காப்பி



‘‘ஏங்க, நம்ம பையன் நேத்து பள்ளிக்கூடத்தில காப்பியடிச்சி மாட்டிக்கிட்டானாம்!’’ மனைவி சொன்னதும் எழிலரசனுக்கு கோபம் தலைக்கேறியது.தன் அம்மாவின் முதுகுக்குப் பின்னால், முகம் வெளிறிப் போய் ஒளிந்து கொண்டிருந்த மகன் பிரேம்குமாரை அழைத்தார். பயந்தபடியே  வந்தான் அவன். ஓங்கி ஒரு அறை விட்டார்.‘‘இன்னொரு முறை இந்த மாதிரி நடந்தா, தோலை உரிச்சிடுவேன் ராஸ்கல். பரீட்சைன்னா சொந்தமா படிச்சி எழுதணும்.

சொந்த மூளையை உபயோகிக்கணும். அடுத்தவன் பேப்பரைப் பார்க்குறது, புத்தகத்தைப் பார்த்துக் காப்பியடிக்கறதெல்லாம் என்ன பழக்கம்? இந்தத் திருட்டுத்தனத்தைக் கத்துக்கவா உன்னை ஸ்கூலுக்கு அனுப்பறேன்? உண்மையா படிச்சி பாஸ் பண்ணி அறிவாளியாகுறதா இருந்தா ஸ்கூலுக்குப் போ.

 இல்லாட்டி கொண்டு போயி போர்டிங்ல சேர்த்துடுவேன்!’’ - மகனை எச்சரித்த எழிலரசன், உதவியாளர் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் பேச்சை நிறுத்தினார். உதவியாளர் உற்சாகமாகப் பேசினார். ‘‘சார், இந்த ஆடியோ சி.டியில பிரபல எகிப்து நாட்டு இசையமைப்பாளர் இசையமைச்ச பாடல்கள் இருக்கு. இந்த டியூனையெல்லாம் யூஸ் பண்ணி தமிழ்ல பாட்டு போட்டீங்கன்னா, இழந்த மார்க்கெட்டை திரும்பப் பிடிச்சிடலாம்!’’ பிரபல இசையமைப்பாளர் எழிலரசனின் முகம் அதைக் கேட்டு பிரகாசமானது.

ஜெ.கண்ணன்