ஸ்ரீ அரவிந்த அன்னை
இதயத்தில் ஒரு புனிதத் தீ எரிந்து உன்னை முழுமையாகச் சூழ்ந்துகொள்கிறது. அதுவே உனக்கு ஒளியூட்டிப் பரிசுத்தப்படுத்தும் அக்னியாகும். ஒவ்வொரு முறை நீ மேம்பட வேண்டுமென என்னைக் கோரும்போதெல்லாம் நான் உன்னுள் அத்தீயை மூட்டுகிறேன். அது எதையும் அழிப்பதில்லை, பொய்யையும் இருளையும் தவிர.
உனக்கு எது தேவையோ அதைத் தாராளமாகக் கேட்பதையே நான் விரும்புகிறேன். உன் அம்மாவிடமிருந்து நீ எதையும் எடுத்துக்கொள்ளலாம். அது இயற்கை. மேலும் அது உனக்கு முழு மனத்துடன் கொடுக்கப்படுகிறது. உன் மீது அதிக அக்கறையும் அன்பும் வைத்திருக்கும் அன்னை நான்!
- அன்னை
‘உலகப்போர் அபாயம் சூழ்ந்துள்ளது. உடனே நாடு திரும்புங்கள்’ என்கிற பிரெஞ்சு அரசாங்கத்தின் உத்தரவு, மிராவுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. கடுமையான தண்ணீர் தாகத்தோடு இருக்கும் ஒருவன் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போதே தண்ணீர் குவளையை யாராவது திடீரென தட்டிப் பறித்துக்கொண்டால் எத்தனை தவிப்பு இருக்கும். அப்படியான ஒரு தவிப்பு இருந்தது மிராவுக்கு.
காரணம், அரவிந்தர்.பல பிறவிகளாக இந்த ஜீவன் எத்தகைய ஆன்மிக அனுபவங்களுக்கெல்லாம் ஆட்பட வேண்டும் என்று தவியாய்த் தவித்தது? அத்தனையும் கிடைக்கும் ஆன்மிகக் கருவூலமாக அவருக்கு புதுவை மண் தெரிந்தது.அரவிந்தரைப் பார்த்த நாள் முதலாய் மனம் மோனத்தவத்தில் மூழ்கித் திளைப்பதை உணர்ந்
திருந்தார் மிரா.
ஆனால் பிரான்ஸ் புறப்பட வேண்டும் என்ற உடனேயே மிராவின் கண்களில் நீர் திரண்டது. ராதை போன்றதொரு பக்தி உணர்வால் தத்தளித்தார். அரவிந்தரிடம் தாம் கொண்டுள்ள ஆழமான பக்தியுணர்வு எத்தகையது என்பதை அந்த நொடிப்பொழுது உணர்த்தியதை நன்றாக உணர்ந்தார் மிரா. மனம் அதனோடே பேசிக்கொள்ளத் தொடங்கியது.
‘அரவிந்தர் என்னும் ஆலமரத்திடம்தான் எத்தனை ஆன்மிகப் பொக்கிஷங்கள் நிரம்பி இருக்கின்றன. இந்திய ஞான மரபில் ஒரு அதி அற்புதமான மகானிடம் என் ஆழ்மனதுள் பொங்கும் அத்தனை ஆன்மிக ஐயங்களையும் பகிர்ந்துகொண்டு... கலந்து பேசி, தீர விளக்கம் கேட்டுத் தெளிந்து கொண்டிருக்கும் இந்த இனிய தருணத்திலா இப்படியொரு இடையூறு வரவேண்டும்?’ வருந்தினார் மிரா.
ஆனால் அரவிந்தர் அதை மிகச் சாதாரணமாக எதிர்கொண்டார். ‘‘மிரா, இது தற்காலிகமான இடைவெளிதான். நிலைமை விரைவில் சரியாகிவிடும். கவலைப்படாமல் சென்று வா!’’ என்றார்.அரவிந்தரின் காலத்தைக் கடந்து பார்க்கும் ஆன்மிகப் பார்வை மீது மிராவுக்கு அத்தனை நம்பிக்கை. விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்கிற வார்த்தையால் மலர்ந்த மிரா, ஊருக்குப் புறப்பட ஆயத்தமானார். அதே சமயம் அரவிந்தரையும் தங்களுடன் பிரான்ஸ் வரும்படி மிராவும் பால் ரிச்சர்ட்டும் அழைத்
தார்கள்.
அரவிந்தர் அதற்கு உடன்படவில்லை. ‘‘புதுச்சேரி மண்ணில் நான் செய்ய வேண்டிய தவம்... யோகம்... இன்னும் மிச்சமிருக்கிறது. நீங்கள் சென்று வாருங்கள்!’’ என்றார்.
ஒரு தாய்ப் பசுவிடம் இருந்து கன்று பிரிந்து செல்லும்போது எழும் உணர்ச்சிப் போராட்டம் போல, தெய்வீக அன்புப் போராட்டத்திற்கு நடுவே 1915, பிப்ரவரி 22ம் தேதி மிரா கணவருடன் கப்பலேறினார். தகுதி வாய்ந்த ஒரு சீடனைப் பிரிந்த தவிப்பு அரவிந்தருக்குள் இருக்கவே செய்தது. மனதுள் மிராவை ஆசீர்வதித்தார் அரவிந்தர்.
மிரா பிரான்சில் வசித்தாலும் மனசு அரவிந்தரின் பாதங்களில் சரணாகதியாகி இருந்தது. இருவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது. இதற்கிடையே ஆழ்மன தியானத்தின்போது மனவெளியில் இருவரும் பேசிக்கொண்டார்கள்.
காஸ்மிக் குழு நண்பர்கள் நாம ஜபம் குறித்தும் அது வெற்றி பெறவும் விரைவாகப் பயன் அளிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதை அரவிந்தருக்கு கடிதம் எழுதி விளக்கும்படி பணிவாகக் கோரியிருந்தார் மிரா.அரவிந்தர் தன் ஆன்மிக வாரிசுக்கு விளக்கமாக கடிதம் எழுதத் தொடங்கினார்.‘மிரா, நாம ஜபத்தில் பெரிய சக்தி இருக்கிறது. ஜபம் வெற்றி பெற உள்ள நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற வேண்டும்.
ஒன்று, மந்திரத்தின் பொருளை உணர்ந்து, மந்திரம் குறிப்பிடுவதும் தனது உணர்வினுள் கொண்டுவர விரும்புகின்றதுமான தெய்வ மூர்த்தத்தின் குணம், சக்தி, அழகு, வசீகரம் இவற்றை மனத்தில் பதித்து மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது மனதின் வழியாக செய்ய வேண்டியது.இரண்டாவதாக, மந்திரம் இதயத்திலிருந்து பொங்கி வர வேண்டும். பக்தி உணர்வுடன் கூடி, உயிர்பெற்று இதயத்தில் ரீங்காரம் செய்ய வேண்டும். இது உணர்ச்சி வேக வழி.
மனம் அல்லது பிராணன் மந்திரத்திற்கு ஆதரவும் வலிமையும் தர வேண்டும். மந்திரம் மனத்தை வறட்சியடையவும், பிராணனை சஞ்சலமடையவும் செய்தால் அவற்றின் ஆதரவும் போஷனையும் அதற்கு இல்லை என்று பொருள்.மூன்றாவதாக ஒரு வழியும் உள்ளது. அதாவது மந்திரத்தில் அல்லது நாமத்திலேயே உள்ள சக்தியை நம்பியிருத்தல். அந்த வழியில் மந்திரத்தின் சக்தி தனது அலைகளை உள் ஜீவனில் பதித்து திடீரென ஒருநாள் தெய்வ சாந்நித்யத்திற்கும் ஸ்பர்சத்திற்கும் திறக்கும் வரை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் பலன் கிடைக்க வேண்டும் என்ற போராட்டமும் வற்புறுத்தலும் இருந்தால் இந்தப் பலன் ஏற்படுவது தடைபடும்.
ஏனெனில் மனம் அமைதியாக மந்திரத்தின் அலைகளை ஏற்பது அவசியம். அளவுக்கு மீறிய முயற்சி கூடாது, மனம் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம், கவிதை, இசை இவற்றிற்கான வேகத்தை ஏற்பதற்கு எவ்வித ஏற்புத் திறன் வேண்டுமோ அவ்வாறே சைத்திய புருஷனை மனம் ஏற்கும் திறனை வளர்த்துக் கொள்ள போதிய காலம் கொடுக்க வேண்டும்.
இதே காரணத்திற்காகவே கவிதை, இசை எல்லாம் நல்லது என்கிறேன். ஏனெனில் அதெல்லாம் ஜீவனை ஆயத்தம் செய்யத் தடையாக இல்லை. ஏற்புத் திறனை வளர்த்துக் கொள்ளவும் உள் ஜீவனிலுள்ள பக்தியை வெளியே கொண்டு வரவும் அது சாதனமாக உள்ளன.சக்தியை எல்லாம் ஜபத்திலும் தியானத்திலும் செலவிடுவது சிரமம். வெற்றிகரமாகத் தியானம் செய்து பழக்கப்பட்டவர்களுக்குக் கூட மேலிருந்து இடைவிடாமல் அனுபவங்கள் வந்து கொண்டிருக்கும் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் கடினமாயிருக்கும்.
ஒருவன் ஒரு மந்திரத்தை ஒழுங்காக ஜபித்துக் கொண்டிருந்தால் பெரும்பாலும் அது தானாகவே உள்ளே ஜபிக்கத் தொடங்கிவிடும். அப்படி என்றால் உள் ஜீவன் மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கிவிட்டது என்று பொருள். அப்படி நடக்கும் போது பலன் அதிகமாக இருக்கும்’ என நீண்டது கடிதம்.அரவிந்தரிடம் இருந்து வரும் கடிதங்கள் எல்லாம் மிராவின் ஆன்மிக குழு மத்தியில் விருந்தாகின. அதே போன்று மிராவுக்கு பகிரப்படும் ஆன்மிக விஷயங்கள் எல்லாம் அரவிந்தரின் ஆன்மிக சகாக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில் மிராவின் மகன் ஆண்ட்ரூஸ் ராணுவப்பணியில் இணையப் போவதாகக் கூறிவிட்டு மிராவிடமிருந்து விடை பெற்றார். பால் ரிச்சர்ட்டுக்கு வேலை ஜப்பானுக்கு மாற்றலானது. 1916 மே 18ம் தேதி ஜப்பானுக்கு வந்தார். அங்கேயும் மிரா ஆன்மிக தாகத்துடனேயே இருந்தார். அந்த இடத்தில் பல புதிய நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவர் செல்வி டோரதி ஹக்ஜசன். அந்தப் பெண்ணின் கதை சோகமானது. அது...
கரைந்த கர்ப்பப்பை கட்டி
அன்னையின் அற்புதம்
‘‘அப்போது நான் ஒரு தனியார் கல்லூரி யில் முதல்வராக இருந்தேன். என் தாயார் அரவிந்த அன்னையின் போட்டோ ஒன்றை எனக்குக் கொடுத்தார். அது என் வீட்டு டி.வி ஷோகேஸில் இருந்தது. நான் அதற்கு ஒரு பூ கூட போட்டு வணங்கியதில்லை. ஒருநாள் என் கனவில் அன்னை காட்சி கொடுத்து, ‘நான் உன் வீட்டிற்கு வந்துவிட்டேன்’ என்று சொன்னதும்தான் பூ வைத்து வழிபட ஆரம்பித்தேன்.
சரியாகப் படிக்காத என் மகன்கள் அதன் பிறகு நன்றாகப் படிக்க ஆரம்பித்தார்கள். ஒருவர் சிவில் எஞ்சினியரிங் முடித்தார். இன்னொரு மகன் ஆர்க்கிடெக்சர் முடித்தார். இருவரும் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அன்னையின் அருள்தான் காரணம்.திடீரென எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கர்ப்பப்பையில் கட்டி இருக்கிறது. உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள்.
பயந்து போனேன். மாம்பலம் அன்னை ஆஸ்ரமத்திற்கு சென்றேன். சிறு காணிக்கை செலுத்தி, என் கர்ப்பப் பை கட்டி குணமாக வேண்டும் என்று அன்னையிடம் வேண்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். மறுநாள் ஆபரேஷனுக்கு நாள் குறிப்பதற்காக மருத்துவரைச் சந்தித்தேன். அவர் திடீரென, ‘ஆபரேஷன் வேண்டாம். கொஞ்சநாள் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு சில மாத்திரைகளை சாப்பிடச் சொன்னார்.
மாத்திரையிலேயே மெல்ல கட்டி கரைந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை அன்னையால் நிகழ்ந்த அற்புதம் இது. அன்னையின் பாதங்களைப் பிடித்துக்கொண்டால் தீராத நோயும் தீரும். இது சத்தியம்’’ என்கிறார், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பத்மப்ரியா.
டகால்டி டிராபிக்
அமெரிக்க மாகாணமான அலபாமாவில் வெறும் காலோடு கார் ஓட்டுவதற்கு கடும் அபராதம் உண்டு.
சான் ஃபிரான்ஸிஸ்கோ சட்டத்தைப் பொறுத்தவரை, பயன்
படுத்திய உள்ளாடையால் ஒருவரின் காரைத் துடைப்பது குற்றம்!
ஒட்டுத் துணியில்லாமல் கார் ஓட்டி வருவது கடும் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது அமெரிக்காவின் மாசாசூஸெட்ஸ் மாகாண சட்டம்.
வரம் தரும் மலர்
தனம் தரும் கள்ளிப்பூ!
கள்ளிப்பூ பார்ப்பதற்கு தாமரைப்பூ போலவே பளீர் வெள்ளை நிறத்தில் இருக்கும். முள் மரத்தில் பூக்கும் இந்தப் பூக்களை அன்னைக்கு சமர்ப்பித்து வேண்டிக்கொள்ள, வீட்டில் தனம் பெருகும். பசு, பால் வளம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும்!
(பூ மலரும்)
எஸ்.ஆா்.செந்தில்குமாா்
ஓவியம்: மணியம் செல்வன்