மூத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் ஒரு வகையில் என் மனைவியின் சொந்தக்காரர். அவரைப் பற்றி நான் ஏதாவது தவறாக எழுதினால் அவர் மன்னித்து விடுவார். என் மனைவி மன்னிக்க மாட்டாரே! எனக்குத் தெரிந்து Living Legend என்ற பெயரை சூடக் கூடிய தகுதி பெற்றவர் அவர். அவர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இருந்ததில்லை.
அவர் ஒரு ‘அந்த நாள் இடதுசாரி அரசியல்வாதி’ என்பதால் எனக்கு அவர்மீது, பரமக்குடியில் குட்டி வக்கீலாக இருந்த காலத்திலிருந்து பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் என்னை விட 66 நாட்களே மூத்தவர். ஆனால், அறிவிலும் உழைப்பிலும் எத்தனை மடங்கு மூத்தவர் என்று என்னால் கணக்கிட முடியாது. இன்று திரைத்துறையில் இருப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு அவரிடம்.
என்னைப் போல் கல்லூரி சென்று ஆறு ஆண்டுகளை வீணடிக்காமல் வாழ்க்கைக் களத்தில் இறங்கிப் போரிட்டவர். அவரைப் போல் நானும் பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கை உடையவன். இன்று வரை எனக்கென்று எந்த சொத்தும் சேர்க்கவில்லை. அதனால் இவர் போன்றவர்கள் அளவுக்கு எனக்கு பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படக் காரணம் இல்லை.
என்னுடைய பொருளாதாரத் தேவைகள் ரொட்டி - கப்படா - மக்கான் என்ற சொற்களுடன் முடிந்துவிடுகின்றன. ஆயினும் நான் எதையும் ‘கடவுள் இருக்கிறார்... பார்த்துக்கொள்வார்’ என்று விட்டது கிடையாது. பரமக்குடி உயர்நிலைப் பள்ளி படிப்புக்குப் பிறகு நான் ஆறு வருடங்கள் - சட்டப் படிப்பு வரை - என் தந்தையார் செலவில் கழித்திருக்கிறேன்.
முக்தா சீனிவாசன், உயர்நிலைப் பள்ளியோடு தாய், தந்தையருக்கு பாரமாக இருப்பதை விட்டுவிட்டு மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல்.வி.பிரசாத் போன்ற பெரிய தலைகளுக்கு உதவியாளராகச் செயல்பட்டவர். பின்னால் தான் முதன்முதலில் இயக்கிய ‘முதலாளி’ என்ற படத்தின் மூலம் தேவிகா என்ற வெற்றிகரமான நடிகையை அறிமுகப்படுத்தியவர்.
இன்று நாம் யோசித்துப் பார்த்தோமானால், வெற்றிகரமான பாடல்களைத் தேர்வு செய்வதில் பெயர் பெற்ற இயக்குநர் தர். பின் வந்தவர்களில் தொடர்ந்து பார்த்தால்... பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்தர், மணிரத்னம் ஆகியோர் தேர்வு செய்த பாடல்கள் மக்களிடையே வரவேற்பு பெற்றவை. அந்தக் கால மக்களிடையே இசைத்தட்டு விற்பனையில் பெரும் வெற்றி பெற்ற திரைப் பாடல், ‘சிங்கார வேலனே தேவா’ என்ற எஸ்.ஜானகியின் பாடல். வெகு நாட்களுக்குப் பிறகு அதை பணக்கணக்கிலே தோற்கடித்த பாடல் ‘இலந்தப்பழம் இலந்தப்பழம் இலந்தப்பழம்’ (மறக்க வேண்டாம்! மூன்று முறை...) என்னும் சிறுவர் முதல் கிழவர்கள் வரை ரசித்த ‘ஒரு மாதிரியான’ பாடல்.
முக்தா அவர்களுடைய வெற்றிப்படமான ‘முதலாளி’யில் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ என்ற பாடல் பெரிய ஹிட். அது மட்டுமல்ல... இயக்குநரில் பீஷ்ம பிதாமகன் என்று பெயர் பெற்று கமல்-ரஜினி என்ற இரு சகாப்த நடிகர்களையும் கண்டெடுத்த கே.பாலசந்தராலேயே பாராட்டப்பட்ட பாடல் அது. ‘சிந்து பைரவி’ படத்தில் சங்கீதப் பற்று மிகுந்த ஒரு நீதிபதி தன் கார் ஓட்டுநருடன் இந்தப் பாடல் பற்றி பேசி, இருவரும் பாடிக் காட்டுவார்கள். அந்தப் பாடலில் அமைந்த இரு ராகங்களையும் மையமாக வைத்து காட்சி எழுதும் அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதென்றால் முக்தா அவர்களின் திறமை மறைக்கவோ மறக்கவோ முடியாத ஒன்றுதானே!
முக்தா ஒரு சிறந்த சினிமா இயக்குநர் - தயாரிப்பாளர் என்பது தவிர, பிரபல வார இதழ்களில் அவரின் சிறுகதைகளும் கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன. நான் படித்தவை அதிகம் இல்லை. அவருடைய ‘இருபதாம் நூற்றாண்டின் சிறுகதைகள்’ என்ற தொகுப்பு என் வரையில் ஒரு ஆசானின் தகவல்தொடர்பு சாதனையாகத் தோன்றியது.
சில சமயங்களில் இவரும் இயக்குநர் பாலசந்தரும் பத்திரிகைப் பேட்டிகளில் ஒருவரை ஒருவர் குறை கூறியோ... அல்லது நமது புரிதலில் தாக்கிப் பேசிக்கொண்டதாகவோ வரும். அச்சமயங்களை நினைத்தால்... என் பிரியமான நண்பரான பாலசந்தருக்கே என்னால் இரண்டாமிடம்தான் ஒதுக்க முடிகிறது. இவருடைய எழுத்துக்களில் உள்ள வாதத் திறமையை மற்ற சினிமா இயக்குநர்களோடு ஒப்பிடும்போது, சிவாஜியின் நடிப்பை என் போன்ற சராசரிகளுடன் ஒப்பிடுவது போல் ஆகிவிடும்.
அவர் சினிமா துறையில் இருந்துகொண்டே எம்.ஜி.ஆருக்குப் பணியாத ஒரு கலைஞர். ‘சினிமா பைத்தியம்’ என்றொரு படம் எடுத்து, தலைவர் காமராஜருக்கு திரையிட்டுக் காட்டியபோது, பெருந்தலைவருக்கும் நெருங்கியவனாக, இவருக்கும் சொந்தக்காரனாக அதே காட்சியில் அமர்ந்து படம் பார்த்தவன் நான்.
எங்களுடைய ஒவ்வொரு நண்பரின் மறைவு நாளிலும் நண்பர்களை மறக்காமல் இந்த வயதிலும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்பவர். எங்கள் நண்பர் வட்டத்தில் அனேகமாக என்னைவிட மூத்தவர் அவர் ஒருவர்தான். நான் என்னைப் பற்றி அடிக்கடி சொல்லிக்கொள்வது... ‘நான் என் நண்பர்களால் உயர்ந்தவன்’ என்று. இவரோ, தன் நண்பர்களையெல்லாம் உயர்த்துபவர். வாழ்த்த வயதில்லை என்பார்கள்... எனக்கு ஒரு 66 நாட்கள்தான் குறைகிறது... அவர் என்னிலும் நீண்ட நாள் வாழட்டும்!
முக்தாவுடைய
எழுத்துக்களில் உள்ள வாதத் திறமையை
மற்ற சினிமா
இயக்குநர்களோடு
ஒப்பிடும்போது,
சிவாஜியின் நடிப்பை
என் போன்ற சராசரி
களுடன் ஒப்பிடுவது
போல் ஆகிவிடும்.
டகால்டி டிராபிக்இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் அமெரிக்காவின் மிஸிசிபி பகுதிகளில் ஹாங்கிங் எனப்படும் தொடர்ச்சியாக ஹாரன் அடிப்பது குற்றம். அது குதிரைகளை மிரளச் செய்யும் என்பதால் இந்தச் சட்டம்!
ஃப்ளோரிடாவின் பார்க்கிங் ஏரியாக்களில், யாரேனும் ஒரு யானையைக் கட்டி வைத்திருந்தால் கூட அதற்கு வாகனம் நிறுத்தி வைத்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.
(நீளும்...)
சாருஹாசன்
ஓவியங்கள்: மனோகர்