ஒவ்வொரு பூவிலும் கவிதை!
கலக்கும் கார்டன் ஆர்ட்
செம்பருத்திப் பூவே குடையாக, போகன்வில்லா மலரே ஆடையாக... ஸ்டாப் ஸ்டாப்! சத்தியமாய் நாம் கவிதை எழுதவில்லை... புதிதாய் வந்த ஹீரோயினையும் வர்ணிக்கவில்லை.
கவிதையில் மட்டுமே சாத்தியமாகும் இப்படிப்பட்ட மெல்லிய கற்பனைகளை கண்முன் நிறுத்தும் ‘Garden Art’ பற்றிய அறிமுகம் இது. அது என்ன கார்டன் ஆர்ட்?
இது போட்டோவா, ஓவியமா, மலர்க் கோலமா... யாருக்கும் தெரியாது! ஆனால், பார்க்கப் பார்க்க வசீகரிக்கிறது. ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இந்த கார்டன் ஆர்ட் செம பாப்புலர். பெங்களூருவைச் சேர்ந்த இல்லத்தரசி... சாரி, இல்லத்தை உருவாக்குபவரான சுபாஷினியின் கைவண்ணம் இது. ஹோம் மேக்கர் என அழைக்கப்படுவதையே விரும்பும் சுபாஷினி அடிப்படையில் ஆங்கிலக் கவிஞர்.
‘From the Anklets of a Homemaker’ எனும் புத்தகத்துக்கு சொந்தக்காரர். ‘நீலவானம்’ எனும் புனைப்பெயரில் சமூக தளங்களில் கவிதைகளையும் கவிதை போன்ற புகைப்படங்களையும் போட்டு லைக்ஸ் அள்ளுபவர். இலக்கியத்தோடு சேர்த்து புகைப்படக் கலையும் ஓவியமும் சுபாஷினியை ஈர்க்க, நமக்கு கார்டன் ஆர்ட் கிடைத்திருக்கிறது.
‘‘எங்கள் வீட்டில் பூத்து உதிரும் ஒவ்வொரு பூவிலும் எனக்கொரு கவிதை இருக்கும். பூக்கள் மட்டுமல்ல... காய்ந்த சருகுகள் கூட அழகானவைதான் என்பது ஒரு புகைப்படக்காரரின் கண்கள் வழியே பார்த்தால் தெரியும். எல்லாமே ரோஜாப் பூக்கள்தான். ஆனால், இரண்டு ரோஜாப்பூக்களை எடுத்து வைத்து உற்றுப் பாருங்கள்... மனித முகங்களுக்கு உள்ள வித்தியாசம் போல பூக்களுக்குள்ளும் வித்தியாசம் இருப்பது புரியும்.
எல்லா பூக்களும் எப்படி ஒரே மாதிரி பூப்பதில்லையோ, அதே மாதிரி எல்லா பூக்களும் ஒரே மாதிரி சருகாவதில்லை. எங்கள் வீட்டு வெள்ளை செம்பருத்தி காய்ந்து உதிரும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவை நினைவுபடுத்தும். உதாரணத்துக்கு ஒரு கொக்கின் உடலைப் போல அது இருந்தால், கொக்குக்கு இருக்கவேண்டிய கால்களையும் அலகுகளையும் நான் வரைய வேண்டியிருக்கும். அவ்வளவுதான், அது கொக்காகி விடும்.
மேகத்தில் எப்படி உருவம் தெரிகிறதோ... அப்படியேதான் இயற்கை படைத்த ஒவ்வொரு பொருளும்! நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு பூ, செண்டு, காய் - கனியிலும் நமக்கு வெவ்வேறு உருவங்கள் தெரிகின்றன. எனக்குத் தெரியும் வடிவம் எல்லாருக்கும் தெரியும்படியாக ஓவியம் கொண்டு அவற்றை முழுமையாக்கும் வேலை மட்டுமே எனது’’ என்கிறார் சுபாஷினி உற்சாகமாக!
- நவநீதன்
|