இதுக்குத்தான் என்னை இறைவன் படைச்சிருக்கான்!



நவநீதனும் சரி... அரவிந்தும் சரி... ரெண்டு பேருமே கடவுளின் குழந்தைகள். ‘இப்படி குழந்தைகளைக் குடுத்திட்டியே கடவுளே’ன்னு என்னைக்கும் நான் வருத்தப்பட்டதே இல்லை. ‘இப்படியொரு வாய்ப்பைக் கொடுத்ததுக்கு நன்றி கடவுளே’ன்னுதான் நினைப்பேன். எல்லாத் தாயும் நாலைஞ்சு வயசு வரைக்கும்தான் பிள்ளைகளோட பால்யத்தை அனுபவிக்க முடியும். நான் வாழும் காலம் முழுக்க அனுபவிக்கிறேன்...’’

- ராதா நந்தகுமாரிடம் ஐந்து நிமிடம் பேசினால் போதும்... மனதைச் சூழ்ந்திருக்கும் சோர்வெல்லாம் விலகியோடிப் போகிறது. எல்லாவற்றையும் நேர்மறையாகப் பார்ப்பது அவருக்கு வாய்த்த வரம். வாழ்வைக் கவ்விய அத்தனை துயரங்களையும் புன்னகையால் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வங்கி அதிகாரி வேலையையும் உதறிவிட்டு, சிறப்புக் குழந்தைகளின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெண்மணி. கனிவும், அன்பும், கருணையும் ததும்புகிறது அவரது பேச்சில்..!

“எனக்குப் பூர்வீகம், செங்கற்பட்டு பக்கத்தில் ஆலப்பாக்கம். படிப்பு முடிஞ்சதும் வேலை... திருமணம்... நல்ல கணவர்னு எல்லாம் நல்லவிதமாவே எனக்கு அமைஞ்சது. என் கணவர் ஒரு பெரிய நிறுவனத்தில ஆடிட்டரா இருந்தார். கல்யாணம் முடிஞ்சதும் டெல்லி போயிட்டோம். முதல் மகன் நவநீதன் பிறக்கும்போதே எடை குறைவாதான் இருந்தான்.

அதை நாங்க பெரிசா எடுத்துக்கலே. 6 மாசத்துல ஃபிட்ஸ் வந்துச்சு. ஒரு வயசுலயே அவனுக்கு ஏதோ பிரச்னைனு புரிஞ்சிடுச்சு. கை, கால்கள் அசையாது. தலையைத் தூக்க முடியாது. அசைவுகளே இருக்காது. படுக்கைதான் உலகம்.  முகபாவங்களை வச்சு அவனோட தேவைகளைப் புரிஞ்சுக்குவேன். டெல்லியில சிறப்புக் குழந்தைகளின் கல்வி, பராமரிப்புக்கு ஏகப்பட்ட ஏற்பாடுகள் இருக்கு. ஒரு சிறப்புப் பள்ளியில அவனைச் சேர்த்தேன். நாலைஞ்சு மணி நேரம் அவன் கூடவே பள்ளியில இருப்பேன். அந்த நேரத்துல மற்ற சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்கிறது, சொல்லிக் கொடுக்கிறதுன்னு சின்னச்சின்ன வேலைகளைச் செய்வேன். மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும்.

எனக்கும் சரி, என் கணவருக்கும் சரி... இன்னொரு குழந்தை பெத்துக்கிறதுல ஆர்வம் இல்லை. ஆனா, நவநீதனோட ஆசிரியர்களும் உறவுக்காரங்களும், ‘இன்னொரு குழந்தை இருந்தா அவன் நிலை கொஞ்சம் மாறலாம்’னு சொன்னாங்க. அரவிந்த் பிறந்தான். 1 வயசு வரை ரொம்பவே ஆக்டிவா இருந்தான். சராசரி குழந்தைகள் செய்ய முடியாத கணக்குகளை எல்லாம் செய்வான். அவனை கண்ட்ரோல் பண்றதே சிரமமா இருக்கும்.

அரவிந்துக்கு ரெண்டு வயசானப்போ, நவநீதனோட நிலை மோசமாயிடுச்சு. திடீர்னு ஹீமோகுளோபின் குறைஞ்சிடும். ரத்தம் ஏத்துவோம். பிசியோதெரபி, வாஸ்டாதெரபின்னு நிறைய சிகிச்சைகள்... என் கவனமெல்லாம் நவநீதன் மேல இருந்துச்சு. அந்தச் சூழல்ல மெல்ல மெல்ல அரவிந்த் அமைதியாகிட்டான். ஒரு மூலையில உக்காந்துக்கிட்டு ரெண்டு கிண்ணங்களை வச்சுக்கிட்டு ஏதாவது ஒரு பொருளை மாறி மாறி கொட்டிக்கிட்டு மணிக்கணக்குல உக்காந்திருப்பான்.

அது ஒரு மோசமான நேரம். அரவிந்துக்கும் ஏதோ பிரச்னைன்னு புரிஞ்சிடுச்சு. அதை ஜீரணிக்கிறதுக்குள்ள நவநீதன் எங்களை விட்டுப் போயிட்டான். நவநீதன் இருந்தவரைக்கும் அவனுக்கு என்ன பிரச்னைன்னு டாக்டர்களால கண்டுபிடிக்க முடியல. நிறைய ஆராய்ச்சிகள் செஞ்சு, அவன் மரணத்துக்குப் பிறகுதான் அது, ‘மைட்டோ காண்ட்ரியல் டிஸார்டர்’னு கண்டுபிடிச்சாங்க.

நவநீதனோட மரணம் என் வீட்டுக்காரரை முடக்கிடுச்சு. தினமும் டயாலிசிஸ் பண்ற அளவுக்கு சிறுநீரகக் கோளாறு. ஒரு கட்டத்துல அவரும் எங்களை விட்டுட்டுப் போயிட்டார். இறைவனுக்கு ஏதோ திட்டம் இருக்கு... ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை சோதிச்சுப் பாக்குறார்... அதனால இழப்பையும் வேதனையையும் ஒதுக்கிட்டு அரவிந்துக்காக வாழ ஆரம்பிச்சேன். அவனுக்கு இருந்தது ஆட்டிசம்.

டெல்லியில சுமந்தா ரெட்டினு ஒரு டாக்டர் சிறப்புக் குழந்தைகளுக்காக ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சாங்க. வங்கி வேலையை விட்டுட்டு அவங்ககூட இணைஞ்சு சிறப்புக் குழந்தைகளுக்காக வேலை செய்ய ஆரம்பிச்சேன். அடித்தட்டுக் குடும்பங்கள்ல பிள்ளைகளுக்கு இருக்கிறது என்ன பிரச்னைன்னே தெரியாம எல்லாத்தையும் ‘மனவளர்ச்சி பாதிப்பு’னு சொல்லிடறாங்க. ரெண்டு சிறப்புக் குழந்தைகளுக்கு தாயா, சிறப்புப் பள்ளிகள்ல நிறைய சிறப்புக் குழந்தைகளை பராமரிச்சவளா நான் என் அனுபவத்தை மற்ற பெற்றோர்கிட்ட பகிர்ந்துக்க ஆரம்பிச்சேன்.

என் தீவிரத்தைப் பாத்துட்டு, ‘நீ ஸ்பெஷல் பி.எட் படிச்சா நல்லாயிருக்கும்’னு டாக்டர் சுமந்தா சொன்னாங்க. அதையும் முடிச்சேன். அரவிந்தை பராமரிக்கிற நேரம் தவிர மற்ற நேரங்கள்ல சிறப்புக் குழந்தைகளோட வீடுகள், பள்ளிகள்னு பயணிக்க ஆரம்பிச்சேன். பெற்றோர்கள் மத்தியில விழிப்புணர்வு ஏற்படுத்துற வேலையில இறங்கினேன். நிறைய சிறப்புப் பள்ளிகள் உருவாக துணை நின்னேன். சாஸ்வதிசிங்குன்னு ஒரு சகோதரியோட இணைஞ்சு ‘இன்ஸ்பிரேஷன் சென்டர்’ங்கிற பேர்ல ஒரு பராமரிப்பு மையத்தைத் தொடங்குனேன். 

டெல்லியில தனிச்சிருக்க வேண்டாம்னு உறவுகளெல்லாம் சென்னைக்குக் கூப்பிட்டாங்க. சில வருடங்களுக்கு முன்னாடி அரவிந்தைக் கூட்டிக்கிட்டு இங்கே வந்துட்டேன். ‘இந்த உலகத்துக்குள்ளேயே இருந்தா மனநிலை பாதிச்சுடும்’னு சொல்லி ஒரு ஆடிட் வேலை வாங்கிக் கொடுத்தாங்க உறவுக்காரங்க. ஒரு மாசம் கூட என்னால அந்த வேலையைப் பார்க்க முடியல. என்னை இறைவன் இந்தக் குழந்தைகளுக்காகப் படைச்சிருக்கான். அவங்க கூடவே வாழுறதுலதான் எனக்கு திருப்தி இருக்கு. வேலையை விட்டுட்டு வந்துட்டேன்.

இப்போ 5 பள்ளிகள்ல சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்குறேன். நிறைய முகாம்கள்ல கலந்துக்கறேன். அரவிந்த், திறந்தவெளி பள்ளியில +2 தேர்வு எழுதியிருக்கான். ரொம்ப ஆச்சரியமான வளர்ச்சி அவனோடது. அவனால பேச முடியாது. ஆனா ஆங்கிலம், அறிவியல், கணக்குல அவ்வளவு திறமை. எல்லார் கூடவும் ரொம்பவே அன்பா, கனிவா நடந்துக்கிறான். ரொம்ப ரசனையான பிள்ளை அவன். ஆறாவது படிக்கும் காலத்துல இருந்தே கதைகள் எழுத ஆரம்பிச்சான். இப்போ நிறைய கவிதைகள் எழுதுறான். ரொம்ப தரமான எழுத்து அவனோடது. சில நேரங்கள்ல எனக்கே அவன் தாய்மையை கத்துத் தர்றான். அரவிந்தை நினைக்கிறப்போ ரொம்பவே பெருமையா இருக்கு.

இன்னும் எனக்கு ஒரே ஒரு கனவு. என்னதான் திறமையான பிள்ளைகளா இருந்தாலும் சிறப்புக் குழந்தைகளால எல்லா வேலையையும் சுயமா செய்ய முடியாது. கருணையுள்ள ஒரு ஆள் அவங்களுக்குத் தேவை. என் காலத்துக்குப் பிறகு அரவிந்துக்கு யாராவது வேணும். அரவிந்த் மாதிரியுள்ள எல்லா குழந்தைகளுக்குமே அப்படியான ஒரு உதவி தேவை. அதுக்காக, சிறப்புக் குழந்தைகளோட பெற்றோர்களை எல்லாம் ஒருங்கிணைச்சு, சகல வசதிகளோட ஒரு பெரிய இல்லத்தை உருவாக்குற முயற்சியில இறங்கியிருக்கேன்.

அதுல தொழிற்பயிற்சிகள், கல்வி, விழிப்புணர்வுன்னு எல்லா ஏற்பாடுகளும் இருக்கணும். எல்லாக் குழந்தைகளையும் அந்த இல்லத்துல பராமரிக்கணும். பெற்றோர்களும் குழந்தைகளோட தங்கணும். அப்படி தங்கும்போது ஒவ்வொரு குழந்தைக்கும் நிறைய தாய்கள் கிடைப்பாங்க. ஒரு தாய் போயிட்டா இன்னொரு தாய் அவங்களை பராமரிப்பாங்க. இல்லத்துக்கான வேலைகள் தீவிரமா நடந்துக்கிட்டிருக்கு..!’’ - நெகிழ்ச்சியாகச் சொல்கிறார் ராதா. வெள்ளந்தியான சிரிப்பில் தாயின் வார்த்தைகளை ஆமோதிக்கிறார் அரவிந்த்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்