கிறீங்களே... நீங்களும் அப்படித்தானா?’’னு. ‘‘‘என் மனைவியை ஊருக்கு அனுப்புறேன்...
அப்ப நீங்க வந்து என்னைப் பாருங்க!’’னு சொல்லிட்டு மணிரத்னம் சிரிக்க, சுஹாசினி உட்பட எல்லாரும் சிரிச்சிட்டாங்க. இப்படி டைரக்டரை மடக்குற உரிமைகூட சில சமயம் உதவி இயக்குநர்களுக்குக் கிடைக்கும். ஸ்பாட்ல திட்டினாலும், அடிச்சாலும், அடிப்படையில உதவி இயக்குநர்களை மதிக்கத் தெரிஞ்ச உலகம்தான் சினிமா.
பாரதிராஜாகிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தவங்கள்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. நான் சேருறதுக்கு ஒரு நாள் முன்னாடி சேர்ந்தவர் கே.ரங்கராஜ். அதனாலயே ‘நீ எனக்கு ஜூனியர்’னு என்னை மிரட்டிக்கிட்டு இருப்பார்.
நான் எப்பவும் டைரக்டர் பக்கத்துலயே இருக்கறதால, அவருக்குக் கோபம் வரும்போதெல்லாம் அடிக்கிறது, திட்டுறது எல்லாம் என்னைத்தான். மீதி உள்ளவய்ங்க எல்லாம் எஸ்கேப் ஆகிடுவாங்க. ரங்கராஜுக்கு அவரை யாராவது திட்டினா, பிடிக்காது. அதனால டைரக்டர் பக்கமே வர மாட்டார். அடுத்த சீனுக்கு ஆள் ரெடி பண்றது, லொகேஷனை ரெடி பண்றதுனு பரபரப்பா இருக்குற மாதிரி கொஞ்சம் தள்ளியே நின்னுப்பார். டைரக்டர் பக்கத்துல வந்தா, அடி வாங்கித் தொலைக்கணுமே!
சாப்பாட்டுல அவர் ‘கன்’ மாதிரி. ஷூட்டிங் நடுவுல கூட உணவு இடைவேளை சரியான டைம்ல விடணும்னு நினைக்கறவர். டிஸ்கஷன்ல நாங்கல்லாம் சீரியஸா பசி தெரியாம பேசிட்டிருந்தாகூட, ரங்கராஜ் மட்டும் காணாமப் போயிருப்பார். எங்கேயாவது போய் சாப்பிட்டு வந்திடுவார். ஆனா, மணிவண்ணன் மாதிரி ரங்கராஜனும் ஒரு நல்ல எழுத்தாளர். பின்னாடி, ‘உதயகீதம்’ மாதிரி நிறைய சில்வர் ஜூப்ளி படங்கள் கொடுத்தவர் ரங்கராஜன். தயாரிப்பாளர் கோவைத்தம்பிக்கு மிகப்பிடித்த இயக்குநர் அவர்தான்.
இந்தக் காலகட்டத்துல இளையராஜாவோட வளர்ச்சி அபரிமிதமானது. அப்போ எல்லாம் அவர் எங்களைப் பார்க்குறதே, திருப்பதி பெருமாள் கண்ணைத் திறந்து பார்க்குற மாதிரி மிராக்கிளான விஷயம். காலை ஆறரை மணியில இருந்து மதியம் ஒரு மணி வரை பத்து தயாரிப்பாளர்கள், பத்து இயக்குநர்களுக்கு கம்போஸ் பண்ணிக் குடுப்பார்.
அசாத்திய உழைப்பு அவரோடது. ஒரு படத்துக்கு 5 பாட்டு... மொத்தம் 50 ஸாங் அரை நாள்ல கம்போஸ் பண்ணுவார். 50 பாட்டுமே வெரைட்டியா இருக்கும். ‘அலைகள் ஓய்வதில்லை’ல ‘விழியில் விழுந்து’ பாட்டை பத்தே பத்து நிமிஷத்துல கம்போஸ் பண்ணிட்டார். அரை மணி நேரத்துல 6 பாட்டு போட்டுக் குடுத்துட்டார்.
பாரதிராஜாவோட அசிஸ்டென்ட்கள் மேல இளையராஜா தனி பிரியம் வச்சிருந்தார். தன் பிள்ளைகள் மாதிரியே எங்களையெல்லாம் நடத்துவார். அதனாலதான் அவரோட பயணப்படக்கூடிய ஒரு அழகான சூழல் எங்களுக்கு வாய்ச்சது. பிற்காலத்துல இளையராஜா - கலைமணி கூட்டணியில என் படங்கள்னா, சுடச்சுட வித்துடும். ஒவ்வொரு தயாரிப்பாளருமே ராஜா வீட்ல இருந்து திரும்பி வரும்போது அவ்வளவு சந்தோஷமா வருவாங்க.
‘டிக் டிக் டிக்’ படத்துல ‘நேற்று இந்த நேரம்’ பாட்டு. வழக்கமா அந்த டைப் பாடல்னா ஜானகி அம்மாதான் பாடுவாங்க. ஆனா, இந்தப் பாட்டை புது வாய்ஸ் பாடினா நல்லா இருக்கும்னு விரும்பினார் இளையராஜா. திடீர்னு லதா ரஜினி காந்தைக் கூப்பிட்டு பாட வைக்கிறார். அப்போ ரஜினி கல்யாணம் பண்ணின புதுசு. லதா ரஜினிகாந்த் ஒரு சிங்கர்னு அப்போதான் தெரிய வருது.
கண்ணதாசன் எழுதின பாட்டுக்கு வாலி சிபாரிசு பண்ணின ஒரே பாடகி லதா ரஜினிகாந்த்தான். அதே படத்துல இன்னொரு சம்பவம்... ராத்திரியும் பகலுமா விடாம ஷூட்டிங் போகுது. தொடர்ந்து தூக்கம் இல்லாததால ஒரு நாள் ஷூட்டிங் அன்னிக்கு ராத்திரி மணிவண்ணன் ஒரு பக்கம் தூங்கப் போயிட்டார்.
இன்னொரு பக்கம் ரங்கராஜ் ஆளக் காணோம். நானும் போய்த் தூங்கிட்டேன். காலையில ஆறரை மணிக்கு ஷூட்டிங் நடக்குது. கிளாப் கொடுக்க ஆள் இல்ல. ‘கிளாப்’னு டைரக்டர் குரல் கொடுக்கிறார். யாருமே போகல. ஆனா கமலஹாசன் நாங்க எல்லாரும் தூங்குறதைப் பார்த்துட்டு, ‘‘எல்லாரும் டீ குடிக்கப் போயிருப்பாங்க’’னு சொல்லி சமாளிச்சு, அவரே கிளாப் போர்டை அடிச்சு எங்களைக் காப்பாத்தினார்.
இன்னொரு சம்பவம்... அந்தப் படத்தோட புரொடியூஸர் பிரகாஷ், தினமும் சாயங்காலம் டின்னருக்கு அடையாறு பார்க் ஹோட்டல் கூட்டிட்டுப் போவார். போகும்போது ஒரு ஆள் கதவைத் திறப்பான். என்கிட்டயும் மணிவண்ணன்கிட்டயும் ‘பாரதிராஜா சார் படத்துல நடிக்கணும்’னு அவன் சொல்லிக்கிட்டே இருப்பான்.
‘இவன் எல்லாம் டயலாக்கா பேசப் போறான்... வில்லனுக்குப் பின்னாடி நிக்க வச்சிடலாம்’னு நானும் மணிவண்ணனும் கூப்பிட்டு நடிக்க வச்சிட்டோம். வந்த புதுசுல அவன் எங்களுக்கு ஃபாரின் சிகரெட்டா கொண்டு வந்து குடுத்தான். 15 நாள் ஆன பிறகு, அவனே வந்து, ‘‘சார், நடிக்கறேனே தவிர, கம்பெனியில காசு கொடுக்க மாட்டேங்குறாங்க’’னு சோகமா சொன்னான்.
மேனேஜர்கிட்ட கேட்டா, ‘‘யார் என்னன்னே தெரியல... பாதியில ஓடிட்டான்னா என்ன செய்யிறது’’னு பாக்கி வச்சதா சொன்னார். அப்புறம் நாங்க பேசி அவன் பாக்கி ஐந்நூறு ரூபாயை வாங்கிக் கொடுத்தோம். படுபாவி... அவன் அந்த 500 ரூபாய்ல ஒரு ரூபாய்க்கு லாட்டரிச் சீட்டு வாங்கியிருக்கான்.
அதுல லட்ச ரூபாய் விழுந்திடுச்சு. ‘இனி நான் எதுக்கு நடிக்க வரணும்? கடை வச்சுப் பொழைச்சுக்கறேன்’னு அவன் போயி ட்டான். இப்போ நானும் மணிவண்ணனும் சிக்கிட்டோம். ஏன்னா, அவன் வில்லன் கூட படம் முழுக்க வந்தாகணும். பாதி ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. அவன் இருந்தாதான் கன்டினியூட்டி இருக்கும். ‘ஐயையோ! இவன் வரலைனா டைரக்டர் கொன்னுடுவாரே’னு பயம்.
அவன் வீடு வளசரவாக்கத்துல ஏதோ சந்துக்குள்ள. தேடிப் புடிச்சு அவன் கால்ல விழாத குறையா கூப்பிடுறோம். வரவே மாட்டேங்கிறான். ‘‘நான் இப்ப லட்சாதி பதி. நீங்க குடுக்கற பிச்சை காசுக்கெல்லாம் நாள் ஃபுல்லா வெயில்ல நிக்க முடியாது’’னு சொல்றான். எப்படியோ தாஜா பண்ணி கூட்டிட்டு வந்து, அந்த வில்லன் போர்ஷன் முடியற வரை நானும், மணிவண்ணனும் அவன் கூடவே இருந்து அவனை ஓடிடாம பார்த்துக்கிட்டோம்!
‘டிக் டிக் டிக்’ முடிஞ்சதும் மணிவண்ணன், ரங்கராஜன் எல்லாரும் தனியா படம் பண்ண கிளம்பிட்டாங்க. நான் மட்டும் இருந்தேன். நாச்சியப்பன்னு ஒரு தயாரிப்பாளர். ‘அந்த ஏழு நாட்கள்’ எடுத்தவர். அவர்தான் எனக்கு முதல் படம் இயக்குற வாய்ப்பைக் கொடுத்தவர். பாரதிராஜாகிட்ட கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கி வெளியே வந்த ஒரே ஆளு நான்தான்.
மத்தவங்கல்லாம் சொல்லாமக் கொள்ளாம கிளம்பிட்டாங்க. ‘‘எல்லாம் வெளியே போய், வீடு வாசல், பங்களானு நல்லா இருக்காங்க. இவன்தான் இங்கிட்டே சுத்திக்கிட்டிருக்கான். இவனைக் கொஞ்சம் காறித் துப்பி வெளியே அனுப்பு’’னு இளையராஜா கூட பாரதிராஜாகிட்ட சொல்லி கிண்டல் பண்ணுவார்.
நான் இயக்கின ‘ஆகாய கங்கை’யிலதான் கவிஞர் மு.மேத்தாவை அறிமுகப்படுத்தினேன். ஆனா, ‘ஆகாய கங்கை’ எனக்கு வெற்றியைப் பொழியலை. அதனால ஏகப்பட்ட கசப்பான அனுபவங்கள். அந்தப் படம் அட்டர் ஃப்ளாப் ஆனதால, அடுத்த ரெண்டு வருஷம் என் வாழ்க்கையே கேள்விக்குறி ஆச்சு. யாருமே வாய்ப்பு தரலை! ‘இனிமே என்ன பண்ணப்போறோம்’னு குழம்பிப் போய், தற்கொலை பண்ண முடிவெடுத்தேன்...நான் இப்ப லட்சாதிபதி. நீங்க குடுக்கற பிச்சை காசுக்கெல்லாம் நாள் ஃபுல்லா வெயில்ல நிக்க முடியாது’’னு சொல்றான்!
(ரசிப்போம்...)
தொகுப்பு: மை.பாரதிராஜா படங்கள் உதவி: ஞானம்
|