மாட்டிக்கிட்டீங்களா நீங்க?



அணிந்துகொள்ளக்கூடிய அட்வான்ஸ்ட் டெக்னாலஜி!

ஸ்மார்ட் போன்களில் தேவையான முன்னேற்றங்களைச் செய்தாகிவிட்டது. இனி, அணிந்துகொள்ளக் கூடிய ஸ்மார்ட் பொருட்களுக்குத்தான் மார்க்கெட் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள். ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி, கைப்பட்டை, பெல்ட்டுகள் என வரிசை கட்டி நிற்கும் இந்த அயிட்டங்களின் லிஸ்ட் பெரியது. மொத்தமாக இதையெல்லாம் ‘வியரபிள் டெக்னாலஜி’ என்கிறார்கள்.

இப்போது உலகெங்கும் பற்றி எரிவது இந்தத் தலைப்புதான். இந்தியாவிலேயே இதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மார்க்கெட் இருக்கிறதாம். இந்திய நகரத்து இளைஞர்களில் 80 சதவீதம் பேர் இப்படிப்பட்ட பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக சர்வேக்கள் சொல்கின்றன. வருங்கால மனிதர்களின் லைஃப்ஸ்டைலையே மாற்றவிருக்கும் அந்த கேஜட்டுகளின் லிஸ்ட் இதோ...

ஃபிட்னஸ் பேண்டுகள்நம்மூர் ராகவேந்திரா காப்பர் காப்பு மாதிரி ஸ்லிம் அண்ட் ஸ்லீக் தோற்றம். ஆனால், நாம் நடப்பது, ஓடுவது, படியேறுவது என அனைத்தையும் இவை கண்காணித்து கணக்கு பண்ணும். உடற்பயிற்சி போதவில்லை என்றால் ‘எழுந்து நடடா’ என உசுப்பிவிடும். அதனால்தான் இவற்றின் பெயர் ஃபிட்னஸ் பேண்ட். ஜா போன் UP, ஃபிட்பிட் ஃப்ளெக்ஸ், GoQii என இவற்றில் பிராண்டுகள் அநேகம். வாட்ச் உலக ஜாம்பவான் டைமெக்ஸ் கூட சமீபத்தில் அயர்ன் மேன் ரன்X20 எனும் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, இந்தக் கூட்டத்தில் இணைந்திருக்கிறது. நாம் உறங்கும் நேரத்தைக் கூட இந்த பேண்டுகள் பதிவு செய்யும்.

ஸ்மார்ட் வாட்ச்கள்

ஆப்பிள், சோனி ஆரம்பித்து லோக்கல் மார்க்கெட் ஸ்பைஸ் வரை ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கிறார்கள். டைமெக்ஸும் இந்த கோதாவில் குதித்திருக்கிறது. ஆனாலும் இந்தப் போட்டியில் முதல் ஆளாக முந்துவது சாம்சங் கியர் வாட்ச்கள்தான். நம் செல்போனுக்கு ஒரு புளூ டூத் ஹெட்போன் போலவே செயல்படும் இந்த வாட்ச்கள் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் போலவே இயங்குபவை. ஆக, தேவைப்படும் ஃபிட்னஸ் ஆப்களை நாமே இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். இதயத் துடிப்பு முதல் ரத்த அழுத்தம் வரை கண்டறியும் நுண்ணிய சென்சார்கள் இதில் உண்டு.

ஃபின் ரிங்

கைப்பட்டை கூட பெரிது. மனிதர்கள் ஸ்மார்ட்டாக மாற ஒரு மோதிரம் போதும் எனச் சொல்லும் டெக்னாலஜி இது. இதைக் கட்டை விரலில் அணிந்து கொண்டால் போதும்... ப்ளூ டூத் மூலமும் இன்ஃப்ரா ரெட் மூலமும் எல்லா வித ரிமோட் கருவிகளையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். இந்த ரிங்கை ஆள்காட்டி விரலால் தொட்டால் ஒரு கட்டளை, மோதிர விரலால் தொட்டால் ஒரு கட்டளை என நம் விரல் வித்தைகள் பார்ப்பவரை அசத்தும்.

கூகுள் கிளாஸ்

இது கூகுளின் மூளையில் பிறப்பெடுத்த குழந்தை. கண்ணாடி அணிந்திருப்பவருக்கு மட்டும் தெரியும்படி எப்போதும் இதில் ஒரு ஸ்கிரீன் உயிர் பெற்றிருக்கும். கிட்டத்தட்ட ஸ்மார்ட் போன் போல இதுவும் இணையத்தில் இணைந்திருக்கும். நம் எதிரில் இருக்கும் பொருளை போட்டோ எடுத்து, அது பற்றி இணையத்தில் தேடி தகவல்களைத் தருவது; நாமிருக்கும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்துக்கு மேப்பில் அம்புக்குறி மூலம் வழிகாட்டுவது என இதன் செயல்பாடுகள் ஆகா ரகம். கைகளால் ஆபரேட் பண்ணும் அவசியம் கூட இல்லை. வெறும் குரல் கட்டளைகளை ஏற்றே நமக்கு வேண்டியதைத் தரும் மாயக்கண்ணாடி இது.

கெட் ஆக்டிவ் ஸ்லிம்

ஃபிட்னஸ் பேண்டுகள் செய்யும் எல்லா வேலையையும் இது செய்யும். ஆனால், கையில் அணிய வேண்டியதில்லை. பேனாவைப் போல சட்டையில் சொருகி வைத்தால் போதும். மார்புக்குப் பக்கத்தில் இருப்பதால் இதனால் நாடித் துடிப்பு வேகத்தை இன்னும் சற்று துல்லியமாகக் கணக்கிட முடியும். தூங்கும் நேரத்தையும் தூக்கத்தில் நம் அசைவையும்கூட கணக்கிட்டு, நம் ஆரோக்கிய நிலையை எப்போதும் அப்டேட்டில் வைத்திருக்கும். நம்மைப் பற்றிய தகவல்கள் 15 நாட்கள் வரை இதில் அப்படியே இருக்கும். அதன் பின் யு.எஸ்.பி மூலம் கணினியில் ஏற்றிக் கொள்ளலாம்.

லே சல் ஜி.பி.எஸ் ஷ ூக்கள்

ப்ளூடூத் மூலம் நம் ஸ்மார்ட் போனோடு இணைந்திருக்கும் ஷூக்கள் இவை. இவற்றிலும் நாடித்துடிப்பு சென்சார் எல்லாம் இருந்தாலும் இதன் முக்கிய பணி, வழி காட்டுவதுதான். கூகுள் மேப்பில் நாம் செல்ல வேண்டிய இடத்தைக் குறித்துவிட்டோம். ஆனால், ஒவ்வொரு திருப்பத்திலும் போனை எடுத்து வழி பார்க்க முடியாதல்லவா? அதற்குத்தான் இந்த ஷூக்கள். நாம் எந்தப் பக்கம் திரும்ப வேண்டுமோ அந்தப் பக்க காலில் சின்ன வைப்ரேஷன் உருவாகும். இதன் மூலம் பக்கத்தில் இருப்பவர் கூட அறியாமல் நாம் வழியறிந்து செல்லலாம்.

நூமெட்ரிக்ஸ் மார்புப்பட்டை

இதயத் துடிப்பை அறியும் ஹார்ட் ரேட் மானிட்டர்கள் எல்லா ஸ்மார்ட் போன்களிலும், ஸ்மார்ட் வாட்ச்சுகளிலும், ஃபிட்னஸ் பேண்ட்களிலும் உள்ளன. ஆனால், அதன் துல்லியத்தை நம்ப முடியுமா? இந்த இடத்தில்தான் இப்படி ஒரு கருவியின் தேவை ஏற்படுகிறது. மெல்லிய துணிப்பட்டை போலிருக்கும் இதை நம் மார்பில் கட்டிக் கொள்ள வேண்டும்.

எப்போதும் ஒரு டாக்டர் ஸ்டெத் வைத்து நம்மை சோதித்துக்கொண்டிருக்கும் பாதுகாப்பை இது தரும். துல்லியமான இதன் கணக்குப்படி நாடித்துடிப்பில் சின்ன வித்தியாசம் ஏற்பட்டாலும் நம் ஸ்மார்ட் போனுக்கு தகவல் அனுப்பி அலர்ட் செய்யும். அதோடு இதிலிருக்கும் விசேஷ துணி மெட்டீரியல், வியர்வையை உறிஞ்சி சீக்கிரம் காய வைத்து நம்மை உலர்வாகவும் வைக்குமாம்!

- நவநீதன்