வை ராஜா வை



நடக்கப்போவது எதுவானாலும் முன்கூட்டியே அறிந்து சொல்லும் விநோத பவர் கொண்ட கௌதம் கார்த்திக், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட ஏற்ற இறக்கங்களைக் கூறு போட்டுச் சொல்கிற கதை ‘வை ராஜா வை’. அப்படியொரு பவரை தனக்கு வேண்டியதாக கை மாற்றிட நினைக்கும் வில்லனின் சூழ்ச்சிகளுக்கும் சூதுகளுக்கும் மத்தியில், கௌதமிற்கு என்ன நேர்ந்தது என்பதே ‘வை ராஜா வை’.

கௌதமின் இ.எஸ்.பி பவரை கைப்பிடித்து கதை செல்வதால் ஆரம்ப விறுவிறுப்பிற்கு ஏற்ற மாதிரி பவர்ப்ளே ஏரியா அமைந்துவிட்டது. அதையே உள்வாங்கிக்கொண்டு விறைப்பு, முறைப்பு காட்சிகளால் திரைக்கதை சூடு பிடித்த வகையில், அதிரடி காட்டியிருக்கிறார் டைரக்டர் ஐஸ்வர்யா தனுஷ்.

காதலுக்கும் அதே ஃபீலிங், எக்கச்சக்க பதற்ற வேளைகளிலும் அதே முகம் என வேறுபாடு காட்டத் தெரியாமல் திகைத்து நிற்கிறார் ஹீரோ. நவரச நாயகன் என அப்பா பெயர் எடுத்ததை கவனத்தில் வைக்க வேண்டும் கௌதம்! இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கீங்களே பிரதர்... மாறினால் நிச்சயம் எதிர்காலம் பிரைட்! மற்ற கேரக்டர்களில் அனுபவப்பட்ட நடிகர்களை வைத்துக்கொண்டு இருப்பதால் விரைந்து போகும் திரைக்கதையில் பயணம் போகிறார் ஐஸ்வர்யா.

முதன்முதலில் நண்பன் வீட்டில் வெடி விபத்து ஏற்படும்போது வரும் பதற்றம், ஆபீஸ் சர்க்கிளில் நிகழப்போகும் நடப்புகளை முன்கூட்டியே சர்வ சாதாரணமாக சொல்லிச் செல்லும் காட்சிகள் என விறுவிறுப்பு காட்டியதில் இயக்குநருக்கே முதலிடம்!ப்ரியா ஆனந்த் சொல்லிக்கொள்கிற மாதிரி நடிக்காவிட்டாலும், அள்ளிக்கொள்கிற மாதிரி அழகு. அதனால் நடிக்காவிட்டாலும் ஜொலிக்கிறார். ஆனாலும், அவர் கௌதமின் காதலில் இணைகிற இடமெல்லாம் நன்றாக இருப்பது என்னவோ உண்மை. என்னதான் தமிழ் பேசத் தெரிந்திருந்தாலும், நடிப்பும் தெரிந்தால்தானே

உத்தமம்!அடுத்த கட்டம் போயிருக்கிறார் விவேக்! கவுண்டர் டயலாக்கில் ஆகட்டும், ஹீரோவை மேட்ச் ஃபிக்ஸிங் ஆட்களிடம் மாட்டிவிட்டு, பின்பு தவிப்பதில் ஆகட்டும்... மனிதர் செம ஸ்கோர்! அல்லுகில்லு வசனங்களில் அடிக்கடி எஃபெக்ட் கொடுக்கிறார் சதீஷ்!கௌதமின் இ.எஸ்.பி பவரில் எரிச்சல் அடைவது, நடக்கிற மேட்ச்சுக்கு பெட் கட்டுவது, வகை தொகையில்லாமல் விறைப்பு காட்டுவது என சூப்பர் வில்லனாக டேனியல் பாலாஜி கனகச்சிதம்.

 எந்தச் சூழ்நிலையிலும் பதறாமல் எதிராளியின் சைக்காலஜியை சிதைப்பதாகட்டும், பதறிப் பேசுவதிலாகட்டும், ஹீரோயின் கண்களில் கையை விட்டு ஆட்டும் ஒரு பக்கா வில்லன். ‘இத்தனை நாளாக எங்கே போயிருந்தீங்க சாமி?’ என்ற கேள்வி மறக்காமல் மனசில் வருகிறது. இத்தகைய வில்லனுக்கு எப்படி ஈடு கொடுத்திருக்க வேண்டும் கௌதம்! ‘தேமே’யென்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதாலோ என்னவோ... கௌதம் இடத்தையும் எடுத்துக்கொள்கிறார் டேனியல்.

ஒரு பாட்டுக்கு எஸ்.ஜே. சூர்யா குத்து டான்ஸ் போடுவது சர்ப்ரைஸ். ஆச்சர்யங்கள் அதோடு முடியவில்லை. கடைசி காட்சிகளில் திடீரென தனுஷ் தருவது அசால்ட் என்ட்ரி. படத்திற்கான டெம்போவை தக்க வைக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. குறிப்பாக நடுக்கடலில் கப்பல் கேஸினோ காட்சிகள் தமிழுக்குப் புதுசு. யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்களை விடவும் சுவாரஸ்யம் பின்னணி இசைதான்.திரைக்கதை மெருகில் ரசிக்க வைக்கும் ராஜா!

- குங்குமம் விமர்சனக் குழு