அவலத்தை மாற்றும் அட்சயம்!களத்தில் கல்லூரி மாணவர்கள்

‘‘ஐயா... சாமி... தர்மம் பண்ணுங்க’’ என ஒரு குரல் கேட்டதும் பாக்கெட்டைத் துழாவி தட்டுப்படும் ஒரு நாணயத்தைப் போட்டுவிட்டு கடந்து போகும் மக்களுக்கு மத்தியில் ‘இவர்கள் யார்? ஏன் பிச்சை எடுக்கிறார்கள்?

நம் ஊரில் எவ்வளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்?’ எனப் பல கேள்விகளோடு புறப்பட்டு விடை தேடி இருக்கிறார் ஒரு கல்லூரி இளைஞர். அதன் விளைவாக பிச்சைக்காரர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற ஒரு அமைப்பும் உருவாகி இருக்கிறது...

‘அட்சயம்’ எனும் பெயரில்!‘‘என் பேரு நவீன்குமார். போன வருஷம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் காலேஜ்ல ஃபைனல் இயர் பி.இ படிச்சிட்டிருந்தேன். கேட் எக்ஸாமுக்காக சேலத்துல ரூம் எடுத்துத் தங்கியிருந்தேன். ஒருநாள் பஸ் ஏறும்போது, சுமார் 25 வயசுள்ள ஒரு ஆள் என்கிட்ட வந்தார். ‘சார், நண்பர்கள்கூட  வந்தேன். விட்டுட்டுப் போய்ட்டாங்க. பக்கத்து ஊருதான்... டிக்கெட் எடுக்க பத்து ரூபா கிடைக்குமா’னு கேட்டாரு.

ஆளு பார்க்க டீசன்டா இருக்காரேன்னு நானும் கொடுத்துட்டேன். ரெண்டு நாளைக்குப் பிறகு அதே பஸ் ஸ்டாப்ல அந்த ஆளைப் பார்த்தேன். என்கிட்ட சொன்ன அதே டயலாக்கை வேற ஆள்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார். ரொம்ப கடுப்பாகிடுச்சு. பத்து ரூபாய்க்காக இல்ல; நம்மள ஒருத்தன் ஏமாத்திட்டானேன்னுதான்.

ஒரு நாள் எனக்கு காலேஜ் லீவ்... அதே ஏரியாவில் அவனைப் பார்த்தேன். அவன் பின்னாலேயே போனேன். ரொம்ப நேரமா...

பலர்கிட்டயும் காசு வாங்கிட்டிருந்தவன் பக்கத்துல இருக்கற டாஸ்மாக் போய் ஒரு பாட்டில் வாங்கி, ரோட்லயே நின்னு குடிச்சான். கொத்தா சட்டையைப் பிடிச்சி, ‘நீ எப்பதான் உன் ஊருக்குப் போவ. எத்தனை நாளைக்கு பஸ் டிக்கெட் எடுக்கன்னு காசு கேட்டுகிட்டே இருப்பே?’ன்னு கேட்டேன்.

முதல்ல கொஞ்சம் மிரண்டவன் அப்புறம் நிதானமா பேசினான். ‘தம்பி, எனக்கு டெய்லி மூணு குவாட்டர் அடிக்கணும். வேல வெட்டிக்கு போற மூடும் இல்ல. பிச்சைனு கேட்டா ஒரு ரூவா ரெண்டு ரூவாதானே கிடைக்கும்? அதான் இப்படி...’னு அலட்சியமா சொன்னான்!அதுக்கப்புறம் பிச்சைக்காரங்க எல்லார் மேலயும் ஒரு கண் வச்சேன்.

காலேஜ் லீவ்ல எல்லாம் நானே தனியா போய் சந்திப்பேன். ‘ஏன் பிச்சை எடுக்கறீங்க? தினம் எவ்வளவு ரூபாய் கிடைக்கும்? இதில் என்னென்ன பிரச்னைகள் வருது? வேற வேலை கிடைச்சா போவீங்களா?’னு கேள்விகளைக் கேட்டு அவங்க சொல்ற பதிலை வீடியோவா பதிவு பண்ணி, என் நண்பர்களுக்குப் போட்டுக் காட்டினேன். என் கல்லூரி சேர்மன் மதிவாணன் சார்கிட்டயும் காட்டினேன்.

அவர் தந்த ஊக்கத்தாலதான் இதுக்காக ஒரு குழுவை உருவாக்க முடிஞ்சது. அப்படித்தான் ‘அட்சயம்’ பிறந்துச்சு. இப்போ 300 பேர் இந்தப் பணியில ஈடுபட்டிருக்கோம்!’’ எனப் பெருமையுடன் சொல்லும் நவீன்குமார் கல்லூரியின்  பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்ட் (2010-2014) விருது பெற்றிருக்கிறார். இந்தப் பணியில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காகவே பெரிய நிறுவனத்தில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைத்த வேலையையும் உதறிவிட்டு, படித்த கல்லூரியிலேயே தற்போது ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

‘‘தனி ஆளான எனக்கு ஒரு குழு கிடைச்சதும் யானை பலம் வந்தது. நாங்க 40 குழுக்களா பிரிஞ்சு ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் முழுக்க ஆய்வு செய்ததில் சுமார் 2000 பிச்சைக்காரர்கள் இருப்பது தெரியவந்தது.

இதுல 60 வயது தாண்டினவங்க சுமார் 40 சதவீதம் பேர். பெரும்பாலும் வீட்டுல கவனிப்பு இல்லாமலும் மருமகள் கொடுமையாலும் வெளியே வந்தவங்க. நிறைய பேருக்கு பிச்சை எடுக்குறதுல விருப்பம் இல்லைதான். ஆனால், பசி கையேந்த வச்சிடுச்சு. அப்புறம் அதுவே ஈஸியான வேலையா பழகிடுச்சு’’ என்கிறார் நவீன் சோகமாக!

‘‘பிச்சைக்காரங்களை சிலர் கஞ்சா விக்கிறது உள்ளிட்ட சமூக விரோத காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிறாங்க. ஆதரவற்ற பெண்களை பாலியல் ரீதியா துன்புறுத்துறதும் நடக்குது. ஈரோடு பஸ் ஸ்டாண்டுல 36 வயசுப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல்ல இருந்து மீட்டு கவுன்சிலிங் கொடுத்து நல்ல இடத்துல வேலைக்கு சேர்த்திருக்கோம். இவரை மாதிரி 45 பேரை, பிச்சை எடுக்கறதில் இருந்து மீட்டு பல நிறுவனங்கள்ல நல்ல வேலையில் சேர்த்திருக்கோம்!’’ எனப் பெருமை பொங்க சொல்கிறார் லட்சுமிப்ரியா. இவரும் எஸ்.எஸ்.எம் கல்லூரி மாணவிதான்.

‘‘பிச்சை எடுக்குறவங்கள்ல 20 சதவீதம் குழந்தைங்க. சிலருக்கு இது பரம்பரைத் தொழிலாவும் இருக்கு. அரசும், சமூக அமைப்புகளும், தொழில் நிறுவனங்களும் இணைஞ்சு செயல்பட்டா, பிச்சைக்காரங்க எல்லாருக்கும் மறுவாழ்வு தந்து மீட்டுட முடியும். உதாரணத்துக்கு, இப்பவும் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் கிட்ட 32 பூம்பூம் மாட்டுக்காரங்க குடும்பம் வசிக்குது.

இந்த சமூகத்துல பிறந்த 90 குழந்தைங்க படிக்காம பிச்சை எடுத்துக்கிட்டிருக்காங்க. இவங்களுக்கு மாற்றுத் தொழில் ஏற்பாடு செஞ்சு கொடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்!’’ என்று உணர்ச்சிவசப்படுகிறார்  அருண்பிரதீப். இவரும் அட்சயத்தின் தீவிர சேவகர்.

‘‘குடும்பங்கள்ல இருந்துதான் பிச்சைக்காரங்க உருவாகுறாங்க. அதனால மக்கள் மத்தியில் விழிப்புணர்வு  ஏற்படுத்துறதைத்தான் எங்க முதல் வேலையா வச்சிருக்கோம். குடும்பத்துல சக மனிதர்களை நேசியுங்க. யாரையும் தனித்தோ தவிக்கவோ விடாதீங்க.

பிச்சைக்காரங்களுக்கு காசு போடாதீங்க. உதவி செய்யிறதா இருந்தா தகுதியானவங்களுக்கு உணவாவோ பொருளாவோ கொடுங்கனு வலியுறுத்துறோம். ‘பிச்சைக்காரர்கள் இல்லாத ஈரோடு’ங்கற எங்க லட்சியம் நிச்சயம் நிறைவேறும்!’’ என்கிறார் நவீன்குமார், நம்பிக்கையோடு!

அட்சயத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் உறுதுணையாக இருக்கிறது ‘ஒளிரும் ஈரோடு’ அமைப்பு. ‘‘பிச்சைக்காரர்களும்  மனிதர்கள்தான். சூழ்நிலை காரணமாக அவர்கள் இந்த மோசமான நிலைக்குத்  தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு தரும் பணியில் கல்லூரி  மாணவர்கள் ஈடுபட்டுள்ளது நல்ல சேதி.

அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறோம் நாங்கள். இதன் மூலம் பிச்சைக்காரர்கள் இல்லாத ஈரோட்டை என்ன... பிச்சைக்காரர்கள் இல்லாத தமிழ்நாட்டையே உருவாக்க முடியும்’’ என்கிறார் ‘ஒளிரும் ஈரோடு’ அமைப்பின் செயலாளர் கணேசன். நல்லது நடக்கட்டும்!

- எஸ்.ஆர்.செந்தில்குமார்