கைம்மண் அளவு



‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பது வினைத்திட்பம் அதிகாரத்துத் திருக்குறள். அதைச் செய், இதைச் செய், அதைச் செய்வேன், இதைச் செய்வேன், அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிய காரியம். ஆனால் அவர் சொன்னபடி அவரே செய்தல், அவர் எதிர்பார்த்தபடி எதிராளி செய்தல் என்பதெல்லாம் மிக அரிதான காரியம்.

பயனில சொல்லாமை அதிகாரத்துத் திருக்குறள் சொல்கிறது, ‘பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார் கண் செய்தலின் தீது’ என்று. பலர் கூடி இருக்கும் அவையில், அல்லது பல்லோரும் வாசிக்கும் பருவ இதழில், வலைத்தளத்தில், முகநூலில் யாருக்கும் எவ்விதப் பயனும் தராத சொற்களைப் பேசுதல் என்பது, நெருங்கிய ஆத்மார்த்தமான நண்பர்களுக்குத் தகாதன செய்வதை விடவும் தீமையானது.

அதே அதிகாரத்துத் திருக்குறள் சொல்கிறது, ‘பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் மக்கட் பதடி எனல்’. எப்பயனும் விளைவிக்காத சொற்களைத் தூக்கிக் கொண்டாடித் திரிகிறவனை, மனிதன் என்று மதிக்காதே; மனிதப் பயிரில் மணியாக உருப்பெறாத பதர் என்று ஒதுக்கு. பார தீரமான நமது அரசியல்காரர்களை, வீரப் பிரதாபக் கோஷங்கள் போடும் எழுத்துக்காரர்களை நாம் என்னென்பது?

எம்.எம்.கல்புர்கி என்ற அறிஞர், ஆய்வாளர், வரலாற்றாசிரியர், எழுத்தாளர் கொலை செய்யப்பட்டதை வரலாறு அதிர்ச்சியுடன், ஆத்திரத்துடன், அச்சத்துடன், ஏமாற்றத்துடன் பார்த்துத் திகைத்து நிற்கிறது. தெரு நாடக இயக்கத்தின் முன்னோடியான சப்தர் ஹஸ்மி ஆளுங்கட்சி குண்டர்களால் மக்கள் நடமாட்டமுள்ள வீதியில் அடித்துக் கொல்லப்பட்ட போதும் அவ்விதமே!

ஒரு எழுத்தாளன் கொலை செய்யப்படும்போது கண்மூடி மெளனியாகிச் சும்மா இருப்பதற்கு எண்ணுகிறது சாகித்ய அகாதமி. கேட்டால், ஆட்சிக் குழுவைக் கூட்டி, தீர்மானங்களின் மீது வாக்கெடுப்பு நடத்தி, என்ன செய்வதென்று யோசிப்பார்களாம். சொந்த வீட்டில் இழவு விழுந்திருக்கிறது. பொட்டிக் கரைவது மனிதப் பண்பு. மேலிடத்து ஆணைக்குக் காத்திருப்பது அறிஞர் பண்பு போலும்.

சங்கீத் நாடக் அகாடமி, லலித் கலா அகாடமி, சாகித்ய அகாடமி போன்றவை அரசியல் தலையீடு இல்லாத சுதந்திரமான அமைப்புகள் என்று சட்ட திட்டங்கள் சொல்கின்றன. சமத்துவத்துக்கும், சகோதரத்துவத்துக்கும், சார்பற்ற தன்மைக்கும் இந்தியாவில் இல்லாத சட்டங்களா? சட்டம், சட்டம் கட்டப்பட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கும்.

நடைமுறை அவரவர் வசதி போல், சுயநலம் போல், ஆதாயம் போல் இருக்கும். அரசின் நிதியுதவி பெறும் அல்லது அரசு சார்புடைய எந்த அமைப்பிலும் எப்படித் தலைவர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது சி.பி.ஐ விசாரித்தறிய வேண்டிய மர்மம் அல்ல.

இந்திய நாட்டின் எழுத்தாளன் கொலை செய்யப்படும்போது மீனம், மேஷம் கணித்து நிற்கும் சாகித்ய அகாடமி நிலைமை பரிதாபத்திற்கு உரியது. இவர்கள்தான் இந்தத் தேசத்து எழுத்தாளனின் உரிமைகளைக் காக்கிற, இலக்கியத்தைப் பேணுகிற, போற்றுகிற பெருந்தனக்காரர்கள்!

படைப்பின் குரலை அடக்க, நசுக்க, நிறுத்த முயலும் எந்த முயற்சிக்கும் எழுத்தாளன் எதிரானவன். உலகம் முழுக்க ஒரே மொழி பேசப்படுவதில்லை, ஒரே இசை இல்லை, ஒரே மரபு இல்லை, ஒரே மதம் இல்லை, ஒரே உணவு இல்லை, ஒரே மருத்துவம் இல்லை, ஒரே தத்துவம் இல்லை, ஒரே கருத்தும் இருக்க இயலாது. மாற்றுக் கருத்து உடையவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுவது என்பதை எந்த அறமும் போதிக்கவில்லை.

அது ஜோ டி குரூஸாக இருந்தாலும் சரி, பெருமாள் முருகனாக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. ஆனால் ஜோ டி குரூஸை வெட்ட வாளெடுத்துப் பாய்ந்தவர்களே இங்கு பெருமாள் முருகனுக்கு கேடயம் ஏந்தினார்கள். இந்த முரண் வியப்பளிக்கிறது.

இருவருக்கும் ஆதரவாக, குறைந்தது ஐந்து நாளிதழ்களில் எனது கருத்துப்பதிவுகள் உண்டு. ஆனால், பின்னதை வசதியாக மறந்துவிட்டு, முன்னதை மந்திரம் போல் நினைவு வைத்து எனக்குச் சேராத சட்டையை, பிடிக்காத வண்ணத்தை வல்லந்தமாக அணிவிக்கப் பார்க்கிறார்கள். நாம் எவர் வீட்டு வளர்ப்புப் பிராணியுமல்ல. ஆனால் வளர்ப்புப் பிராணிகளாக இருந்தவர்கள், இருப்பவர்கள், அதைக் குதூகலத்துடன் செய்ய முனைகிறார்கள்.

குலை குலையாக லட்சத்து நாற்பதினாயிரம் திக்கற்ற ஈழத் தமிழர்கள் உயிர் துடைத்து எறியப்பட்டு பெருஞ்சவக் குழிகளில் மூடப்பட்டபோது, பவானி சமுக்காளம் விரித்து வயிறு புடைக்கத் தின்ற களைப்பில் சொகுசு உறக்கம் பூண்டிருந்தவர்கள் இன்று வேகமாகக் கேள்விக் கணைகளை எறிகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தமிழில் முதன்முறையாகக் ‘கள்ள மௌனம்’ என்ற சொல்லை நான் பயன்படுத்தினேன்.

உண்மையைச் சொன்னால், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னால், எம்.எம்.கல்புர்கியின் பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. அது அவர் தப்பு அல்ல. என் தவறும் அல்ல. இந்திய இலக்கியச் சூழல் இப்படித்தான். எம்.எஃப்.உசேன், ஆதிமூலம், மருது என அறிய மாட்டோம். ஆனால், உலக ஓவியங்கள், சிற்பங்கள், இசை என்போம். அவை எவையும் வாசித்து, கண்டு, கேட்டு ரசித்து இன்புற்றவை அல்ல. கூகுள் சரணம் ஐயப்பா! கட்டுரை எழுது ஐயப்பா!!

எழுத்தாளன், கவிஞன், கலைஞன் என்பவன் காலத்தின் குரல். சமூக மனசாட்சியின் குரல். நீதியின் குரல், அறத்தின் குரல். எவ்வகையினும் அதை மடக்குவது அடக்குவது என்பது மக்கள் விரோதச் செயல்பாடு. முற்போக்குவாதி, பிற்போக்குவாதி என்பார்கள் அவரவர் சௌகரியத்துக்கு. அஃதெல்லாம் ஓலைக்கால், சீலைக்கால் சமாச்சாரம். நுட்பமான எந்தக் கலைஞனும் முற்போக்குதான். அது கலைஞனின் இயல்பு, உயிரின் ஊற்று; நீவிர் வழங்கும், சூட்டும் பட்டம் அல்ல.

‘மன்னவனும் நீயோ, வள நாடும் உனதோ, உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்’ என்று கேட்டு நாட்டைக் கடந்து நடந்தவன் முற்போக்கா பிற்போக்கா? மவுண்ட் ரோடு அடங்காத லட்சக்கணக்கான தமிழன்மார் பின்தாடர சவக்கோட்டைக்குப் போனவர் முற்போக்கு, பதின்மூன்று பேர் பின்தொடர மயானத்துக்குப் போனவர் பிற்போக்கா?

முன்பொரு சமயம், பிரபலமான மாத இதழ் ஒன்றில் அச்சிடப்பட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்பாக, அந்தக் கட்டுரை அச்சிடப்பட்டிருந்த தாளில் மலம் சுற்றி, இதழாசிரியருக்குத் தூதஞ்சல் அனுப்பியவர்களை முற்போக்கு என்பீர்களா, பிற்போக்கு என்பீர்களா? ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவர் எழுதுவது இலக்கியம் அல்ல என்ற விமர்சனத்துக்கு எதிராக, நள்ளிரவில் அவர் வீட்டுத் தொலைபேசியில் கொக்கரித்தவர்கள் முற்போக்கா, பிற்போக்கா?

படைப்பாற்றலுக்கு எதிரான அரசியல் கொலையை எதிர்த்து இடதுசாரித் தோழர்கள் அறிக்கை வெளியிட முயன்றபோது, என்னிடம் வாசித்துக்கூட காட்ட வேண்டாம், நான் உங்களுடன் இருக்கிறேன் என்று சொன்னவன். இன்னொரு படைப்பிலக்கியவாதியின் கருத்துச் சுதந்திரத்தை மறுத்து அறிக்கையில் கையெழுத்துக் கேட்டபோது மறுத்தவனும் நானே! அவரவர் கருத்துக்கு அவரவர் பொறுப்பு.

ஆனால், இதுபோன்ற கொடுமைகளைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு சொந்தக் கணக்கு வழக்குகளை நேர் செய்வதும் அரசியல் தந்திரம்தான். இந்தியாவின் லலித் கலா அகாடமி தலைவர் என்பதோ, முன்னாள் பாரதப் பிரதமரின் சகோதரி மகள் என்பதோ சாதாரணமான காரியம் அல்ல. அது போலவே பல பொறுப்புகளை முன்னாளில் வகித்த எழுத்தாளன் எனும் வர்க்கத்தில் பட்ட அரசியல் செல்வாக்கு உடையவர்களும். நகரப் பேருந்தில் பயணம் ெசய்யும் எம்மொழியின் எழுத்தாளனும் இவர்களும் ஒன்றா? பரிதாபத்துக்குரிய எழுத்தாளன் இவர்களுடன் சமபந்தி போஜனம் கூடச் செய்ய இயலாது.

அன்று அனுபவித்த எதையும் இன்று துறப்பது எப்படி? தத்தம் பதவிக்காலத்தில் இவர்கள் கருத்தரங்குக்கும் இந்தியாவைப் பிரதிநிதிப்படுத்தவும் சென்ற வெளிநாடுகள் எத்தனை? அந்த அரசாங்கப் பணச்செலவை எப்படித் திருப்பித் தருவார்கள்?

 ஒரு நாவல் எழுதியவர் 23 நாடுகளுக்குப் போகிறார், பல மொழிகளில் பெயர்க்கப்படுகிறார், பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொள்கிறார். அவரை விட எத்தரத்திலும் குறைவுபடாத, பல நூல்கள் எழுதிய அழகிய பெரியவன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், கீரனூர் ஜாகிர் ராஜா போன்றோர் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் அலுவலக முகவரியைக் கூட அறிய மாட்டார்கள்.

என்னைக் கேட்டார்கள், ‘‘சாகித்ய அகாதமி விருதை நீங்கள் திருப்பித் தரப் போவதில்லையா, எம்.எம்.கல்புர்கி கொலைக்கு எதிர்ப்பாக’’ என்று. லட்சத்து நாற்பதினாயிரம் அப்பாவித் தமிழர்கள், அவர்கள் தமிழன் என்ற ஒரே காரணத்தால், பாரத சர்க்காரின் ஆதரவுடன் கொன்று குவிக்கப்பட்டபோது தமது கிழிந்து போன உள்ளாடையைக் கூட இங்கு எவரும் துறக்கவில்லை!மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளர்,

ஞானபீட விருதும் பெற்ற எம்.டி.வாசுதேவன் நாயர் அறிக்கையை இவர்கள் வாசித்தும் பார்த்திருக்க மாட்டார்கள். அவருக்கு என்ன அச்சமா, சுயநலமா? ஒரு கட்சியின் அரசாங்கத்தில் பதவி சுகம் பெறுகிறார்கள் பலரும். இன்னொரு கட்சியின் அரசாங்கம் வரும்போது அந்த சுகம் வேறு சிலருக்குப் போகிறது! இதில் எம்மனோர்க்கு என்ன கொடுக்கல், வாங்கல்? இழந்தவர் ஆடும் பகடை ஆட்டத்தில் நாமென்ன கருவிகளா?

எம்.எம்.கல்புர்கியின் கொலையை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் இவர்கள் கொலை செய்தவர்களைப் போல எழுத்துக்கு எதிரானவர்கள்தானே!எழுத வந்தபோது நமக்கு எந்த விருது பற்றியும் கனவுகள் இல்லை.

நாம் பெற்ற விருது வழிப்பறியல்ல. என்னை நினைவு வைத்துத் தருவதற்கு நான் முற்போக்கு முகாம் அல்ல. கல்லூரிப் பேராசிரியர் அல்ல. ஆள் பிடித்து, ஆள் வைத்து அடித்துப் பறிக்கவில்லை. நாற்பதாண்டு கால இலக்கியப் பணிக்குக் கிடைத்த மிகச் சிறியதோர் அங்கீகாரம்!

ஒரு இதழில் இருந்து தொலைபேசியில் கேட்டார்கள். ‘‘நாஞ்சில், சாகித்ய அகாடமி விருதைத் திருப்பித் தருவீர்களா?’’‘‘பட்டயம் வேண்டுமானால் தந்து விடலாம். பணம் செலவாகிப் போய் அஞ்சு வருஷம் ஆச்சே! ஒரு காரியம் செய்யலாம். லட்ச ரூபாய் நீங்க விலையில்லாமல் தாருங்கள், திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’’ என்றேன்.விருது வாங்கியவர் பட்டியல் ஒரு பக்கம் இருக்கட்டும்.

விருது வாங்கும் முன்பே பன்னாட்டுக் கருத்தரங்குகளுக்கு எனப் பயணித்தோர் எவரெவர்? அவர்கள் அங்கு சென்று ஆற்றிய உரைகள் என்னென்ன? வாசித்த கட்டுரைகள் எவை எவை? உரையாற்றினார்களா, கட்டுரை வாசித்தார்களா அல்லது அரங்குப் பக்கமே போகாமல் ஊர் சுற்றிப் பார்த்தார்களா, பாரில் உட்கார்ந்திருந்தார்களா? அதை எப்படி இன்று திருப்பித் தருவார்கள்?

எந்த அரசு என்றாலும், எழுத்தாளர்களுக்கு, கலைஞர்களுக்குத் தமது கட்சி நிதியிலிருந்து சாகித்ய அகாடமி விருது தருவதில்லை. கட்சி நிதியிலிருந்து வழங்கப்படும் விருதுகளின் செயல்பாடுகள் நமக்குத் தெரியும். இது மக்கள் வரிப் பணத்தில் இருந்து வழங்கப்படுவது. எவரிடம் பெற்றுக்கொண்டதை எவருக்குத் திருப்புவது?

திருமூலர் சொல்கிறார் - ‘பட மாடக் கூடல் பரமற்கு ஒன்று ஈகில் நடமாடக் கூடல் நம்பர்க்கு அங்கு ஆகா’ என்று. சடையில் கங்கை, கூன் பிறை, கழுத்தில் நச்சரவம் பூண்ட பரமனுக்கு ஒன்று கொடுத்தால், குண்டு குழிச் சாலையில் புகையில் தூசியில் வெயிலில் நடமாடித் திரியும் நம்மவனுக்கு அது வந்து சேருமா என்று! விருதைத் திருப்பித் தருதல் என்பது ஒரு அடையாள எதிர்ப்பு, அவ்வளவே!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சொல்கிறார், ‘‘எமது எழுத்தாளர்கள் மூவர் விருதுகளைத் திருப்பித் தருவதாக இருந்தால் அதற்கான பணத்தை நாங்கள் தருவோம்’’ என்று.

மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வெங்கடேசன், டி.செல்வராஜ் என அவர்கள் கணக்கு நேராகி விட்டது. பாவம், பொன்னீலன் அண்ணாச்சி, புவியரசு, சிற்பி! அவர்கள் கணக்கை கலை இலக்கியப் பெருமன்றம் நேர் செய்யுமா? திலகவதி, வைரமுத்து, பிரபஞ்சன் ஆகியோர் எந்த அணி? சா.கந்தசாமி, அசோகமித்திரன் என்ன செய்வார்கள்?

ஜோ டி குரூஸ் பணத்தை மோடி கட்டுவாரா?ஒரு வாதத்துக்காகக் கேட்கிறேன்... விருதையும் பணத்தையும் திரும்பத் தந்து விடலாம்! ஆனால் விருது பெற்றபின் நடந்த பாராட்டுகள், நேர்காணல்கள், அந்த நூல் பிறமொழிகளில் பெயர்க்கப்பட்டதன் உரிமம், இவற்றுக்கான மதிப்பீட்டுத் தொகையையெல்லாம் எப்படிக் கணக்கிடுவார்கள்? எப்படித் திருப்பித் தருவார்கள்? அவ்விதம் செய்ய முடியாது எனில், விருதைத் திருப்பித் தரும் செயல்பாடு என்பதுவும் ஒரு அரசியல் நாடகம் என்பேன் நான். உங்கள் அரசியல் நாடகத்துக்கு எங்களை வேடமேற்கச் சொல்கிறீர்களா?

விருதைத் திருப்பிக் கொடுங்கள் என்று சொன்ன ஒரு தோழரிடம் நான் கேட்டேன், ‘‘நானெழுதிய முப்பத்தைந்து புத்தகங்களில் எதை நீங்கள் வாசித்தீர்கள்?’’ என்று. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கல்லெறிவதும் ஒரு தமிழ்க் குணம் ஆகிப் போயிற்று இன்று.தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இதுவரை எத்தனை இலக்கியவாதிகளுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து அனுப்பின?

சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டு களில் அவர்களில் எத்தனை பேருக்கு ‘பத்ம’ விருதுகள் தரப்பட்டன? தகுதி சால் மூத்த எழுத்தாளர் பலருக்கும் இன்று ஏன் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டதில்லை? மாநில அரசுகளின் விருதுகள், தாங்குபவருக்கும் தடுக்குப் போடுபவருக்கும் தரப்படுகின்றன; ஏன்?

எவரும் இங்கு வாய் திறந்து கேட்கிறார்களா? அரசாங்கங்களுக்கு எழுத்து என்றால் என்ன தெரியும்? எழுத்தாளன் என்றால் என்ன தெரியும்? ரம்மி விளையாட்டில் பாயின்ட்டுக்குப் பத்து காசு வைத்து ஆடுகிறது எழுத்தாளர் உலகம்.

பாயின்ட்டுக்கு கோடிகள் வைத்து ஆடுகின்றது அரசியல் உலகம்!தமிழ்கூறு நல்லுலகு அறிதுயில் போய் ஆழ்ந்து துயிலில் கிடக்கிறது. எச்சில் சோறு தின்னும் பிச்சைக்காரன் தட்டத்தையும் ஏக்கத்துடன் பார்க்கிறது. என்ன கொடுமையடா இது!

சட்டம், சட்டம் கட்டப்பட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கும். நடைமுறை அவரவர் வசதி போல், சுயநலம் போல், ஆதாயம் போல் இருக்கும். படைப்பின் குரலை அடக்க, நசுக்க, நிறுத்த  முயலும் எந்த முயற்சிக்கும் எழுத்தாளன் எதிரானவன். மாற்றுக் கருத்து உடையவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுவது  என்பதை எந்த அறமும் போதிக்கவில்லை.

உலக ஓவியங்கள், சிற்பங்கள், இசை  என்போம். அவை எவையும் வாசித்து, கண்டு, கேட்டு ரசித்து இன்புற்றவை அல்ல.  கூகுள் சரணம் ஐயப்பா! கட்டுரை எழுது
ஐயப்பா!!ரம்மி விளையாட்டில் பாயின்ட்டுக்குப்  பத்து காசு வைத்து ஆடுகிறது எழுத்தாளர் உலகம். பாயின்ட்டுக்கு கோடிகள்  வைத்து ஆடுகின்றது அரசியல் உலகம்!

- கற்போம்...

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது