நிச்சயம், இந்த 2015 ஹாலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டு. ‘ஜுராசிக் பார்க்-4’, ‘ஸ்டார் வார்ஸ்-7’, அர்னால்டின் ‘டெர்மினேட்டர்-5’ என பிரமாண்ட படங்கள் ரிலீஸ். அனைத்துக்கும் மேலே ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’ அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரவிருக்கிறது. பாண்ட் படம் வருகிறதென்றால் சும்மாவா? அதன் பரபரப்பு அப்டேட்ஸ் இதோ...
* 1960களில் ஷான் கானரி தொடங்கி ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் ஜேம்ஸ்பாண்டுகளாக கலக்கினாலும் தற்போதைய பாண்டான டேனியல் க்ரேக்தான், அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார்.
‘கேஸினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சொலஸ்’, ‘ஸ்கை ஃபால்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது நான்காவது ஜேம்ஸ் பாண்ட் படம். ‘‘21ம் நூற்றாண்டின் சிறந்த ஜேம்ஸ்பாண்ட்’’ என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே பாராட்டு பொக்கே கொடுத்திருக்கிறார் க்ரேக்கிற்கு!
* 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திரைக்கதை வேலை நடப்பதாகவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகவும் பல செய்திகள் கசிந்தன. அப்போது ‘பாண்ட் 24’ என்று தான் புதிய படத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். இப்போதுதான் அது ‘ஸ்பெக்டர்’ என்பது உறுதியாகியிருக்கிறது.
* ‘இதாண்டா கதை. இதை முடிஞ்சா எங்களை மாதிரி எடுத்துக் காட்டுங்கடா’ எனச் சொல்லி விடுவதே ஹாலிவுட் ஸ்டைல். அந்த வகையில் இயான் பிளமிங் எழுதிய ‘தண்டர்பால்’ நாவலின் தாக்கம்தான் ‘ஸ்பெக்டர்’. ஸ்பெக்டர் எனும் சர்வதேச பயங்கரவாத கும்பல் பற்றிய ரகசிய தகவல் ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது.
அந்த கும்பலை அவர் தேடிக்கொண்டிருக்கும்போதே அவர் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ.16 அமைப்புக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஸ்பெக்டர் கும்பல், எம்.ஐ.16 அமைப்பையே அழிக்கத் திட்டமிடுகிறது. அதை முறியடித்து, அந்த கும்பலை ஜேம்ஸ் பாண்ட் ஒழித்துக் கட்டுவதுதான் இந்தக் கதையின் சாரம்!
* முதல் ஜேம்ஸ் பாண்ட் சினிமாவாக 1961ம் ஆண்டில் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்திலும் இதே குளோபல் டெரரிஸ்ட் கான்செப்ட் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவன் எப்போதும் ஒரு பூனையோடுதான் வருவான். ஆக, இதிலும் பூனை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் சக்தி படைத்த கும்பல் என்பதால்தான், படத்தின் பெயரே ‘ஸ்பெக்டர்’ ஆகிவிட்டது!
* பல மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஸ்கை ஃபால்’ இயக்குநர் சாம் மென்டிஸ்தான் மீண்டும் இயக்குகிறார். கதாநாயகிகளுக்கும் கிளுகிளுப்புக்கும் வழக்கம்போல பஞ்சமில்லை. இப்படத்தில் டேனியல் க்ரேக்கிற்கு மற்றொரு ஜோடியாக நடிக்கும் மோனிகா பெலூச்சிக்கு வயது 50!
டேனியல் க்ரேக்கிற்கு வயது 46! ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிகவும் வயதான ஜோடி இதுதான். ‘ஸ்கை ஃபால்’ படத்திற்கு டேனியல் க்ரேக் 17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினார். ‘ஸ்பெக்டர்’ படத்திற்கு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதாம் அவர் சம்பளம்! லண்டன், மெக்ஸிகோ சிட்டி, ரோம், ஆல்ப்ஸ், மொராக்கோ ஆகிய இடங்களில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.
* பாண்ட் படம் என்றாலே அவரின் ஸ்பெஷல் கார் பற்றித்தான் முதல் தகவல் வரும். ரிமோட் கன்ட்ரோல், துப்பாக்கி எனப் புதுப்புது வசதிகளால் சாகசம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கார் இதிலும் உண்டு. ஆஸ்டான் மார்ட்டின் கார் நிறுவனம் இப்படத்திற்கென டி.பி 10 என்ற பெயரில் பிரத்யேகக் காரை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. என்னது... விலையா? அதெல்லாம் நமக்கெதுக்கு? மைலேஜ் கிடைக்காது பாஸ்!
மை.பாரதிராஜா