நேர்மை
அட! இரண்டாயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள இரண்டு புத்தகங்கள்... ஒன்று டிராயிங் புக், இன்னொன்று டிக்ஷனரி. இவற்றை யாராவது இலவசமாகத் தருவார்களா என்று அவள் வியந்துகொண்டிருக்கும்போதே இன்னொரு புத்தகத்தை எடுத்துக் காண்பித்தான் அவன். ‘‘இது தகவல் களஞ்சியம். படிக்கிற பசங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல். விலை வெறும் ஆயிரம் ரூபாதான். இதை வாங்குனாதான் அந்த ரெண்டு புக்ஸும் ஃப்ரீயா கிடைக்கும்!’’
என்றான்.இந்த விஷயத்தை கணவன் சண்முகத்திடம் சொல்லி சம்மதம் வாங்கலாம் என்று திரும்பியவள், வாசலில் சண்முகம் நிற்பதைக் கண்டு திகைத்தாள். ‘‘எடுத்துட்டு போப்பா!’’ என்றார் அவர் ஒரே வார்த்தையில். அவன் சென்றதும், ‘‘பேரப்பிள்ளைங்களுக்கு பிறந்தநாள் பரிசா டிக்ஷனரி, ட்ராயிங் புக்கெல்லாம் வாங்கிக் கொடுக்கணும்னு சொல்லீட்டிருந்தீங்களே... மூணு புஸ்தகமும் ஆயிரம் ரூபான்னா சீப்புதானே?’’ என்றாள்.
‘‘அவன் மூணு புஸ்தகத்தையும் காட்டி மொத்தமா ஆயிரம் ரூபானு சொல்லியிருந்தா தாராளமா வாங்கியிருப்பேன். அவனோட மார்க்கெட்டிங் யுக்தி மனுஷனை முட்டாளாக்குது. வியாபாரத்துல புத்திசாலித்தனம் இருக்கணும். ஆனா, அடுத்தவங்களை முட்டாளாக்குற புத்திசாலித்தனம் கூடாது!’’ என்றார் நாற்பது ஆண்டுகளாக வியாபாரம் செய்துவரும் சண்முகம் அண்ணாச்சி.
|