உதவி
பத்தாவது முறையாக கெஞ்சிக் கொண்டிருந்தாள் லட்சுமி.‘‘இந்தாம்மா! எத்தனை தடவை சொல்றது! 700 ரூபாய் செருப்பு! நீ கெஞ்சுறியேனு 500 ரூபாய்க்கு இறங்கி வர்றேன், நீ என்னடான்னா..!’’‘‘சாமி! சாமி! என்கிட்ட 350 ரூபாய்தான் இருக்கு. வச்சுக்கிட்டு கொடுங்களேன்!’’‘‘அதுக்கு வேற இருக்கு... எடுத்துக்கோ! இது கம்பெனி செருப்பு. கட்டுப்படி ஆகாது!’’ - கடைக்காரன் பேச்சு பொறுமையிலிருந்து, கோபத்தைத் தொட்டிருந்தது.
அடுத்த வாரம் கல்லூரி போகும் தன் மகனுக்கு அவன் விரும்பிய செருப்பை வாங்கிக் கொடுக்க முடியலையே என்ற கவலை லட்சுமியை வாட்டியது. தலையில் மண் சுமந்ததைவிட அதிகம் கனத்தது தன் மகனின் கண்களில் தெரிந்த ஏக்கம்! பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு கிளம்பினாள்.அனைத்தையும் கவனித்தபடி அருகில் நின்றுகொண்டிருந்த சுந்தரம், கடைக்காரரைப் பார்த்து கண் ஜாடை காட்ட,‘‘இந்தாம்மா! இவ்வளவு நேரம் கெஞ்சுனதால, அடக்க விலைக்கே தர்றேன்’’ என்று சொல்லி செருப்பைக் கொடுத்தான் கடைக்காரன்.
நம்ப முடியாமல் வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு போகும் அவர்களைப் பார்த்தபடி, 150 ரூபாயை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தார் சுந்தரம். ‘‘அவங்க உங்களுக்கு உறவா சார்?’’ - கேட்டார் கடைக்காரர்.‘‘இல்லைப்பா... என் பையன் உயிரோட இருந்திருந்தா இந்த வயசுலதான் இருப்பான்’’ என்றார் கண்கலங்க!
ப.உமாமகேஸ்வரி
|