சல்மான் வழக்கு... நிமிர்ந்து நின்ற நீதி!



தீர்ப்பை விமர்சிப்பவர்கள் ஒருபக்கம் இருக்கட்டும். சரிதான் என்பவர்களும் இருக்கட்டும். எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் சரி... வழக்கை இழுத்தடிக்கவும், மூடி மறைக்கவும், சாட்சியங்களை அழிக்கவும், விலைக்கு வாங்கவும் எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் சரி... இறுதியில் ஒருநாள் நீதியே வெல்லும் என்ற நம்பிக்கையை எளிய மனங்களுக்குத் தந்திருக்கிறது சல்மான் கான் வழக்கின் தீர்ப்பு.

‘தனது அறக்கட்டளை மூலம் எவ்வளவோ நற்பணிகளைச் செய்கிறார் சல்மான். அவருக்குப் போய் இப்படி ஒரு தண்டனையா?’ எனக் கொதிக்கிறார்கள் திரையுலக நட்சத்திரங்கள். தீர்ப்பையே அநீதி என்கிறார்கள். ‘பிளாட்பாரத்தில் ஏழைகள் தூங்குகிறார்கள் என்றால், அவர்களுக்கு வீடு கட்டித் தராத அரசாங்கத்தைத்தான் தண்டிக்க வேண்டும். கார் ஓட்டியவரை அல்ல’ என ஒரு நடிகரின் மகள் வரிந்து கட்டுகிறார். (விட்டால் நரேந்திர மோடியை சிறைக்கு அனுப்பச் சொல்வார்கள் போல!) ‘சாலைகளும் பிளாட்பாரங்களும் கார்களுக்கும் நாய்களுக்குமானது. பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது கார் ஏறினால் அது டிரைவரின் தப்புமில்லை; மதுவின் தவறுமில்லை’ என்கிறார் பின்னணிப் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா.

திரைப்படக் காட்சிகளில் அடிபடும் ஏழைகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வந்து வில்லன்களோடு சண்டையிடும் நட்சத்திரங்கள், நிஜத்தில் அந்த ஏழைகளை வில்லன்களாகப் பார்க்கிறார்கள். போதையில் சல்மான் கார் ஓட்டும்போது, அவரது பாதுகாப்புக்காக கூட வந்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல் அவரை எச்சரிக்கிறார். ஆனாலும் காரை தாறுமாறாக ஓட்டி பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் இறந்துவிட்டார்; நான்கு பேர் காய
மடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து சல்மான் ஓடிவிட, ரவீந்திர பாட்டீல்தான் போலீஸுக்கு தகவல் தந்தார்.

வழக்கு போட்டதும் சல்மான் 17 நாட்கள் சிறையில் இருக்க நேர்ந்தது. சாட்சியங்கள், ஆதாரங்கள் அத்தனையும் இருந்தும், சல்மான்தான் காரை ஓட்டினார் என்பதை உலகமே நம்பியபிறகும், அதை கோர்ட் நம்பி தீர்ப்பு வழங்குவதற்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

இடையில் எத்தனையோ நாடகங்கள் நிகழ்ந்தன. ‘பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள்மீது எங்கள் காரே மோதவில்லை. வேறு ஏதோ ஒரு கிரேன்தான் அவர்களை இடித்தது’ என சல்மானின் கார் டிரைவர் சொன்னார். இந்த வழக்கில் முக்கியமான சாட்சி, சல்மான் கார் ஓட்டும்போது அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல். அப்போது சல்மானுக்கு நிழல் உலக தாதாக்கள் மிரட்டல் இருந்ததால் இந்தப் பாதுகாப்பு தந்திருந்தார்கள். அந்த கான்ஸ்டபிளை இணங்கிப் போகுமாறு உயர் அதிகாரிகள் பிரஷர் செய்தார்கள். அவர் நீதியின் பக்கம் உறுதியாக இருந்ததால், வேறு ஏதோ காரணம் சொல்லி பணிநீக்கம் செய்தனர். தன் சொந்த வீட்டுக்கே போக முடியாமல் எங்கோ அலைந்து திரிந்து இறந்தே போனார் அவர்.

விபத்தில் காயம்பட்டவர்களும் வழக்குக்கு ஒத்துழைக்கவில்லை. பல சாட்சிகள் பின்வாங்கினார்கள். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்கள் வந்து சல்மானுக்காக வாதாடினர். வழக்கின் இறுதிக்கட்டத்தில் சல்மானின் டிரைவர் வந்து திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினார். ‘‘நான்தான் காரை ஓட்டினேன். சம்பவம் நடந்தபோது காரில் சல்மான் கான் இல்லவே இல்லை.

என்னை தண்டியுங்கள்’’ என ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். ஆனாலும் ‘நீங்கள் குற்றவாளியே’ என தீர்ப்பளித்தார் நீதிபதி.  இந்தியத் திரையுலகில் அதிகம் பிசினஸ் ஆவது சல்மான் படங்கள்; பிராண்ட்  விளம்பரங்களில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பது அவர்தான்.

 நிறைய பேருக்கு உதவிகள் செய்திருக்கிறார். ஆனால் இந்த வழக்கு ‘சல்மான் நல்லவரா... கெட்டவரா...’ என்பதல்ல! அவர் தப்பு செய்தாரா, இல்லையா என்பது தான்.எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும், புகழ் இருந்தாலும், பணம் இருந்தாலும், தவறு செய்கிறவர்கள் தண்டிக்கப்படும்போதுதான் நீதி தேவதை மயக்கமற்று இருப்பதாக அர்த்தம்.அது, மற்றவர்களுக்கான எச்சரிக்கை மணி!

- அகஸ்டஸ்