கவிதைக்காரர்கள் வீதி



கள்ளி
உன் பின்னால் வந்து
உன் கண்களை மூடும்
தோழிகள் எல்லோரிடமும்
என் பெயர் சொல்லி
மாட்டிக்கொண்டதை
என்னிடம் சொல்லி
சிரிக்கிறது காதல்!

ஒருதலைக்கொல்லி
பேசிய கணங்களும்
பேசிப் பிரிந்த கணங்களின்
அசை போடலும்
பெரும் போதையாகி விட்டது
நெடுஞ்சாணாய் மதுக்கடை
வாசலில் கிடப்பவனைப் போல்
வேறு சிந்தனையற்றுப்போனது

என்ன உறவென்று தெரியாமலேயே
எல்லா கனவும் கண்டு களித்தாயிற்று
நட்பாய் ஏற்றுக்கொண்டால்
என் காதல் தோல்வி
காதலாய் ஏற்றுக்கொண்டால்
நம் நட்பும் புனிதமாகும்

எப்படியோ
ஓர்  ஒளி வந்து
ஏற்றும் வரை
நிஜத்தின் பாதத்தில் பதுங்கியிருக்கும்
நிழலைப்போல் இருக்கிறது
நம் காதல்
அல்லது நட்பு.

செல்லாக்காசு
கண்ணுக்கே தெரியாத
தூசியிடமிருந்தும் தப்பிக்கொள்ளும்
என் கண்கள்
காற்றுக்கே தெரியாத
உன் காதலிடம் சிக்கிக்கொள்கிறது

உன்னை
காதலிக்கத்  தூண்டிய
என் திமிர்,
நீ என்னை நிராகரித்தபோது
என்னை மீட்டெடுக்க உதவாமல்
செல்லாக்காசாகிப் போனது!

கு.திரவியம்