உறுமல்



வேலை இல்லாமல் இருந்தேன். வீட்டில் தண்டச் சோறு. விளையாட்டு அது இது என்று ஊர் சுற்றப் போய்விடுவேன். ஆனால் காலை, மதியம், இரவு தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதற்காகவே எங்கிருந்தாலும் வந்துவிடுவேன். ஊர், உலகத்தில் என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்ளாமல் என்னால் இருக்க முடியாது. அதை நல்ல பழக்கம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அது நல்ல பழக்கமாய் இல்லை. அந்நேரம் சீரியல், சினிமா என எதுவும் அவர்களால் பார்க்க முடியவில்லையே!

அப்போதெல்லாம் அப்பா உறுமுவார்... ‘‘துரைக்கு நியூஸ் பாக்காம சோறு இறங்காதாக்கும்..?’’கேட்டதும் சோறும் தொண்டையில் இறங்காது; செய்திகளும் மனதில் இறங்காது.ஒரு வழியாக எனக்கும் வேலை கிடைத்தது. வெளியூரிலேயே தங்கி வேலை பார்க்க வேண்டியிருந்தது. நல்ல சம்பளம். தினமும் ஒரே வித வேலை. அன்றைக்கு என்ன கிழமை என்பதைக் கூட கண்டுகொள்ளாமல் உழைக்கப் பழகி யிருந்தேன்.

அப்புறம் எங்கே செய்தி பார்ப்பது? ஒரு நாள் விடுமுறையில் ஊருக்கு வந்தேன். அப்பாவிடம் கை நிறையப் பணம் கொடுத்தேன். கூடத்தில் சாப்பிட உட்கார்ந்தேன். தங்கை சத்தமாக பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்பா உறுமினார்.‘‘நீ உள்ளாரப் போயி படிப்பியா… அண்ணன் செய்தி பாக்கணுமில்ல..?’’       

காமுதர்மா