உணவு விழிப்புணர்வுத் தொடர் 16
அயோடின் உப்பின் பின்னால் இருக்கும் அரசியலைப் பற்றித் தெரிந்து கொண்டோம். யாருக்கோ பற்றாக்குறை உள்ள அயோடினை, எந்தப் பற்றாக்குறையும் இல்லாத நாம் எல்லோரும் ஏன் சாப்பிட்டு வருகிறோம் என்பதையும், அயோடின் கட்டாயச் சட்டம் பற்றியும் பேசினோம். நம் உடலை இந்த அதிகபட்ச அயோடினிலிருந்து எப்படிப் பாதுகாத்துக் கொள்வது?
மிகச்சுலபமான இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று... அயோடின் உள்ள உப்பை நாம் வாங்கியவுடன் ஒரு பெரிய தட்டு அல்லது வாய் அகன்ற பாத்திரத்தில் பரப்பி, அதனை காற்று படுமாறு வைத்து விட வேண்டும். உப்பின் இயல்பான மணம் வருகிற வரைக்கும் இவ்வாறு வைக்கலாம். அல்லது உப்பினை லேசான சூட்டில் வறுத்துப் பயன்படுத்தலாம். இந்த முறைகளில் அயோடின் உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் தன்மையை மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இரண்டாவது வழி இயற்கையானது.
அயோடினை உப்பில் சேர்க்கச் சொன்ன விஞ்ஞானிகளே சொல்வது போல, கூடுதலான அயோடினை உடலே வெளியேற்றி விடும் என்று காத்திருப்பது. ஒன்றும் செய்யாமல் சும்மா காத்திருந்தால் அயோடின் வெளியேறி விடுமா என்ன? ஆமாம். உண்மையில் வெளியேறி விடும்தான். ஏனென்றால், தேவையற்ற கழிவுகளை, உடலிற்குப் பயன்படாத பொருட்களை, உடலுக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை உடல் தானே வெளியேற்றி விடும் என்பது உண்மைதான்.
ஆனால், ஒவ்வொருவரது உடலுக்கும் ஏற்றபடி இந்த வெளியேற்றும் தன்மை மாறுபடும். ஒருவரது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து அவரின் கழிவுகளை வெளியேற்றும் திறன் அமைந்திருக்கும். எதிர்ப்பு சக்தி சரியாக உள்ள நபருக்கு விஷம் கூட வேலை செய்யாமல் வெளியேறி விடும். அதற்காக எல்லோரும் எதிர்ப்பு சக்தியை சோதித்துப் பார்க்க முடியுமா என்ன? அப்புறம் என்னதான் செய்வது?
உடல் அயோடினை வெளியேற்றுவதற்கு உதவியாக, உடலின் தேவையறிந்து நாம் சாப்பிட வேண்டும்; பசிக்கும்போது சாப்பிட வேண்டும். இதனை நாம் ஏற்கனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். அப்படி முறையாக சாப்பிடுவதன் மூலம், உணவில் கலந்திருக்கும் தேவையற்ற கழிவுகளை உடலால் பிரித்து விட முடியும்.
இப்படி நம்முடைய முயற்சி மூலம் அயோடின் உப்பினை காற்றில் வைத்து, வறுத்தும், பசியறிந்து சாப்பிட்டும் செயலிழக்கச் செய்யலாம்.
நவீன உணவுகளின் தீமைகள் என்று நாம் சொல்லும்போது, அதனை நவீன உணவுகளின் ரசாயனக் கலப்படம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். தினமும் நாம் பயன்படுத்தும் சாதாரண உணவுப் பொருட்களில் கூட, உடலிற்கு தீங்கு விளைவிக்கும் எண்ணற்ற ரசாயனங்கள் கலந்துள்ளன. உணவுப் பொருட்களின் ரசாயனக் கலப்படத்தை நாம் அறிந்து கொள்வதற்கு முன்னால், சாப்பிடுவதற்காக நம் வாயைத் தயார் செய்யும் டூத் பேஸ்ட்டில் இருந்து துவங்குவோம்.
உலக பற்பசை வரலாறு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
1873ம் ஆண்டு கோல்கேட் பற்பொடி அமெரிக்காவின் வில்லியம் கோல்கேட் என்பவரால் உப்பு, படிகாரம், சுண்ணாம்பு கொண்டு தயாரிக்கப்பட்டது. 1892ம் ஆண்டு வாஷிங்டன் வெண்ட்வொர்த் ஷெப்பீல்டு (Washington Wentworth Sheffield) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பல் மருத்துவர் கால்சியம் ஃபுளூரைடுகளைக் கொண்டு பற்பசை தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, உலகின் முதல் டூத்பேஸ்ட்டை உருவாக்கினார். இப்படித் துவங்கியதுதான் பற்பசையின் பயணம்.
எப்போதுமே உலக வரலாறுகள் அமெரிக்காவில் துவங்குவதைப் போலவே பற்பொடி, பற்பசை பற்றிய செய்திகளும் அங்கேயே துவங்குகின்றன. அப்படியானால் 1873க்கு முன்பு உலகில் யாருமே பல் துலக்கியதில்லையா என்ன?
நம்முடைய தாத்தாக்களும், பாட்டிகளும் பல் துலக்க என்ன பயன்படுத்தினார்கள்? உப்பை, நெல்லில் இருந்து வரும் உமிக் கருக்கை, மரத்துண்டுகளை... என அடுக்கிக் கொண்டே போகலாம். நம் நாட்டின் வேப்ப மரத்திலிருந்து எடுக்கும் மருந்துப் பொருட்களுக்கு ஜெர்மனி நிறுவனம் ஒன்று காப்புரிமை கோரியது போல, உலகில் பல் துலக்கும் பழக்கத்தை அமெரிக்கா துவங்கி வைத்தது போன்று வரலாறுகள் கட்டமைக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் 1800களுக்கு முன்னால் யாரும் பல் துலக்கியதில்லையோ என்னவோ! பல் துலக்கும் பழக்கத்திற்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கவில்லை என்றாலும், நாம் ஒவ்வொரு நாள் காலையில் பல் துலக்கும்போதும் அமெரிக்க நிறுவனத்திற்கான ராயல்டியை கொடுத்துத்தான் பல் துலக்குகிறோம். உலகின் பெரும்பாலான நாடுகளில் விற்பது அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளே! உலக மக்களில் பாதிப் பேர், தினம் தினம் அதிகாலையில் தூங்கி விழித்ததுமே தங்கள் முதல் செலவை அமெரிக்கக் கம்பெனிகளுக்கே செய்கிறார்கள்!
சரி, அதை விடுங்கள். பற்பசையின் வரலாற்றுக்குத் திரும்புவோம்.பேஸ்ட் கண்டுபிடித்து சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1937ம் ஆண்டு அமெரிக்க பல் மருத்துவர் அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. ‘ஃபுளூரைடு கலந்த பற்பசைகள் பற்களுக்கு நன்மை செய்யவில்லை, மாறாக, அவை பற்களை பெரிதும் பாதிக்கின்றன’ என்பதுதான் அந்த ஆய்வு சொன்ன முடிவு. அதோடு அதிகபட்ச ஃபுளூரைடு உடலில் சேர்வதால் உடல்பருமன், சிந்தனைத்திறன் குறைவது என குழந்தைகளுக்கு பல பிரச்னைகள் வருவதாக கவலை தெரிவித்திருந்தது அந்த அமைப்பு. மேலைநாட்டு பல் மருத்துவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட பற்பசைக்கு அதே மேலைநாட்டு பல் மருத்துவர் அமைப்பின் மூலமே சிக்கல் வந்தது.
உலகம் முழுவதும் ஃபுளூரைடு பேஸ்ட்டுகள் பரவலாகி, பெரும் தொழிலாக மாறிவிட்டிருந்த நிலையில் இந்த சர்ச்சை பெரும் புயலைக் கிளப்பியது. ‘கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை’ என்று நம்மூரில் சொல்வதைப் போல பேஸ்ட் வியாபாரமும் நின்று விடக்கூடாது, பற்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு யோசித்தது.
பரவாயில்லையே... நம் பற்களைப் பற்றி அமெரிக்க அரசே கவலைப்பட்டு யோசித்திருக்கிறதே என்று மகிழ்ச்சியடைய வேண்டாம். பற்களை நாம் ஒரு முறை இழந்து விட்டால் வாழ்நாள் முழுக்க பேஸ்ட்டே தேவைப்படாது. ஒரு தனிநபரின் பற்கள் பாதிக்கப்படுவது, பேஸ்ட் கம்பெனி தன் வாடிக்கையாளர் ஒருவரை முழுமையாக இழப்பதாக அர்த்தம் கொள்ளப்படும். கவலைக்கு இதுவே காரணம்!
இதற்கு ஒரு வழியாக சமரச முடிவு ஒன்றை உருவாக்கினார்கள். ஃபுளூரைடு உடலுக்குள் செல்வது தவறுதான் என்று முடிவுக்கு வந்தார்கள். ஆனால் அளவைக் குறைத்து செய்தால் பாதிப்பு ஏற்படாது என்று புதிய யோசனையை முன்வைத்தார்கள். அப்புறம் மறுபடியும் பேஸ்ட் புதிய வேகத்தோடு கிளம்பியது. 1800களில் கண்டுபிடிக்கப்பட்ட அதே ஃபுளூரைடு பேஸ்ட்டைத்தான் இப்போது வரை நாமும் பயன்படுத்துகிறோம்.
பெரியவர்கள் பயன்படுத்தும் பேஸ்ட்டுகளில் ஃபுளூரைடின் அளவு 1000 பி.பி.எம்.மிற்கு உட்பட்டும், குழந்தைகளின் பேஸ்ட்டில் 500 பி.பி.எம். அளவிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும் என்பது அரசின் புதிய கட்டுப்பாடு. எப்போதுமே நிர்ணயிக்கப்படும் அளவுகளை கம்பெனிகள் கடைப்பிடிக்குமா என்ன? ஆக, அதே ஃபுளூரைடு பேஸ்ட்டுகள் கட்டுப்பாட்டோடு அனுமதிக்கப்பட்டன.நம்மூரின் ஃபுளூரைடு பேஸ்ட்டுகளைப் பற்றியும், ஹெர்பல் பேஸ்ட்டுகளைப் பற்றியும் இனி பார்ப்போம்.
டகால்டி டிராபிக்
கலிபோர்னியாவில் நம்மூர் நைட்டி போல பெண்கள் வீட்டுக்குள் அணியும் ஹவுஸ் கோட் போட்டபடி காரை டிரைவ் செய்வது குற்றம்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் கறுப்பு நிறக் காரை ஓட்டக் கூடாது என தடை உள்ளது.
(தொடர்ந்து
பேசுவோம்...)
படம்:
புதூர் சரவணன்
மாடல்: சோனாலி
அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்