எஞ்சினியரிங் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டா?



+2 ரிசல்ட் வந்துவிட்டது. அடுத்து என்ன என்ற கேள்வி பெற்றோரையும் மாணவர்களையும் பரிதவிக்கச் செய்கிறது. எதிரே ஏராளமான வாய்ப்புகள்... எதைத் தேர்வு செய்வது? எந்த படிப்புக்கு எதிர்காலம்?

யாருக்கு எந்தப் படிப்பு பொருந்தும்? எந்த கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்வது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்... தமிழகத்தில் ஏறக்குறைய 535 பொறியியல் கல்லூரிகள்... இந்தியாவில் தயாராகும் மொத்த பொறியாளர்களில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம்தான் உற்பத்தி செய்கிறது.

கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவைப் படித்து, 50 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் இன்று எஞ்சினியரிங் படிப்பில் சேரமுடியும். கடந்த பத்தாண்டுகளில் எஞ்சினியரிங் படிப்பின் மீதான மோகம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பொறியாளர்கள் வந்ததால் வேலைவாய்ப்பில் சிக்கல் வந்தது. ஆனாலும் எஞ்சினியரிங் படிப்பு இப்போதும் வேலைவாய்ப்பில் ‘மினிமம் கியாரண்டி’ உள்ள படிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எஞ்சினியரிங்கில் 80க்கும் மேற்பட்ட பிரிவுகள் உண்டு. அவற்றில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் எஞ்சினியரிங், எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங், கெமிக்கல் எஞ்சினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரிவுகள் அடிப்படையானவை. மற்றவை இவற்றைச் சார்ந்த சிறப்புப் பிரிவுகள்.

சரி... யாருக்கு எந்தப் படிப்பு பொருந்தும்? சென்னை கவுன்சிலிங் ஃபவுண்டேஷன் அமைப்பின் செயலாளர் கார்த்திக் லெட்சுமணன் விரிவாகப் பேசுகிறார். ‘‘எஞ்சினியரிங் மட்டுமல்ல... எந்தப் படிப்பாக இருந்தாலும் தேர்வு செய்வதற்கு சில அடிப்படை இலக்கணங்கள் இருக்கின்றன. ‘மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சேருங்கள்’ என்று சிலர் பொத்தாம்பொதுவாகச் சொல்வார்கள். அது தவறு.

மாணவனுக்கு எதில் திறன் இருக்கிறதோ அதைத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஆர்வம் வேறு, திறன் வேறு. ஒரு மாணவன் பெரிய இசைக்கலைஞனாக ஆசைப்
படுகிறான்.  ஆனால் குரல் ஒத்துழைக்கவில்லை. ஆனால் அவன் மிகச்சிறப்பாக ஓவியம் வரைகிறான். அவன் ஓவியத்துறையைத்தான் தனக்கானதாக தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து குணநலன்கள். எஞ்சினியரிங் என்பது மக்களோடு நேரடியாகத் தொடர்புகொள்ள வாய்ப்பில்லாத துறை. பெரும்பாலும் எந்திரங்கள், தொழில்நுட்பங்கள்... காலம் முழுவதும் இப்படித்தான் வாழ்க்கை அமையும். அதை ஏற்றுக் கொள்ளும் குணம் இருந்தால் மட்டுமே எஞ்சினியரிங்கை தேர்வு செய்ய வேண்டும். வெயிலில் நின்றால் மயங்கிவிடும் ஒரு மாணவன் பெட்ரோலியம் ரிபைனரி எஞ்சினியரிங்கை தேர்வு செய்யக்கூடாது. கடல் என்றாலே ஒவ்வாமை என்று கூறும் மாணவன் கப்பல் சார்ந்த படிப்பை எடுக்கக்கூடாது.

பெற்றோருக்கு இதில் நிறைய பொறுப்பு. முக்கியமானது, மாணவனின் சிந்தனையில் குறுக்கிடாமல் இருப்பது. எந்தக் கருத்தையும் திணிக்கக்கூடாது. பெற்றோரின் வற்புறுத்தலால் பிடிக்காத ஒரு துறையைத் தேர்வு செய்துவிட்டு தவிக்கும் நிறைய மாணவர்களைப் பார்க்கிறேன். ‘பெற்றோரை பழிவாங்குவதற்காகவே அரியர் வைக்கிறேன்’ என்று சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். எனவே உங்கள் கனவையும், கற்பனையையும் பிள்ளைகளின் மேல் சுமத்தாதீர்கள். 

ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனித்திறன் அவசியம். சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் ஓவியம் வரைவது அவசியம். எஞ்சினியரிங் டிராயிங் என்று ஒரு பேப்பரே இருக்கிறது. ஓவியத்திறன் இருக்கும் மாணவர்களுக்கு இப்பிரிவுகள் பொருந்தும். எல்லா எஞ்சினியரிங் படிப்புகளுக்குமே கணிதம் அடிப்படை. எனக்கு சுட்டுப் போட்டாலும் கணக்கு வராது என்று சொல்பவர்கள் தயவுசெய்து பொறியியலைத் தேர்வு செய்யாதீர்கள்...’’ என்கிறார் கார்த்திக் லெட்சுமணன்.சரி... எந்த படிப்பு பெஸ்ட்...?

‘‘எல்லாத் துறைகளுமே சிறந்த எதிர்காலத்தைக் கொண்டவைதான். எப்படிப் படிக்கிறீர்கள், எங்கே படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது’’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் டாக்டர் இ.பி.பெருமாள் பிள்ளை. ‘‘அடிப்படைப் பிரிவுகளான சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் படிப்புகள் பாதுகாப்பானவை.

சிறப்புப் பிரிவுகளைப் பொறுத்தவரை போட்டியும் குறைவு, வாய்ப்பும் குறைவு. உதாரணத்துக்கு, மெக்கானிக்கல் படித்தவர்கள் ஏரோநாட்டிக்கல் துறையிலும் வேலை செய்யமுடியும். ஏரோநாட்டிக்கல் படித்தவர்கள் அந்தத் துறை தவிர வேறெதிலும் வேலை செய்யமுடியாது. இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பிட்ட துறை சார்ந்த சிறப்புப் படிப்புகளை முதுகலையில் எடுத்துப் படிப்பது பாதுகாப்பு...’’ என்கிறார் அவர்.

‘‘மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்புக்கு மிகச்சிறப்பான எதிர்காலம் உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ உள்பட பல்வேறு உற்பத்தித் திட்டங்கள் இந்தியாவில் தொடங்கப்பட உள்ளன. அதனால் மெக்கானிக்கல் எஞ்சினியர்களுக்கான தேவை அதிகம் இருக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இந்தப் பிரிவைத் தேர்வு செய்யலாம். அதேபோல் சிவிலுக்கும் சிறப்பான எதிர்காலம் உண்டு. அக்ரிகல்ச்சர் எஞ்சினியரிங் படிப்பும் இந்தாண்டு கவனம் பெறுகிறது...’’ என்கிறார் கேரியர் கைடன்ஸ் நிபுணர் ரஜினி ரெட்டி.

‘‘கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி படிப்புகள் எப்போதும் எவர்கிரீன்தான். தாராளமாக இவற்றைத் தேர்வு செய்யலாம்’’ என்கிறார் கல்வியாளரும், கார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவருமான மாறன் நாகராஜன். ‘‘தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் வளர்ச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆண்டுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இத்துறையில் ஏற்றுமதி நடக்கிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10% இத்துறை மூலமே கிடைக்கிறது. 2020ல் 15 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டுமின்றி பிற பிரிவுகளை படிக்கும் மாணவர்களும் இந்தத் துறைக்கு அவசியம். நல்ல கல்லூரிகளைத் தேர்வு செய்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு தகவல்தொழில்நுட்பத் துறையில் சிவப்புக் கம்பள வரவேற்பு காத்திருக்கிறது...’’ என்கிறார் மாறன் நாகராஜன்.

பொறியியலைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு கார்த்திக் லட்சுமணன் சொல்லும் மற்றொரு ஆலோசனை முக்கியமானது.‘‘பொறியியல் படித்துக் கொண்டிருக்கிற, படிக்கப்போகிற மாணவர்களை வதைக்கும் கேள்வி, படிப்பு முடித்ததும் வேலை கிடைக்குமா? என்பதுதான். இந்த மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஒரு பொறியாளர் நினைத்தால் பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். திறமைசாலிகளை அடையாளம் கண்டு நிதியை வாரி வழங்க ஏகப்பட்ட நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளும் கூட பல நூறு கோடி ரூபாய்களை வைத்துக் கொண்டு திறமையான இளைஞர்களுக்காகக் காத்திருக்கின்றன. எனவே வேலையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் படிக்கிற அதே படிப்புதான் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளியையும் உருவாக்குகிறது...’’

வேலையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் படிக்கிற அதே படிப்புதான் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளியையும் உருவாக்குகிறது!
(நல்ல கல்லூரி எது... அடுத்த வாரம் அலசுவோம்)

- வெ.நீலகண்டன்