கவிதைக்காரர்கள் வீதி



எப்பொழுதும் பொழுதென்னும்
பூனைக்குட்டியை
திருடிச் செல்லும்
நாயாகவே இருக்கிறது காலம்
பொய்மை   போற்றப்படுகிறது
புதுப்பித்துக்கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
உண்மை கவனிப்பாரற்றுக் கிடக்கிறது

ஒரு விதை நெல்லைப் போல்
மக்கும் தனிமையை
மயக்கும் இனிமையான
காதல் பொழுதினில்
அடிக்கடி சொல்லும் ஒரு பொய்
‘உன் சிரிப்பில் வானவில் தெரிகிறது’.
சொல்லாமலே விட்ட உண்மை,
‘உன் கண்ணீரில் தெரிந்த வானவில்’.

நீ
என்றோ மாட்டிவிட்டு
பின் கழற்றிப் போன
மோதிரத்துக்காக
இன்னமும் அழுகிறது
என் மோதிர விரல்
அது எந்த உலோகத்தில்
செய்யப்பட்டிருப்பினும்
என் உலகத்தில்
அது விலை உயர்ந்தது!
உன் கரங்கள் பட்ட பிறகு
அதற்கு ஒரு சுவாசமும்
சுவாசப் பையும்
முளைத்து விட்டது
பிடிதரம் அற்று
மடங்கி நிமிரும்
சுதந்திரம் அதற்குப்
பிடிக்கவில்லை
கால் விலங்குக்கு
அடம்பிடிக்கும்
மன நோயாளியைப் போல்
இன்னமும்
அழுதுகொண்டே இருக்கிறது
அந்த விரல்.

கு.திரவியம்