வீட்டில் மின்சாரம் தயாரித்து விற்பனை செய்யும் ஸ்ரீதரன்!
குடும்ப பட்ஜெட்டில் பெரும்பகுதியை விழுங்குவது மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு, வாகனத்துக்கான பெட்ரோல். ஸ்ரீதரன் வீட்டு பட்ஜெட்டில் இந்த செலவுகளுக்கு இடமில்லை. கோவையின் மருதமலை சாலையில் சாய்பாபா காலனியில் இருக்கும் ஸ்ரீதரனின் வீடு, இந்தியாவுக்கு ஒரு மாடல் வீடு. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்து தன் தேவை போக மீதமிருப்பதை தமிழக மின் வாரியத்திற்கு விற்பனையும் செய்கிறார்.
தன் வீட்டில் விழும் ஒற்றை மழைத்துளியைக் கூட வெளியேற விடாமல் சேகரித்து சுத்திகரித்து குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்துகிறார். காய்கறிக் கழிவுகள் மூலம் பயோ கேஸ் தயாரித்து சமையலுக்குப் பயன்படுத்துகிறார். தான் ஓட்டும் இ-பைக்கை தான் தயாரிக்கும் மின்சாரத்திலேயே சார்ஜ் செய்து கொள்கிறார்.
எப்படி உதித்தது இந்த சிந்தனை..?‘‘மின்சாரம், தண்ணி, எரிபொருள்... இதெல்லாம் அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள். ஆனா மக்களுக்கு இதில பொறுப்பே இல்லையா? நுகர்வுல மட்டுமில்லாம உற்பத்தியிலயும் மக்கள் பங்கெடுக்கணும். அப்படியான நாடுகள்தான் உலகத்துல வல்லரசா வளர்ந்திருக்கு. சின்ன வயசுல இருந்தே தற்சார்பான ஆளு நான். மத்தவங்களை எதிர்பார்த்து நிக்கிறது பிடிக்காது. அடிக்கடி மின்தடை...
எல்லா வேலையும் முடங்கி நின்னுச்சு. மத்தவங்க மாதிரி அரசாங்கத்தைத் திட்டிக்கிட்டே விசிறியெடுத்து வீசிக்கிட்டு உக்காந்திருக்க முடியலே. ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யணும்னு திட்டமிட்டேன். வெயில், காற்றைத் தவிர மற்ற எல்லாமே தீர்ந்து போகக்கூடியது. எதிர்கால நம்பிக்கை இந்த வளங்கள்தான். அதனால சோலார் பேனல் போட முடிவு செஞ்சேன். முதல்ல 1000 வாட்ஸ்... ஒரு நாளைக்கு 3 முதல் 5 யூனிட் கரன்ட் கிடைச்சுச்சு. ஆனா அதுல ஒரு சிக்கல்... பகல்ல மட்டுமே கரன்ட் கிடைக்கும். ராத்திரிக்கு மின்வாரியம்தான் கதி.
காற்றாலை போட்டா நல்லதுன்னு யோசிச்சேன். ‘அதெல்லாம் இங்கே சரியா வராது’ன்னு சிலர் சொன்னாங்க. நிறைய ஆய்வு பண்ணி, ஒரு ‘விண்ட்’ (காற்றாலை) போட்டேன். சரியான முடிவு. அதில கூடுதலா 2 யூனிட் கிடைச்சுச்சு. மொத்த மின்சாரத்தையும் ேபட்டரியில சார்ஜ் பண்ணிடுவேன். மின்வாரியத்தோட மெயின் சுவிட்ச்சை ஆஃப் பண்ணிட்டு முழுக்க முழுக்க இந்த மின்சாரத்தையே பயன்படுத்த ஆரம்பிச்சேன்.
ஏ.சி.யைத் தவிர எல்லா பயன்பாட்டுக்கும் இந்த கரன்ட் போதுமானதா இருந்துச்சு. இடையில விண்ட்ல கொஞ்சம் பிரச்னை... பக்கத்துல, எதிர்ல எல்லாம் பெரிய பெரிய கட்டிடங்கள் வந்துட்டதால காத்தோட தாக்கம் குறைஞ்சிடுச்சு. அதனால, கூடுதலா 2000 வாட்ஸ் சோலார் போட்டேன். 10 முதல் 14 யூனிட் கிடைச்சுச்சு. பேக்கப் பவர் உள்ள 8 பேட்டரிகள்ல அந்த கரன்ட்டை சேமிச்சிடுவேன். திடீர்னு ஒருநாள் வெயில் இல்லேன்னா இருக்கிற பேக்-அப்பை பயன்படுத்திக்குவேன்.
‘பொதுமக்கள் சோலார் பேனல் போட்டு தங்கள் தேவை போக மீதி கரன்ட்டை மின்வாரியத்துக்கு விற்பனை செய்யலாம்’னு முதல்வர் சட்டசபையில அறிவிச்சாங்க. மின்வாரியத்தை அணுகி, அதுபத்தி விசாரிச்சேன். ஒரு யூனிட் ரூ.7.10க்கு மின்சாரத்தை வாங்கிக்க அவங்க சம்மதிச்சாங்க. மின்சார அளவை பதிவு செய்யற ‘நெட்மீட்டரை’ மாட்டினாங்க.
தினமும் உற்பத்தியாகுற மின்சாரத்துல எங்க தேவை போக மீதியிருக்கும் மின்சாரம் ஆட்டோமேடிக்கா மின்வாரியத்துக்குப் போயிடும். எத்தனை யூனிட் போகுதுங்கிறது பதிவாகிடும். ஓராண்டு கழித்து, 366வது நாள் எவ்வளவு மின்சாரம் பதிவாகியிருக்குன்னு பாத்து அதுக்கான பணத்தை தந்திடுவாங்க.
ஒருவேளை, பேனல்ல பிரச்னையாகி அல்லது வெயில் குறைந்து உற்பத்தி குறைஞ்சு நம்ம மின்தேவை அதிகமாயிட்டா, நாம மின்வாரியத்துல இருந்து கரன்ட்டை வாங்கிக்கலாம். கொடுத்த மின்சாரத்தை வாங்கிக்கிற வசதியும் நெட்மீட்டர்ல இருக்கு.
வழக்கமா எனக்கு ரூ.1000 முதல் 2000 வரை பில் வரும். ஆனா கடந்த 5 வருஷமா 2 மாசத்துக்கு வெறும் 40 ரூபாய்தான் கரன்ட் பில் கட்டுறேன். 1 மாதத்துக்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் தேவைப்படும். ரேட் வேற ஏறிக்கிட்டே இருக்கு. இந்தப் பிரச்னைக்கும் முடிவு கட்டணும்னு நினைச்சேன். பயோகேஸ் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.
தினமும் காய்கறிக்கழிவு, உணவுக்கழிவுன்னு அரை கிலோவுக்கு மேல வீட்டுல சேரும். பக்கத்துல மார்க்கெட் இருக்கு. அங்கே காய்கறிக்கழிவுகளை மலைபோல குவிச்சு வச்சிருப்பாங்க. ஒரு சாக்கு அள்ளிக்கிட்டு வந்தா மூணு நாளைக்கு சமைக்க கேஸ் கிடைச்சிடும். அரிசி கழுவுற தண்ணி, சோறு வடிக்கிற தண்ணின்னு எதுவும் வீட்டை விட்டு வெளியில போகாது. எல்லாம் எரிவாயுவா மாறிடும்.
சமையல் ஓகே! கோவை குளிருக்கு வாட்டர் ஹீட்டர் இல்லாம இருக்க முடியுமா..? அதுக்கும் ஒரு வழி செஞ்சேன். கேஸ் வாட்டர் ஹீட்டர் மெஷின் பொருத்திட்டேன். மெஷின்ல ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி வச்சுட்டு பைப்பை திருகினா தண்ணி சூடாகிடும். பதிவு கேன்சலாகிடக் கூடாதேன்னு நாலு மாசத்துக்கு ஒரு சிலிண்டர் வாங்கி பயன்படுத்துறேன். மற்றபடி எல்லாப் பயன்பாடும் பயோ கேஸ்தான்.
இங்க தண்ணிக்கும் பிரச்னை. நாலைஞ்சு நாளுக்கு ஒருமுறைதான் சிறுவாணி தண்ணி வரும். குளிக்க, புழங்கவெல்லாம் ரொம்ப சிரமம். மொட்டை மாடியில இருந்து பக்கவாட்டு ஜன்னல் வரைக்கும் எல்லாப் பகுதியையும் இணைச்சு வீட்டுக்கு முன்னாடி 15 ஆயிரம் லிட்டர் டேங்க் ஒண்ணு புதைச்சேன். வழியில கரி, ஜல்லி, மணல் எல்லாம் போட்ட ஒரு இயற்கையான ‘ஃபில்டரேஷன்’ அமைச்சேன்.
வீட்டு மேல விழுற எல்லாத் தண்ணியும் நேரா இதுல வடிகட்டப்பட்டு, கீழேயிருக்கிற டேங்க்குக்குப் போயிடும். ‘பெரிய மழை.. அந்த டேங்க்கும் நிறைஞ்சிட்டா தண்ணி வீணாகுமே..?’ அதுக்கும் ஒரு ஏற்பாடு செஞ்சேன். மொட்டை மாடியில 15 ஆயிரம் லிட்டர் டேங்க் ஒண்ணு வச்சேன். கீழே உள்ள டேங்க் நிறைஞ்சவுடனே ஆட்டோமேடிக்கா மோட்டார் ஆன் ஆகி, மேலே உள்ள டேங்குக்கு தண்ணீர் ஏறிடும்.
ஒரு துளி கூட வீட்டைவிட்டு வெளியே போகாது. அருகம்புல், நிலக்கரி, சுண்ணாம்புக்கல்னு சில பொருட்களை பாட்டில்கள்ல போட்டு இந்த தண்ணிக்குள்ள போட்டுடுவேன். எல்லாப் பக்கமும் அடைக்கப்பட்டிருக்கும். ஒரு சின்ன தூசி கூட உள்ளே நுழைய முடியாது. இந்த தண்ணீரை எவ்வளவு காலம் வேணும்னாலும் இருப்பு வச்சு குடிக்கலாம். இன்னைக்கு வரைக்கும் இதைத்தான் குடிக்கிறோம்.
பெட்ரோல் செலவு பெரும் செலவு. சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு. அதுக்குத் தீர்வு இ-பைக். 1 தடவை பேட்டரியை சார்ஜ் பண்ணினா 40 கி.மீ ஓடும். நான் தயாரிக்கிற மின்சாரத்திலேயே சார்ஜ் பண்ணிக்கிறேன். ஒரு பைசா செலவில்லை. பொதுவா பார்க்கிறப்போ முதலீடு கொஞ்சம் அதிகமா தெரியலாம்.
ஆனா நிரந்தரமான லாபம் இதுல இருக்கு. யாரோட முதுகுலயும் சவாரி செய்யாம, யாரையும் எதிர்நோக்கிக் காத்திருக்காம நமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி பண்ணிக்கிற சுயசார்பு வாழ்க்கை ரொம்பவே உன்னதமானது. அதை நாங்க அனுபவிக்கிறோம்...’’ - பெருமிதமாகச் சொல்கிறார் தரன்.
நம் முன்னே இயற்கை விரிந்து கிடக்கிறது. அளவோடு அவற்றைப் பயன்படுத்தி தற்சார்போடு வாழ்வதே கௌரவமான வாழ்க்கை. கிராமியப் பொருளாதார நிபுணர்களும், அக்கறையுள்ள தலைவர்களும் இந்த சுயசார்பு வாழ்க்கையைத் தான் வலியுறுத்துகிறார்கள். தரன் அந்த விஷயத்தில் நமக்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறார்!தினமும் உற்பத்தியாகுற மின்சாரத்துல எங்க தேவை போக மீதியிருக்கும் மின்சாரம் ஆட்டோமேடிக்கா மின்வாரியத்துக்குப் போயிடும்.
- வெ.நீலகண்டன் படங்கள்: கார்த்தீஸ்வரன்
|