வேலை முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த விமலாவுக்கு இதயத்தில், ‘பக் பக்’! அவள் பயத்துக்குக் காரணம், பாபு. நல்ல வாட்ட சாட்டமான உடல், அடர்ந்த தலைமுடி, வெறித்த கண்கள் பாபுவுக்கு.
காலையில் வேலைக்குப் போகும்போதும், இரவில் வரும்போதும் தன்னை வெறித்துப் பார்க்கும் பாபுவைக் கண்டாலே விமலாவுக்கு அருவருப்பு, பயம்!‘‘கடவுளே... பாபு இப்போ அங்கே இருக்கக் கூடாது...’’ - வேண்டிக்கொண்டே நடந்தாள். வழக்கமாய் ஆபீஸ் ஆறு மணிக்கெல்லாம் முடிந்துவிடும். ஆள் நடமாட்டம் உள்ள அந்நேரம், பாபுவின் தொல்லை இருக்காது. ஆனால், இன்று லேட்டாகிவிட்டது. மணி ஒன்பது. பாபு, தெருவில் சவுண்ட் விட்டுத் திரியும் நேரம்!
தெருமுனை வரை வந்து அழைத்துப் போக இன்று விமலாவின் அப்பாவும் அண்ணனும் கூட ஊரில் இல்லை. நெருங்க நெருங்க, இதயம் பயத்தில் வேகமாய் அடித்தது. தெருமுனையில் தயக்கமாக நின்று, தலையை நீட்டிப் பார்த்தாள்.
ஆச்சரியம் + மகிழ்ச்சி! இன்று பாபுவைக் காணோம்! பயமின்றி நடந்தவள், பாபுவின் வீட்டைக் கடந்தபோது திரும்பிப் பார்த்தாள்... ‘போறப்பவும், வர்றப்பவும் வெறிச்சுப் பார்த்து, குரைச்சு, கடிக்க வர்ற அல்சேஷன் நாய் பாபுவை கட்டிப் போட்டிருக்காங்க... அப்பாடா!’ என்றாள் மனதுக்குள்!
கே.ஆனந்தன்