சீனு ராமசாமி ஃபீலிங் Proud!
‘‘எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்தபோது ஒரு கதை சொன்னார். உடனே திரைக்கதை, வசனத்தைத் தயாரிக்கச் சொல்கிற அளவுக்கு சுவாரஸ்யம். ரசிகர்கள் இப்போ விதவிதமான ரசனையில் இருக்காங்க.
அவர்களை ஒருங்கிணைக்க இன்னும் கவனமும், அக்கறையும் வேணும்... புதுசாகவும் இருக்கணும். இது எல்லாம் அமைந்த படைப்பாக ‘இடம் பொருள் ஏவல்’ படத்தைப் பார்க்கிறேன்!’’ - கண்களில் சந்தோஷம் மின்ன பேசுகிறார் இயக்குநர் சீனு ராமசாமி. தேசிய விருதால் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் ஒருவர்.
‘‘விஜய்சேதுபதி - விஷ்ணு கூட்டணி சேர்ந்தது எப்படி?’’
‘‘விஜய்சேதுபதிக்கு ஒரு போன்தான் செய்தேன். அதே பணிவோடு வந்தார். கதையைக் கேட்டதும் ‘நான் நடிக்க வேண்டிய கதைதான்’ என்றார். விஷ்ணுவும் அன்போடு வந்தார். திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமிக்கும் கதையில் நிறைவு இருந்தது. ஆக, துடிப்பாக உடனே ஆரம்பிக்கப்பட்டு முடிந்த படம்தான் ‘இடம் பொருள் ஏவல்’.
தலைப்பு, கதையின் ஆன்மா. எனக்கு, ‘கூடல் நகர்’, ‘தென்மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’ போல தலைப்பு நல்ல தமிழில் அமைய வேண்டும். கதையில் மூன்று வகையான கதாபாத்திரங்கள். இந்த மூன்று கதாபாத்திரமும் சங்கமமாகிற இடம்தான் ‘இடம் பொருள் ஏவல்’. மனித வாழ்க்கையின் ஆதாரமும் இந்த இடம்தான். இது நம் எல்லோருக் கும் பொருந்தும்.’’
‘‘உங்களின் அறிமுகம் விஜய்சேதுபதி. எப்படி அவரைக் கண்டுபிடித்தீர்கள்?’’
‘‘விஜய்சேதுபதி ஒரு தேர்ந்த நடிகன் என எனக்குத் தெரிய வந்தது, ‘தெ.மே. ப.காற்று’ ஷூட்டிங் ஆரம்பித்து மூன்று நாட்கள் கழித்துத்தான். ‘அடடா...’ என அதிசயித்து விட்டேன். இவருக்கு தமிழ் சினிமா ரத்தினக் கம்பளம் விரிக்கப்போகிறது எனத் தெரிந்துவிட்டது. சரியான கதைகளும், இயக்குநர்களும் அமைந்தால் நடிப்பில் புதிய திசையைக் காட்டுவார் எனப் புரிந்தது. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் உற்சாகப்படுத்தி, கொம்பு சீவி விட்டுக்கொண்டே இருப்பேன்.
‘போர் இல்லாவிட்டாலும் ராணுவ வீரன் தயாராக இருக்கிற மாதிரி, நீயும் தயாராக இரு’ எனச் சொல்லி வந்திருக்கிறேன். திடீரென்று ஒரு நாள் போன் செய்து, தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார்.
‘நீ அமீர்கான் மாதிரி வருவாய்’ என வாழ்த்தினேன். ‘தென்மேற்கி’ல் ஹீரோவானவர், நாலு வருஷத்தில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருப்பது சாதனை. அவருடைய நல்ல மனசு. என் படத்தில் அவருக்கு அரைப் பக்கம்தான் வசனம். இதுவரைக்கும் தராத நுட்பமான நடிப்பைக் கொடுத்து, அவர் மிகப் பெரிய கவனம் பெறுவார்!’’
‘‘விஷ்ணுவும், விஜய்சேதுபதியும் எப்படி இயல்பாக நடித்தார்கள்?’’
‘‘ரெண்டு பேரும் என் பிள்ளைகள். என் மீது பேரன்பு கொண்டவர்கள். நான் கோடு கிழித்தால் தாண்ட மாட்டார்கள். ‘நீர்ப்பறவை’யில் விஷ்ணு வெயிலில் காய்ந்தது எனக்குத்தான் தெரியும். வேறு யாராவதாக இருந்திருந்தால் ஓடிப் போயிருப்பார்கள். ‘நீர்ப்பறவை’ முடிந்தபிறகு ஒருநாள் போன் செய்து, ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாகச் சொன்னார்.
ஒரு நடிகன் கஷ்டங்களோடு நடிக்கத் தயாராகும்போதுதான், அடுத்து வரும் இளம்தலைமுறை இயக்குநர்கள் கண்ணில் படுகிறான். விஷ்ணு இப்படி பல்கிப் பெருகுவது எனக்குப் பெருமைதான். இதில் விஜய்சேதுபதிக்கு அப்படியே எதிர் கேரக்டர் விஷ்ணு. படம் முழுக்க பேசிக்கொண்டே இருப்பார். ரெண்டு பேரும் நல்ல பெயர் வாங்கப் போட்டி போடுவார்கள். சில காட்சிகளில் யார் பெஸ்ட் என கணிக்கவே முடியாது!’’‘‘இரண்டு கதாநாயகிகள் ஐஸ்வர்யா, நந்திதா... எப்படி?’’
‘‘ஐஸ்வர்யா புதுவிதமாக இதில் பட்டிமன்றப் பேச்சாளராக வருகிறார். மதுரைத் தமிழில் அவர் பேசி நடிப்பது ஒரு விதத்தில் புதுசு. இவர்தான் விஷ்ணுவிற்கு இணை. நந்திதா அருமையான பெண். முதல் நாள் நுழையும்போதே கேமராவைத் தொட்டுக் கும்பிட்டு வந்தது என் மனதில் இடம் பெற்று விட்டது. எந்தக் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் நிறைவு தரும்படி நடித்தார். மலைவாழ் பெண்ணாக, கம்யூனிஸ்ட் தோழரின் மகளாக, விஜய்சேதுபதியை நுண்ணுணர்வுகளால் கட்டிப் போடுகிற பெண்.
‘வெண்மணி’ எனப் பெயர் வைத்திருக்கிறேன். இந்தப் படம் அந்தப் பொண்ணுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத படம். இதில், வடிவுக்கரசி நடிப்பது தேசிய விருதுக்குரிய நடிப்பு. அவர் திறமை வெகுசில படங்களில்தான் தெரிய வந்திருக்கிறது. இதில் முழுவதும் தெரியும்.’’
‘‘யுவன்-வைரமுத்துவை சேர்த்துவிட்டீர்கள்..!’’
‘‘யுவன், லிங்குசாமியின் நல்ல நண்பர். அவரிடம், ‘யுவன் கிடைப்பாரா’ என்றேன். ‘கதை சொல்லுங்கள்’ என்றார். சொன்னதும் யுவன் ‘சரி’யென்றார். ‘வைரமுத்து சார் பாட்டு எழுதினால் உங்களுக்கு ஆட்சேபம் உண்டா..?’ என்றேன். ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என்றார். கவிஞருக்கு போன் செய்து, ‘யுவன் மியூசிக். நீங்கதான் பாடல்கள்’ என்றேன். ‘அப்படியா?’ எனக் கேட்டு போனை வைத்துவிட்டார்.
இரண்டு நாள் கழித்து கவிஞர் ஆபீஸிலிருந்து ‘கவிஞர் எழுதுவார்... இனி, ஆகவேண்டியதைப் பாருங்கள்’ என்றார்கள். கவிஞரும், யுவனும் இரண்டு தடவை சந்தித்தார்கள். காட்சிகளைப் பார்த்து கவிஞர் எழுத, யுவன் இசை அமைத்தார். இந்த இருவரின் இணைப்பு... காலத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.’’
‘‘இப்போது வாரத்திற்கு ஏழு படங்கள் வந்து, மக்களின் கவனம் பெறாமல் போகின்றன... ஏன்?’’
‘‘தமிழ் சினிமாவின் மோசமான காலகட்டம் இது. வணிகத்தில் ஏற்பட்ட கோளாறு. 80களில் பாலசந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், தேவராஜ் மோகன் மாதிரி எல்லா வகையான சிறிய பட்ஜெட் படங்களும் வந்தன. அவை பிஞ்சு, பூ, காய், கனி என்ற நாலு நிலைகளில் தியேட்டரில் தங்கி, இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் மக்களின் கவனம் பெற்று வெற்றி அடைந்தன.
ஆனால், இப்போது முதல் மூன்று நாட்களுக்குள் கூட்டம் வராவிட்டால், படம் தியேட்டரிலிருந்து அகற்றப்பட்டுவிடுகிறது. ஒரு வருஷ கடின உழைப்பில் உருவான சின்னஞ்சிறு படங்கள், மக்களைச் சந்திக்காமலேயே போய்விடுகின்றன. இதற்கு நாம் வருந்த வேண்டும். இது மாற வேண்டும். எல்லா பெரிய நட்சத்திரங்களும் ஒரு சிறிய படத்திலிருந்து தான் உருவாகிறார்கள். இதற்கு புதிய வழிமுறைகளை தயாரிப்பாளர்கள் உருவாக்க வேண்டும்!’’
-நா.கதிர்வேலன்