‘அலைகள் ஓய்வதில்லை’ல ஹீரோ சான்ஸ்
ஜஸ்ட் மிஸ்!
`வஞ்சிரம் மீன் இருக்குன்றான்... வாளை மீன் இருக்குன்றான்...’ என வடிவேலுக்கு ஜாமீன் வாங்கப்போனவர். `கலகலப்பு’படத்தில் சந்தானத்தின் கைத்தடி. காமெடி டீம்களில் ஏழெட்டு பேருடன் வந்தாலும் எக்ஸ்க்ளூசிவ்வாக தெரிபவர் பாவா லட்சுமணன். புரொடக்ஷன் மேனேஜரிலிருந்து ப்ரமோஷன் ஆகி வந்த இன்னொரு காமெடியன்.
``சாலிகிராமம், வேலாயுதம் காலனி பூங்காவுக்கு வந்துடுங்கண்ணே!’’ என லட்சுமணன் அடையாளம் சொன்ன அந்தப் பூங்காவைத் தேடிப் போனால், பெரிய பூட்டு தொங்கியது. ஆகா, ‘நம்மளை வச்சி காமடி கீமெடி...’ என யோசிக்கும்போதே வந்து நிற்கிறார் லட்சுமணன். காவி வேட்டி, வாய் நிறைய சிரிப்பு, ஃபேமிலி பேக் வயிறு, நெற்றி நிறைய குங்குமம், குனிந்து நிமிர்ந்து ஒரு வணக்கம்.
``இருநூறாவது படத்தை நோக்கி நம்ம வண்டி போய்க்கிட்டிருக்கு. ஆனா, மொதமொத இன்னிக்குதான் ஷார்ட் ஃபிலிம்ல நடிக்கப் போறேன். இங்கதான் ஷூட்டிங். அதான் சாவியை வாங்கி வச்சிட்டேன்!’’ என்றபடி, அவரே பூட்டைத் திறக்கிறார். `` `புது வசந்தம்’ படத்திலிருந்து `சூரிய வம்சம்’ வரை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் படங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜரா இருந்ததால எல்லாருக்கும் நான் ‘சூப்பர் குட் லட்சுமணன்’.
மதுரையில நமக்கு முஸ்லிம் ஃப்ரெண்ட்ஸ் அதிகம். அவங்கள ‘பாவா... பாவா...’ன்னு கூப்பிட்டே அது நம்ம பேர்ல ஒட்டிக்கிருச்சு. மேல மாசி வீதிதான் வாழ்ந்த இடம். எங்க தாத்தா மண்டையன் ஆசாரி பேர்ல இப்பவும் அங்க ஒரு சந்து இருக்கு. எல்லாம் போச்சு. எங்க அப்பா அழகுமலை, பஸ் கண்டக்டர். ரெண்டு அக்கா, ஆறு அண்ணன் - தம்பிங்கன்னு பெரிய குடும்பத்துல நான் அஞ்சாவது புள்ள. எனக்கு 7 வயசு இருக்கும்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ல `மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’ பட ஷூட்டிங் நடந்தது. அதுல சுருளிராஜன் பையனா நடிச்சது நான்தான். அப்ப புடிச்சுது சினிமா பைத்தியம்!
9வது படிக்கறப்ப முதன்முதலா எடிட்டர் கிருபாசங்கர் சாரோடதான் சென்னை வந்தேன். விமானத்துல கூட்டிட்டு வந்தார். பாரதிராஜா ஒரு சின்னப் பையனை ஹீரோவா தேடுறதா கேள்விப்பட்டு, அவரைப் பார்த்தோம். `பையன் நல்லா இருக்கான். ரெண்டு நாள்ல ரிசல்ட் சொல்றேன்’னு அவர் சொன்னார். அப்புறம் வேற ஒரு பையன் செலக்ட் ஆனதா சொன்னாங்க. அவர்தான் கார்த்திக். அந்தப் படம் `அலைகள் ஓய்வதில்லை’.
`வட போச்சே’ன்னு வருத்தப்பட்டுட்டு மதுரைக்கு திரும்பினா, `சினிமாவுல நடிக்கப் போறேன்னியே... என்னாச்சு?’ன்னு எல்லாரும் ஒரே கேலி. அதைத் தாங்க மாட்டாம சென்னை வந்துட்டேன். பில்டிங் வேலை, வீடு வீடா சுண்ணாம்பு அடிக்கற வேலை, பீடா போடுற வேலைன்னு பார்க்காத வேலை கிடையாது. அப்போதான் பெப்சி விஜயன் மாஸ்டர் வீட்ல வேலைக்கு சேர்ந்தேன். என்னையும் அவங்க புள்ளையா நினைச்சு வளர்த்தாங்க.
அங்க இருந்துக்கிட்டே சினிமாவுக்கும் ட்ரை பண்ணினேன். சரத்குமார், பல்லவி நடிச்ச `சிறையில் சில ராகங்கள்’னு ஒரு படத்துல மேனேஜரா வேலை செஞ்சேன். அதுல விக்ரமன் சார் உதவி இயக்குநர். சூப்பர்குட் பிலிம்ஸுக்கு அவர் `புது வசந்தம்’ கதை சொல்லி ஓகே ஆனதும், புரொடக்ஷன் மேனேஜரா அதில் வேலை செய்யிற வாய்ப்புக் கிடைச்சது.
என் அக்கவுன்ட்ல 5 லட்சம், பத்து லட்சம்னு பணம் போட்டு வைக்கிற அளவுக்கு ஆர்.பி.சௌத்ரி சார் என்னை நம்பினார். நான் பேசுற மதுரை ஸ்லாங்கைப் பார்த்துதான் டைரக்டர்ஸ் என்னை நடிக்க வச்சாங்க. ‘சொல்லாமலே’ பட க்ளைமேக்ஸ்ல சசி சார் ரொம்ப நல்ல கேரக்டர் கொடுத்தார். `மாயி’ படத்துல அந்தச் சின்ன கேரக்டர் வாய்ப்புக் கிடைச்சதும் அந்த வாய்ஸாலதான்.
``மாயி வந்திருக்காக... மாப்பிள்ள மொக்கச்சாமி வந்திருக்காக... மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காக... வாம்ம்மா, மின்னல்’ங்கற டயலாக் பட்டி தொட்டியெல்லாம் என் பேர சொல்லிச்சு. `ஆனந்தம்’ படத்துல திருடன் கேரக்டர்ல நடிச்சிருப்பேன். `உனக்கு நடிப்பு வருதுடா... மேனேஜர் வேலையை விட்டுட்டு நடிக்கற வேலையை மட்டும் பாரு’னு மம்மூட்டி சார் எனக்குப் பிள்ளையார் சுழி போட்டார். இன்னிக்கு வரை தொழில் சிறப்பா போய்க்கிட்டிருக்கு.
விவேக், சந்தானம்னு எல்லாரோடவும் நடிச்சாச்சு. இன்னிக்கு என் வாழ்க்கை வண்டி நல்லா ஓடுறதுக்கு காரணம்னா அது வடிவேலு அண்ணன்தான். 60 படங்களுக்கு மேல அவரோட நடிச்சிட்டேன். அவரை நம்பியே 25 குடும்பங்கள் இருக்கு. மாசத்துக்கு பத்து நாள் எங்களுக்கு வேலை கிடைச்சிடும். அதுவே அந்த ஒரு மாசம் வரை எங்களுக்கு சிரமமில்லாம ஓடும்.
இப்ப ‘ஆதித்யா’ சேனல்ல என்னோட முகமும் டெய்லி வருதுண்ணே... சந்தோஷமா இருக்கு. டி.வியில பார்த்துட்டு கூட புதுப்பட வாய்ப்புகள் நிறைய வருது. சினிமாவுல நான் நடிக்க முயற்சி பண்ணின காலங்கள்ல பொறுப்பு அதிகம். அப்பா இறந்த பிறகு குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்தது. மாசாமாசம் கரெக்டா ஊருக்கு பணம் அனுப்பிட்டு இருந்தேன்.
அதனால எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைக்க தோணாம இருந்துச்சு. அப்பா, அம்மா ரெண்டு பேருமே இன்னிக்கு இல்லை. ஓரளவு சம்பாதிக்கவும் ஆரம்பிச்சிட்டேன். நம்ம வண்டி நல்லா ஓடிட்டிருக்கு. அடுத்த வருஷத்துக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடணும்னு நினைச்சிருக்கேன். உங்களுக்கு பத்திரிகை வைக்கறேன்... கண்டிப்பா வந்திடுங்கண்ணே!’’இப்ப ‘ஆதித்யா’ சேனல்ல என்னோட முகமும் டெய்லி வருதுண்ணே... சந்தோஷமா இருக்கு. டி.வியில பார்த்துட்டு கூட புதுப்பட வாய்ப்புகள் நிறைய வருது.
- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்