தினங்களைக் கொண்டாடும் மனிதர்!



‘‘உலக கை கழுவும் தினம், கழிப்பறை தினம், வேட்டி தினம், தூங்கும் தினம் இப்படி வருஷத்துல 300 நாட்களுக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கு. அப்படிப்பட்ட நாட்களோட முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தணும்...

அதுக்காகத்தான் உழைக்கிறேன்!’’ - மெல்லிய புன்னகையோடு முத்தாய்ப்பாய் சிரிக்கும் முத்துமுருகன், கோவில்பட்டிக்காரர். காலண்டரில் குறிப்பிடாத, வித்தியாச - விநோத தினங்களைக் கூடக் கொண்டாடித் தீர்க்கும் ஆச்சரிய மனிதர்! ஒவ்வொரு சிறப்பு தினத்தன்றும் பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவிடுவார் இவர்!

‘‘நம்ம எல்லோருக்குமே சுதந்திர தினம், குடியரசு தினம், காதலர் தினம், ஆசிரியர் தினம்தான் பெரும்பாலும் நினைவுல இருக்கும். இப்போ டெக்னாலஜி வளர்ந்திருக்கிறதால, மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, ஃப்ரண்ட்ஸ் டேனு சில தினங்களைத் தெரிஞ்சுவச்சு எஸ்.எம்.எஸ்லயும் வாட்ஸ்அப்லயும் வாழ்த்துகள் சொல்றாங்க. ஆனா, ஒவ்வொரு நாளுமே ஒரு முக்கியத்துவம் நிறைஞ்சதுதான். உலகளவுல அறிவிக்கப்பட்ட நாட்கள்னு சிலது இருக்கு.

இதுபோக, இந்தியாவுல மட்டும் கடைப்பிடிக்கிற நாட்கள் தனி! பல பேருக்கு இந்த நாட்களைப் பத்தி தெரியாது. தெரிஞ்சாலும் சிலர் அதைத் தனியா கடைப்பிடிக்கவோ, கொண்டாடவோ யோசிப்பாங்க. ஆனா, நான் நேரடியா களத்துல இறங்கிடு வேன்!’’ என்கிற முத்துமுருகன், பாரதியார் மேல் அலாதி பிரியம் கொண்டவர். ‘பாரதியார் அறக்கட்டளை’ எனும் அமைப்பு மூலம் பாரதியின் பிறந்தநாளன்று பள்ளிக் குழந்தைகளுக்கு பாரதி போல் வேடமிட்டு எட்டயபுரத்தில் நிகழ்ச்சி நடத்துவார்.

‘‘பிளஸ் 2 படிக்கும்போது என்.எஸ்.எஸ்ல நாங்க போக வேண்டிய கேம்ப் கேன்சலாகிடுச்சு. அத ஏத்துக்க முடியாம நானே ஒரு கண் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு பண்ணினேன். அதுதான் என்னோட முதல் நிகழ்ச்சி! அதுக்கப்புறம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துறது, ஒருங்கிணைக்கிறது...

இப்படியே என் வாழ்க்கை போகும்னு நானே எதிர்பார்க்கலை!’’ - என்கிற முத்துமுருகன், படித்து முடித்து காட்டன் மில்லில் வேலை பார்த்தவர். ஆனால், இப்போது பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென்றே ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டார். அரசு சார்பாக ஒரு புதிய திட்டம் என்றாலோ, விழிப்புணர்வு பிரசாரம் என்றாலோ, கோவில்பட்டி ஏரியாவில் எல்லோரும் தேடுவது மிஸ்டர் முத்துமுருகனைத்தான். தற்போது நூறு நாள் வேலைத் திட்டத்தில் தணிக்கை செய்யும் அலுவலராக அரசோடு சேர்ந்து இயங்குகிறார் இவர்.

‘‘மில் வேலை பார்த்தப்ப முதன்முதலா மத்திய அரசின் ‘நேரு யுவகேந்திரா’ அமைப்புல தேசிய சேவை தொண்டர் பணிக்கு அறிவிப்பு வந்துச்சு. மாசம் 600 ரூபா தொகுப்பூதியம். கோவில்பட்டியைச் சுத்தியிருக்கிற ஒவ்வொரு கிராமத்துலயும் இளைஞர் மன்றம் அமைச்சு, விளையாட்டுப் போட்டி நடத்துறது, நிகழ்ச்சிகள் பண்றதுனு வேலை! இங்கதான், ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்தணும், அதுக்கு யாரை அழைக்கணும்னு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.

தொடர்ந்து, அறிவொளி இயக்கம், முழு சுகாதாரத் திட்டம், வாழ்ந்து காட்டுவோம்னு பல திட்டங்கள்ல இணைஞ்சு நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கேன். ஒரு கட்டத்துல நானே ஆர்வமாகி ‘டைமண்ட் யூத் கிளப்’னு ஒரு சங்கத்தை ஆரம்பிச்சு, இளைஞர்களுக்கு அரசுத் திட்டங்கள் பத்தி சொல்ல ஆரம்பிச்சேன். இதனால, 2001ல மாவட்ட ‘சிறந்த இளைஞர் விருது’ எனக்குக் கிடைச்சது!’’ என்கிற முத்துமுருகன், வித்தியாச தினங்கள் பக்கம் திரும்புகிறார்.

‘‘பெண்கள் தினம், நூலக தினம்னு சில தினங்களைக் கொண்டாடுற சந்தர்ப்பம் கிடைச்சது. அப்பதான் இவ்வளவு தினங்கள் இருக்கானு ஆச்சரியப்பட்டேன். உடனே, என் டைரியை எடுத்து குறிக்க ஆரம்பிச்சேன். சிட்டுக்குருவி தினம், புலிகள் தினம், சர்வதேச தற்கொலை தடுப்பு தினம், பெண் குழந்தைகள் தினம்னு பட்டியல் நீண்டுச்சு.

இதை, பள்ளி, கல்லூரினு சம்பந்தப்பட்ட இடங்கள்ல போய் தெரியப்படுத்தி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தத் தொடங்கினேன். மருத்துவர்கள், செவிலியர்கள் தினம்னா மருத்துவமனைக்குப் போய் ஒரு நிகழ்ச்சி, பேரணினு ரெடி பண்ணிடுவேன். ஒருமுறை ஏதோ வேலையா கயத்தாறு போயிருந்தேன். அன்னைக்கு டைரியை கவனிக்கலை. அன்னைக்கு ‘உலக புத்தக தினம்’ங்கறது திடீர் ஞாபகம் வந்துச்சு. உடனே, அங்கிருந்த ஒரு பள்ளி தலைமையாசிரியரைப் பார்த்து இன்ஸ்டன்ட்டா ஒரு ஃபங்ஷன் நடத்திட்டு வந்தேன்!’’ என்கிறார் அவர் பெருமையாக!

‘‘இதெல்லாம் எதுக்குனு நீங்க கேட்கலாம். கை கழுவுறதெல்லாம் சாதாரண வேலைதானேனு கூட நினைக்கலாம். ஆனா, அதை எத்தனை பேர் சரியா செய்யறோம்? இதையெல்லாம்‘உலக கை கழுவும் தின’த்தில் பேசுவோம். அதே மாதிரி தூங்கும் நேரம் பத்தி ‘தூக்க தின’த்தில் பேசுவோம். வருஷத்தில் ஒரு நாளாவது நம்மைச் சுத்தியிருக்கிற சின்னச் சின்ன விஷயங்களை கவனிக்கவும் அதுபத்தி யோசிக்கவும் இந்த நாட்கள் உதவுது.

இதுவும் ஒருவகை விழிப்புணர்வுதான். அதை சந்தோஷமா, மனநிறைவோட செய்யிறேன்!’’ என்கிற முத்துமுருகன் யு.பி.எஸ்.இ., டி.என்.பி.எஸ்.சி தேர்வுப் பயிற்சிக்காக ‘பயிலும் குழு’ என்கிற அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

‘‘என்ன படிக்கிறதுனு கூடத் ெதரியாம தத்தளிச்சிருக்கேன். அந்த நிலை யாருக்கும் வரக்கூடாதுனுதான் இதைத் தொடங்கினேன். இப்போ, முதல் கட்டமா அரசுத் தேர்வுகளுக்கு இலவசமா கோச்சிங் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம். கோவில்பட்டி சப்-கலெக்டரா இருந்த விஜயகார்த்திகேயன் சார்தான் இதுக்கு முன்னோடி! அவர் போட்ட பாதையில போயிட்டு இருக்கேன். மாணவர் சமுதாயத்துக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கு... முடியறதை கண்டிப்பா பண்ணுவேன்!’’ என்கிறார் முத்துமுருகன்
உறுதியான குரலில்!

தினமும் கை கழுவுறது சாதாரண வேலை
தானேனு கூட நினைக்கலாம். ஆனா, அதை
எத்தனை பேர் சரியா செய்யறோம்?

- பேராச்சி கண்ணன்
படங்கள்: எஸ்.பி.பாண்டியன்