ஒரு சினிமாவின் புலன்விசாரணை
இந்தியாவில் ஒரு நல்ல படம் வெளிவருவதே ஒரு விபத்துதான். இது, ஒரு விபத்து பற்றிய நல்ல படம். உலகின் மிக முக்கிய தொழிற்சாலை விபத்துக்களில் ஒன்றான, போபால் விஷவாயுக் கசிவு பற்றி உணர்வு கசிய படைக்கப்பட்டிருக்கிறது
Bhopal: A Prayer for Rain. இந்தியாவுக்கு ‘விவசாயப் புரட்சி’ தேவை என ஆட்சியாளர்கள் முடிவெடுத்ததன் விளைவாக அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட், போபாலில் பூச்சிக்கொல்லி மருந்துக் கம்பெனியைத் திறக்கிறது; ஏழைகளுக்கு வேலை தருவோம் என்ற வாக்குறுதியோடு.
அந்தப் பகுதியில் ரிக்ஷா ஓட்டி வந்த திலீப், திடீரென பிழைப்பற்றுப் போனதால் அந்த நிறுவனத்தில் தொழிலாளி ஆகிறான். அவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அங்கே பாரம் தூக்கும் வேலை. அமெரிக்க முதலாளிக்கும் அவரின் கைக்கூலிகளுக்கும் லாபம் ஒன்றே குறிக்கோள்.
ஒரு சொட்டு விஷக்கசிவால் தொழிலாளி ஒருவர் இறக்கும்போதும் இரக்கம் இல்லை அவர்களுக்கு. பழுதான இயந்திரங்களை சரி செய்தால் கூட உற்பத்தி பாதிக்கப்படும் என நினைக்கிறார்கள். உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், அங்கிருக்கும் பாதுகாப்பின்மையை எழுதித் தீர்த்தும் யாருக்கும் உறைக்கவில்லை.
திலீப்புக்கு இந்தக் குளறுபடிகள் தெரிகிறது. ஆனால், பேச முடியவில்லை. அவன் தங்கையின் திருமணமே இந்த வேலையையும் நிறுவனத்தையும்தான் நம்பியிருக்கிறது. தொழிற்சாலையால் புகைக்காடாகிப் போன அந்த ஊரில், திடீரென கசிகிறது விஷ வாயு. திலீப் தங்கையின் கல்யாணத்தில் கை நனைக்க வந்தவர்கள் கண்ணைக் கசக்குகிறார்கள். சிலர் வயிற்றைப் பிடித்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் சரிகிறார்கள். போபால் முழுதும் பதற்றமாகிறது. எங்கும் கூக்குரல்.
மனைவி, உறவுகளை இழக்கும் திலீப், தன் கடைசிப் பையனைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். புகை விடுவதாயில்லை. கடைசியில் ஒரு ரயில் பாதையில் இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான உடல்களிடையே திலீப்பின் சடலமும் கிடக்கிறது. இன்றைய போபாலில், ஒரு பார்வையிழந்த நடுத்தர வயதுக்காரர் கைத்தடியால் நடந்து செல்கிறார். ‘போபால் இன்றும் தொடர்கிறது’ எனப் படம் நிறைகிறது.
நாட்டையே உலுக்கிய ஒரு நிஜ சம்பவத்தின் பின்னணியில் இருந்த உணர்வுபூர்வமான சிக்கல்களை ஆராய்கிறது இப்படம். ‘பன்னாட்டு நிறுவனங்கள் மக்களுக்கு வேலை கொடுக்கின்றன’ என அவற்றை உயர்த்திப் பிடிக்கும் அதிகார வர்க்கங்கள்,
அவற்றால் நேரும் ஆபத்துகளை கவனிக்கத் தவறுவது இந்தியாவின் சாபம். விபத்து நடந்தால், அதற்கு பொறுப்பேற்கவும், நிறுவனத்தின் தவறுகளை ஒப்புக்கொள்ளவுமே பெரும் போராட்டம் தேவைப்படுகிறது. இப்படியொரு நாட்டில் இப்படியொரு சம்பவத்தை 30 வருடம் கழித்தாவது சினிமா ஆராய்ந்திருக்கிறது என்றால் ஆச்சரியம்தான்!
- டி.ரஞ்சித்