மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

கருவில் உருவான எதுவும் உலகில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. மலையும் கடலும் நதியும் இருக்கக்கூடும். அதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆகவே வாழும் வரை அன்பு செய்! அன்புதான் கடவுள்!

மிரா வானத்தை அண்ணாந்து பார்த்தாள். மேகமில்லை. பளிச்சென நீலம் தெரிந்தது. இளஞ்சூரியனின் கிரணங்கள் பட்டு செடிகள் சிலிர்த்துக்கொண்டிருந்தன. பூக்களின் இதழ்களில் அமர்ந்திருந்த பனித்துளிகளை ஒரு கந்தர்வ யுவராஜனைப் போல சத்தமில்லாது கவர்ந்து கொண்டிருந்தன, அந்தக் கிரணங்கள். பனிக்காலம் முடிந்து வசந்த காலத்தின் ஆரம்பம் போலிருந்த அந்தப் பொழுது உற்சாகம் தந்தது.

தோழிகளுடன் மிரா அந்தச் சிறு வனத்தை நோக்கி நடந்தாள். பேசிக்கொண்டே வந்தாலும் அவள் மனசு அந்த இயற்கையை அப்படியே உள்வாங்கத் தொடங்கியது. மிராவின் மனசு அவளது கண்கள் வழியே இயற்கையோடு பேசத் தொடங்கின. காலில் மிதிபடும் புற்களின் முனகலைக் கேட்டாள்.

அசையும் மரங்கள் காற்றோடு பேசுவது அவளுக்குத் தெளிவாகக் கேட்டது. பூவுக்குள் வண்டுகள் தேன் பருகும் இதமும் மகரந்தம் இடம் மாறும் நுட்பத்தையும் அவள் கவனிக்கத் தவறவில்லை. ஒரு சின்ன மரத்தின் கிளை, பாதி முறிந்தும் மீதி நசுங்கியும் தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கடந்தபோது நின்றாள்.

அந்தக் குட்டி மரம் மிராவிடம் என்ன சொன்னதோ தெரியவில்லை. ஆனால், மிரா அதனருகே சென்றாள். தனது பிஞ்சுக்கரத்தால் அந்த முறிந்த கிளையை முற்றிலுமாய் நீக்கினாள். ‘‘என்ன... வலிக்குதா? இனிமே வலிக்காது. சீக்கிரம் சரியாகிடும்’’ என்றாள். மெல்ல அந்த முறிந்த பகுதியில் தடவிக் கொடுத்தாள். அந்த மரம் தன் கிளைகளில் இருந்த அடர் பிங்க் நிற பூக்களை உதிரவிட்டது. அத்தனை பூக்களும் மிராவின் தலையில் பொழிந்தன. அது காற்றால் உதிரவில்லை...

மரமே அதை உதிர்த்து மிராவுக்கு நன்றி சொன்னது என்பது மிராவும் மரமும் மட்டுமே அறிந்த ரகசியம்.‘‘என்ன மிரா! இப்ப மரத்துக் கூடவெல்லாம் பேச ஆரம்பிச்சிட்ட போல..?’’ என தோழிகள் பரிகாசம் செய்தார்கள்.

மிரா நிதானமாக சொன்னாள்... ‘‘மரம் மட்டுமில்ல, இந்த பூமியில் இருக்கும் அத்தனை ஜீவனோடவும் என்னால பேச முடியும். அதுங்க என்ன சொல்ல விரும்புதோ அது எனக்கு
ரொம்பத் தெளிவா புரியும். அரைகுறையா முறிஞ்சிருந்த கிளையால அந்த மரம் வலியால் துடிச்சது. அதை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது. அதை நீக்கிவிடுனு உதவி கேட்டுச்சு. அதைத்தான் செய்தேன். இப்ப அந்த மரம் நிம்மதியா இருக்கு. இதோ... உன் காலுக்கு கீழ ஒரு தவளைக் குட்டி சிக்கிக்கிட்டு இருக்கு. நீ காலை எப்ப நகர்த்துவேன்னு அது காத்துக்கிட்டு இருக்கு’’ என்றாள், மிரா.

உடனே அந்த பெண் குனிந்து தன் காலைப் பார்த்தாள். மிரா சொன்னது உண்மைதான். ஒரு பச்சை நிறத் தவளைக் குட்டியின் கால், புற்களோடு சேர்த்து அவளின் விரலில் அழுந்திக் கிடந்தது. அந்தப் பெண் காலை எடுத்த நொடிக்கெல்லாம் துள்ளிக் குதித்தது தவளை. ‘‘எப்படி மிரா?’’ தோழிகள் ஆச்சரியமாய்க் கூவினார்கள். ‘‘எனக்குத் தெரியல. என் மனசுக்குள் எப்போதும் ஒரு மெல்லிய புல்லாங்குழல் ஓசை கேட்டபடி இருக்கு.

அந்த இசையின் வழியே என் மனம் நகரும்போது ஒரு மகா சக்தி என்னுள் இறங்கி, முற்றிலும் அது என்னை ஆக்கிரமிக்குது. ‘உனக்கு மிகப் பெரியதொரு வேலை காத்திருக்கு! தயாராகு... தயாராகு...’ன்னு சொல்லுது. அந்த மகாசக்தி என்னுள் இறங்கும்போதெல்லாம் நான் முற்றிலும் வேறு விதமான உலகத்துக்குள் பிரவேசிக்கிறேன். ஏகாந்தமான ஆழ்ந்த அமைதிக்குள் போயிடறேன்.

அப்போதெல்லாம் என் வீட்டுத் தோட்டத்தில் செடிகள், பறவைகள் பேசுவதெல்லாம் கூட எனக்குக் கேட்கும். இதெல்லாவற்றையும் விட மேசை நாற்காலிக்குக் கூட நம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சக்தி இருக்கான்னு தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ஒரு சின்ன குண்டூசி விழும் சப்தத்தைக்கூட அப்பொழுது ஒரு பேரிடியோசையாய் உணர்வேன். அதோ அந்த குன்று என்னை ‘வா... மிரா வா...’ன்னு காலைல இருந்து அழைச்சிக்கிட்டு இருக்கு’’ - மிரா சொல்வதை புரிந்தும் புரியாமலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்டபடி நின்றார்கள், தோழிகள்.‘‘நீ பேசறது எதுவுமே எனக்குப் புரியலடி’’ என்றாள் ஒருத்தி.

‘‘புரியறப்போ புரியட்டும் வாங்க அந்த குன்று மேல ஏறலாம்’’ என முன் நடந்தாள் மிரா.ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து குன்றின் உச்சியைத் தொட்டவர்கள், அந்த இடத்தைப் பார்த்ததும் ஆரவாரம் செய்தார்கள். விதவிதமான பூக்கள் பூத்துக் குலுங்கின. குட்டையான மரங்கள் ஏராளமான பழங்களைச் சுமந்து தாழ நின்றன. வண்ணத்துப் பூச்சிகளை பிடித்து வதைக்காமல் விளையாடிப் பறக்கவிட்டார்கள். பட்டாம்பூச்சியின் சிறகு தொட்டதும் விரல்களில் ஒட்டிக்கொள்ளும் அதன் வர்ணங்கள் அவர்களுக்குள் சிலிர்ப்பையும் சிரிப்பையும் விதைத்தது.

ஒரு குன்றில் ஒரு மரத்தின் அடியில் இருந்த பாறையில் அமர்ந்தாள் மிரா. தன் தோழிகளிடம், ‘‘நான் கொஞ்ச நேரம் தனியே இருக்கிறேன். நீங்கள் வெகுதூரம் போகாமல் இங்கேயே விளையாடுங்கள்’’ என்றாள்.

சரி என்று தலையசைத்த தோழிகள் ஒன்றாக விளையாட நகர்ந்தார்கள். மிரா மெல்ல கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தாள். வழக்கமாக அவளோடு அளவளாவும் ஒளி மெல்ல அவளைச் சூழத்தொடங்கியது. மிராவின் உதடு ‘கிருஷ்ணா... கிருஷ்ணா...’ என முணுமுணுத்தது. விளையாடிக் கொண்டிருந்த தோழிகளுக்கு ஒரு ஆசை. ‘நாம் ஏன் மிராவுக்கு ஒரு மலர் கிரீடம் செய்து சூட்டக் கூடாது?’ ‘‘சூட்டலாம்’’ என்றார்கள் ஒன்றாய்...

ஆளுக்கு ஒருபுறமாய் ஓடிப்போய் அழகிய மெல்லிய கொடிகளையும் பூக்களையும் சேகரித்து வந்தார்கள். அதை அழகாய் வளைத்து பூக்களைப் பொருத்தினாள், ஒருத்தி. மலர் கிரீடம் தயார். அதை எடுத்துக் கொண்டு மிரா இருந்த மரத்தடிக்குச் சென்ற போது மிரா தீவிர தியானத்தில் இருந்தாள்.

அருகில் சென்ற தோழிகள் அந்த மலர் கிரீடத்தை மிராவுக்குச் சூட்டிவிட்டு அமைதியாய் அவளின் கீழே அமர்ந்து கொண்டார்கள். தியானம் அவர்களையும் சூழ்ந்துகொள்ள, கொஞ்சம் கொஞ்சமாக மௌனத்தில் கரைந்தார்கள். அவர்களின் இமைகளும் தானாகவே சேர்ந்துகொள்ள மனசு நழுவி தியானத்தில் தோய்ந்தது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு கண் திறந்த மிரா தன் தோழிகளும் தன்னைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். எல்லோரையும் தட்டி எழுப்பினாள். ‘‘என்ன எல்லோரும் உட்கார்ந்துட்டீங்க’’ எனக் கேட்டாள்.‘‘உனக்கு கிரீடம் வச்சோம். அதை பார்த்துக்கிட்டே உட்கார்ந்துகிட்டோம்’’ என்றாள் ஒருத்தி.‘‘ஆமாம்’’ என அனைவரும் சேர்ந்து சொல்ல, தன் தலையைத் தொட்டுப் பார்த்தாள் மிரா. துள்ளிக் குதித்து எழுந்து போய் அருகிலிருந்த அல்லிக் குளத்தில் தன் முகத்தை பார்த்தாள். அணிவிக்கப்பட்ட மலர் கிரீடம் இளவரசியின் சிரசில் சிரித்துக் கொண்டிருந்தது. பூவாய் புன்னகை பூத்த மிரா, கண்களில் நன்றி மின்ன, தோழிகளின் கன்னம் கிள்ளினாள். ஒரு மகிழ்ச்சி ஆரவாரம் அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டது.

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கொண்டுவந்த உணவுகளைப் பகிர்ந்து உண்டார்கள். அருகில் இருந்த இன்னொரு குன்றிலும் ஏறிப் பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் மிரா மனதில் தோன்றியது. தோழிகளுடன் நடந்தாள்.உச்சியில் ஏறி நின்று சுற்றியும் பார்த்தாள். மனம் குதூகலித்தாள். ‘‘உயரே போகப் போக மனசு விசாலமாகிறது. தனக்கு கீழே உள்ளவற்றின் மீது ஒரு அன்பு மலர்கிறது. அதனால்தான் யாத்ரீகர்கள், துறவிகள் மலை உச்சிக்குச் செல்கிறார்கள் போலும்’’ - தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.

அப்போது ஒரு பேய்க்காற்று வீசியது. மிராவை உச்சியில் இருந்து இடறிவிட்டது.தோழிகள் என்ன நடக்கிறது என்பதே அறியாமல் கதற... மிரா உச்சியில் இருந்து கீழே மிக வேகமாய் விழத் தொடங்கினாள்.கூரிய கற்களும் முள் செடிகளும் நிறைந்த அந்த பள்ளத்தாக்கில் விழுந்தால் உயிரோடு மீள்வது கஷ்டம்தான்.‘‘காப்பாத்துங்க... காப்பாத்துங்க... மிரா... மிரா...’’ என்ற தோழிகளின் கதறல் மிக லேசாய் மிராவின் காதில் விழுந்தது. ஏதோ ஒரு விசைக்கு கட்டுப்பட்டது போல மிரா கீழே படுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தாள்.மிரா கண்களை மூடினாள். அந்த மகா சக்தியை நினைத்தாள்.

சற்றுக்கெல்லாம் பூ போன்ற மலர்க்கரங்கள் மிராவைத் தாங்கிக் கொண்டன. அவளை மெல்ல தரையில் இறக்கிவிட்டன. எதுவும் நடக்காதது போல எழுந்து நடந்தாள் மிரா. பதைபதைத்து
அழுதபடி ஓடி வந்த தோழிகள், மிரா இன்று புதிதாக அவிழ்ந்த மலர்போல நடந்து வருவதைப் பார்த்து ஆச்சரியமானார்கள்.‘‘மிரா இது எப்படி... அங்கிருந்து விழுந்த... கையக் காட்டு... காலைக் காட்டு... ஒண்ணும் ஆகலயே’’ - தொட்டு தொட்டுப் பார்த்தார்கள். ‘‘இவ்ளோ உயரத்துல இருந்து விழுந்தும் ஒண்ணும் ஆகலையா? அதிசயம் பா’’ என விழி விரித்தார்கள்.

மிராவை ஏதோ ஒரு அதிசய சக்தி காப்பாற்றி இருக்கிறது என்பது அவர்கள் அனைவருக்கும் புரிந்தது. மிரா அதையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போனாள். மறுநாள் பள்ளிக்கூடம் முழுக்க இதுதான் பேச்சு. ‘‘என்ன ஆச்சு மிரா?’’ என்று கேட்டவர்,களுக்கெல்லாம் மிரா தந்த பதில் ஒரு புன்னகைதான். அவர்களுக்கெல்லாம் தெரியாது மிராவை சந்திக்க ஒரு சிங்கம் காத்திருப்பது...
எங்கே?

வரம் தரும் மலர்வீட்டுக்கு வெளியே பணியிடத்திலும் படிக்கும் இடத்திலும் நமக்கு ஆயிரம் டென்ஷன் இருந்தாலும் வீடு என்பது நிம்மதி தரும் தாய்மடியாக இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு வீடுதான் தலைவலி. அம்மா, மனைவி, சகோதரர்கள், மகன், மகள் என சகலரிடத்தும் மனவருத்தங்கள்தான் நிம்மதி இழப்பைத் தருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் பரஸ்பர அவநம்பிக்கை.

விட்டுக் கொடுக்காத மனநிலை. இதை எல்லாம் நீக்கி, குடும்பத்தில் அமைதி கொண்டு வரும் சக்தி கனகாம்பரப் பூவுக்கு இருக்கிறது.குடும்பப் பிரச்னைகளால் நிம்மதி இன்றித் தவிப்பவர்கள் அரவிந்த அன்னைக்கு மூன்று தட்டுகள் நிறைய கனகாம்பரப் பூவை சமர்ப்பித்து தினமும் வேண்டிக்கொள்ள விரைவில் இல்லத்தில் நிம்மதி தவழும்!

குடும்பப் பிரச்னைகளை தீர்க்கும் கனகாம்பரம்!

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்