பழசு



பழைய பொருள் எதைக் கண்டாலும் விடமாட்டான் மாசிலிங்கம். சுற்றுலா  போனபோது பாரம்பரியப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில், கண்ணில் பட்ட பொருளை எல்லாம்  காசை காசாகப் பார்க்காமல் வாங்கிக் குவித்தான்.ஒரு அளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அவன் மனைவி உமாவால்.

‘‘என்னங்க, காசுக்கு கேடா எதுக்கு இந்தப் பழைய குப்பைகளை வாங்கிட்டு இருக்கீங்க?’’‘‘என்னது...  பழைய குப்பையா? உனக்கென்ன தெரியும்... பழைய பொருட்களுக்கு இருக்கற மதிப்பைப்  பத்தி? என்னதான் புதுப்பொருள் வந்தாலும், பழசுக்கு உள்ள மவுசே தனிதான்!’’விடாப்பிடியா நின்ற கணவனை விட்டுத் தொலைத்தாள் உமா.

கடைசியாக ரோட்டோரம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் காலத்து கிராமபோனை வாங்கினான். காரில் வைக்கவே இடம் இல்லாமல் கஷ்டப்பட்டு ஏற்றினார்கள்.மாசிலிங்கத்தின்  செயல் யாருக்குமே பிடிக்கவில்லை என்றாலும், இனி பேசினால் கோபத்தில்  கடித்துக் குதறி விடுவான் என்று மகனும்  மகளும் மெளனமானார்கள்.

வீட்டில் வந்து இறங்கும்போது ஊரில் இருந்து உறவுக்காரர்கள் திருமணப் பத்திரிகையோடு வந்து நின்றார்கள். வந்தவர்களில் ஒருவர் கேட்டார்... ‘‘எங்கே மாசி... அம்மாவைக் காணோம்?’’‘‘முதியோர் இல்லத்தில் சேர்த்துட்டேன். வீட்டில் பெரிசுகளை வச்சிட்டு சமாளிக்க முடியலை!’’

அமுதகுமார்