சாதுர்யம்
மார்க்கெட்டுக்கு போகும் வழியில் சினேகிதி மீராவின் வீட்டுக்குப் போனாள் ரமா. ‘‘வா... ரமா...’’ என்று தோழி வரவேற்கும்போதே, படுக்கையில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த அவள் மாமியாரும் சிரித்த முகத்துடன் கையசைத்து,
‘‘சௌக்கியமா?’’ என விசாரித்தார். சினேகிதியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும்போது, இடையிடையே அவளுக்கு போன் கால்கள் வர, அதிலும் அவளின் மாமியாரைப் பற்றியே விசாரணைகள். எல்லோருக்கும் பதில் சொல்லி வந்து அமர்ந்தாள் மீரா.
கிளம்பும்போது மீராவிடம் தனிமையில் இதை வியந்தாள் ரமா. ‘‘பரவாயில்லையே மீரா... இந்த அவசர யுகத்திலும் வீட்டுல உள்ள பெரியவங்களை இத்தனை பேர் போன் போட்டு விசாரிக்கிறாங்களே..!’’ மீரா சிரித்தாள்.‘‘அவர்கள் விசாரிக்கிறாங்களோ இல்லையோ... என் சொந்தக்காரங்க, ஃபிரண்ட்ஸ்னு பேசுறவங்க போனை வச்ச பிறகு, ‘ஓ, மாமியாரா..? சௌக்கியமா இருக்காங்க.
நீங்க விசாரிச்சதை கட்டாயம் சொல்றேன்’ங்கற மாதிரி சில வார்த்தைகளைப் பேசிட்டுதான் வைப்பேன். வயசான காலத்தில் தன்னையும் விசாரிக்கிறாங்கனு அவங்களுக்கு ஒரு திருப்தி, சந்தோஷம். நாளைக்கே என் தோழிகள், சொந்த பந்தங்கள் யார் வீட்டுக்கு வந்தாலும் மூஞ்சியைக் காட்டாம எங்க மாமியார் வரவேற்றுப் பேசுவாங்க. அதுக்குத்தான் இதெல்லாம்!’’ என்றாள் மீரா.‘நல்ல சாதுர்யம்தான்!’ - தோழியை வியந்தாள் ரமா.
மன்னை ஜி.நீலா
|