ஐந்நூறுக்கும் மேலானவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை அது. அதில் ஒரே ஒருவரை சகித்துக்கொள்ள முடிய வில்லை. ஜெனரல் மேனேஜரும் புரொடக்ஷன் மேனேஜரும் எம்.டியிடம் புலம்பினார்கள். ‘‘சார்... நிஜமாவே சொல்றேன். சூப்பர்வைசர் ராஜன், எந்த மேலதி காரிக்கும் மரியாதை கொடுக்கறதில்லை. எடுத்தெறிஞ்சுதான் பேசுவான். ஆனா, இருவது வருஷமா இதே கம்பெனில வேலை செய்யறவனை எப்படித் திட்டறது..?’’
‘‘சரி... நான் பாத்துக்கறேன்!’’ என்ற எம்.டி, அடுத்த நான்காவது நாள் ஜெனரல் மேனேஜரையும், புரொடக்ஷன் மேனேஜரையும் அழைத்தார்.‘‘விசாரிச்சுட்டேன். தனக்கு மேல வேலை செய்யற அதிகாரிகள்கிட்ட மரியாதையில்லாம நடந்துகிட்டாலும், கீழே வேலை செய்யற ஐந்நூறு தொழிலாளிகளையும் பத்தி தெளிவா தெரிஞ்சு வச்சிருக்கான் ராஜன். கனிவா பேசி வேலை வாங்கறான்.
அவங்க பிரச்னைகளையெல்லாம் விசாரிச்சு, அக்கறை காட்டியிருக்கான். இன்னும் பல தொழிலாளிகளுக்கு யாரு ஜி.எம்., யாரு புரொடக்ஷன் மேனேஜர்னுகூட தெரியலை. ஆனா, சூப்பர்வைசர் ராஜனைத் தெரியுது. ஏ.சி ரூம்ல கம்பெனியோட வளர்ச்சியை காகிதத்துல கணக்கு போட்டு பாக்கற நம்மளைவிட... களத்தில் இறங்கி நிஜமாவே அதை செயலாக்கிக் காட்டற சூப்பர்வைசர் ராஜன்தான் முக்கியம். அவன்மேல இனிமே புகார் பண்றதை நிறுத்துங்க!’’ - என்றார் அவர்.தலை கவிழ்ந்தனர் இருவரும்.
பிரகாஷ் ஷர்மா