குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

மேட்டர் என்னன்னா, சாதாரண பொண்ணு ஐஸ்கிரீம் சாப்பிடுது. ஃப்ரெண்டே ஃபீல் ஆயிட்டாப்ல... சாப்பிடுறப்ப, சினிமா நடிகை மாதிரி ஐஸ்கிரீம மூக்குல ஒட்டி சீன் போடுது. இந்த ஒத்த மேட்டர, எப்படி கட்டங்கட்டமா இலக்கியமாக்குறது? வாங்க எழுதுவோம்...

Whatsapp Forwarding message
வெர்ஷன்:
அவள் உதட்டில் பட்டவரை
அது ஐஸ்கிரீம்;
அவள் முகத்தில் பட்டவுடன்
அது ஃபேஸ்கிரீம்.
Facebook வெர்ஷன்:
அவள் முகம் என்றும் அழகானது,
அவள் முகத்தில் பட்டவுடன்
அந்த ஐஸ்கிரீமும் இன்று அழகானது.
Twitter வெர்ஷன்:
அதுவரை அவள் ஐஸ்கிரீம் சுவைத்தாள்,
அதற்குப் பின் ஐஸ்கிரீம் அவளை சுவைத்தது.

அய்யா புதுமைப்பித்தன் ஸ்டைல்:‘எந்த திசையில் போகலாமென அந்த ரஸ்தா முடியும் இடத்தில் நின்று நான் யோசனை செய்து கொண்டிருந்தேன். யாருமில்லா ரஸ்தா. அதன் முடிவில் ஒரு ஐஸ்கிரீம் கடை. அங்கு ஒரு இளம்பெண். மெல்லிய நீல வண்ண சேலை. மூக்கிலும் கன்னத்திலும் ஐஸ்கிரீம் ஒட்ட, குதூஹலமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ‘என்னடிம்மா இப்படி தின்கிறாய்’ என்ற எண்ணத்தோடு நாய் ஒன்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. கால் அடிபட்ட நாய். போஜனம் போதாத ஜீவனம் போலும். கூர் மங்கிய பற்கள் கொண்ட அதன் வாயில் இருந்து சவல நீர் சொட்டிக்கொண்டிருந்தது. என்னமோ ஜொள்ளு ஜொள்ளு என்று கதைக்கிறார்களே, இதுதான் ஐயா அது!

1990களின் நவீன இலக்கிய வடிவத்தில்:

சேலத்திலிருந்து நாமக்கல் போகும் பழைய பைபாஸ் சாலையின் பதினேழாவது கிலோமீட்டரில் இருக்கிறது பாண்டியநாடு. அங்கு வாயிலேயே காத்தடித்து நாக்குல பஞ்சர் ஒட்டிய பால்பாண்டி என்பவரது சிலை இருக்கிறதென கேள்விப்பட்டு ஒரு மார்கழியின் பனி நாட்களில் சென்று இருந்தேன். இருபுறமும் ஊரை வெட்டிப் போகும் சாலை. இரவில் சாலை என்பது குரூரத்தின் கண்கள், பகலில் சாலை என்பது புரளாத பாம்பு. பகலிலும் இரவிலும் போக்குவரத்து நிறைந்த, ஒரே ஒரு டீக்கடை கொண்ட ஊர் அது. அதன் அருகே ஐஸ் விற்கும் - முகமெங்கும் முதுமை கொண்டாடும் ஒரு முதியவர்.

அவரிடம் ஐஸ் வாங்கி உறிஞ்சும் பெண்ணின் இதழ்களிலும் முகத்திலும் பிராண்டிய நகத் தடமாய் பரவியிருக்கும் ஐஸ் கிரீம். தவளையின் நாக்கைப் போலச் சுழலும் அவள் நாக்கு. கால் இல்லையே என மனிதன் கவலைப்படுவது போல ஒருபோதும் கவலைப்படாத பாம்புகளின் நாக்குகளை விட ஆபத்தான நமது நாக்குதான் எத்தனை வன்மையானது. பாரதிராஜு மேனன் இயக்கிய ‘பசும்பொன் அம்மே’ படத்தில் ஒரு காட்சியில் கபடிராணி, தன் நாக்கால் மூக்கைத் தொடும் கட்சி கண் முன் விரிகிறது. மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட இந்தியாவின் இன்னொரு பகுதியில் நாக்கால் மூக்கைத் தொடும் பழக்கம், இன்றும் ஐஸ்கிரீம் தின்னும் தோற்றத்தில் வாழ்கிறது.

கண்ணதாசன் முதல் வண்ணதாசன் வரை, பஞ்சுகளில் வார்த்தையெடுத்து, நெஞ்சினில் பூசற மாதிரி இதமாய், கனமாய் எழுதினால்:  கோடைக் காலத்தின் முடிவில் இலுப்பைப் பூக்கள் உதிர்க்கின்ற செம்மஞ்சள் நிறத்து இலைகள் கூடிக்கிடக்கும் அந்த ஆரம்பப்பள்ளி வாசலின் காம்பவுண்ட் சுவர் அருகில் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தான் புஜ்ஜு அண்ணன்.

பனித்துளியால் முகம் கழுவிய பின்னும் தூக்கம் கலையாத, விரிந்தும் விரியாத டிசம்பர் பூக்களின் வெளிர் நீல நிறத்தில் திராட்சை ஐஸ் வாங்கி, கோழி தவற விட்ட காற்றில் அலையும் சிறகைப் போல மெல்லிய எடை கொண்ட பஞ்சு மிட்டாயின் இளம் ரோஸ் நிறத்து உதடுகளில், சிறிய காதுகள் கொண்ட அழகான பழுப்பு கலந்த செங்கல் நிறத்து நாய்க்குட்டி பாலைக் குடிப்பது போல உறிஞ்சிக்கொண்டிருந்தாள் லட்சுமியக்கா.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பன்னீர் புஷ்பத்து செடியை நட்டு வைக்கும் மெல்லிய அசைவைப்போல மெதுவாய் சுழலும் நாக்கின் பிடி தாண்டி, பொன்னிற தேக வண்ணத்தில் மின்னும் அந்த ஒற்றைக் கடுகு மூக்குத்தி கொண்ட மூக்கில், பெருங்கடல் துப்பிய நுரையைப் போல ஒட்டிக்கொண்டிருந்தது கொஞ்சம் ஐஸ்கிரீம்.நாஞ்சில் சார் மாதிரி கொஞ்சம் எள்ளல் கலந்து சொல்லியாகணும்னா: 

வெயிலிலும் காற்றிலும் அவ்வப்போது கொட்டும் மழையிலும் இருந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அந்தக் கட்டிடத்தைத் தாங்கி வரும் முழுக்க துருவேறிய தகரக் கூரைகள். அது இறங்கும் இடத்தில்தான் இருந்தது மில்லின் முதல் கேட். அதன் அருகே, அப்பனே காட்டடா என வயிற்றில் சிவனே வந்து பட்டை போட்டுவிட்டது போல, வறுமைக் கோடுகள் வரி வரியாய் மறைந்திருக்க, ஐஸ் விற்றுக்கொண்டிருந்தான் அணஞ்சபெருமாள். எர்வாமேட்டின் எடுக்கப் போய் அழிந்த அமேசான் காடுகளைப் போல, ஆங்காங்கே கொட்டிப்போன முடிகள்.

மிச்ச ஒரு ரூபாய்க்கு சாக்லெட் தரும் இந்த ஜனநாயக சோஷலிச நாட்டில், அந்த ஒரு ரூபாயை யார் கொடுத்தாலும் கிடைக்கும் குச்சி பால் ஐஸை வாங்கி, நஞ்சுண்ட பாம்பின் இரு கொம்பு வேல் போன்ற மெல்லிய நாக்கில் வைத்து சுவைத்தாள் ஆச்சியம்மே பேத்தி நாச்சியம்மே. முகம் கழுவிய பின்னும் நெற்றியில் இளஞ்சிவப்பில் மிச்சமிருக்கும் உறையூர் வெக்காளியம்மன் கோயில் குங்குமத்தைப் போல சிவந்த நிறம் கொண்ட மூக்கில் ஒட்டிக்கொண்டிருந்தது ஐஸ்கிரீம். அதனை நாய் நக்குமோ, பேய் நக்குமோ, இல்லை பனியால் வந்த ஜலதோஷ நோய் நக்குமோ...

வெகுஜன வெர்ஷன்ல வெகுளித்தனமா சொல்லணும்னா:தற்கொலைக்கு முயற்சி செய்து தோல்வியடைந்திருந்த ரோசி அக்காவின் அப்பாவை பெரியாஸ்பத்திரியில் பார்த்துவிட்டு வரும்பொழுதுதான் கவனித்தேன், தேவி தியேட்டர் தெருவின் முனையில் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்த அய்யனாரு தாத்தாவை. கோடம்பாக்கமும் வடபழனியும் இணையும் இடத்திலிருக்கும் டிரஸ்ட்புரம் ஹவுசிங் போர்டில் நான் இருந்தபோது, அங்கே வாடகை சைக்கிள் கடை வைத்திருந்த அய்யனாரு தாத்தாவை வாழ்க்கை இப்படி நிறுத்துமென யார் எதிர்பார்த்திருப்பார்? அவரிடம் கையில் அஞ்சு ரூபாய் காசை வைத்துக்கொண்டு ஐஸ்கிரீம் கேட்கும் அந்த சிறுமி, எரிவதும் உருகுவதுமான மனம் கொண்ட சந்திராக்காவை நினைவுபடுத்துகிறாள்.

திருப்பூரில் பனியன் பேக்டரியில் நான் சூப்பர்வைசராக இருந்தபோது, சந்திராக்கா அங்கு கார்மென்ட் தைக்க பெருமாநல்லூரில் இருந்து டவுன் பஸ் ஏறி வரும். 10 மணிக்கு பூட்டும் டாஸ்மாக்கின் ஷட்டரின் அடியில் சரக்கு கேட்டு கை விட்டு, முழங்கை வரை அடிபட்ட சந்திராக்காவின் கணவர் ராஜேந்திரன் அண்ணன், ‘இந்த உலகம் ரொம்ப மோசமானது தம்பி, உனக்கு ஒரு வேளை சோற கொடுத்துட்டு, உன் கையில இருக்கிற கூலிங் பீர எடுத்துக்கும்’ என்றது இன்னமும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

ஐந்தாவது படிக்கையில் புதுசா வாங்கிய ஜியாமெட்ரி பாக்ஸை கீர்த்தனா உதட்டால் கடித்துத் திறந்தது போல, இப்பொழுது அந்த சிறுமி ஆசையாய் வாங்கிய சேமியா ஐஸை கடித்த இடத்தில் இருந்தது அறியாமையின் கால் தடங்கள். ‘கரும்பு விலை ஏறிடுச்சு, பழைய இரும்பு விலை ஏறலையே’ என்ற ஏக்கத்தோடு அலையும் குமரேசன் சித்தப்பாவின் சைக்கிள் ஹெட்லைட் போல சரிந்திருந்த அந்த சிறுமியின் மூக்கில் நிறைந்திருந்தன ஐஸ் துளிகள். அதை தன் நுனிநாக்கில் தொட்டுவிட முயலும் அவளாவலுக்கு வாய் இடம் தரவில்லை. உண்மையில் நம் வாய்தானே நமது வாழ்க்கையின் வடு. வாய் ஒருபோதும் நம்மைக் காப்பாற்றுவதுமில்லை, அதே சமயம் கைவிடுவதுமில்லை!